Pages

Friday, July 14, 2017

‘பிக்பாஸ்’ என்னும் ‘பன்றிக் காய்ச்சல்’


கமலஹாசன் என்னும் சினிமா நடிகர் ‘சர்ச்சைக்கு’ பெயர் போனவர்! தான் உலகுக்குத் தெரிய வேண்டும் என்கிற ‘அங்கீகாரப் பசி’ Rewgniion Hunger காரணமாக, ஏதாவது ஒரு கோரிக்கையை முன்நிறுத்தி நிர்வாணமாக ஓடுவது வெளி நாடுகளில் சகஜம்!
இந்த சித்தாந்தத்தை கொஞ்சம் நாட்களுக்கு முன் இறக்குமதி செய்து டெல்லியில் ‘வெள்ளோட்டம்’ விட்டார். 20 ஏக்கர் ஏழை விவசாயி ‘ஆடிக்கார் அய்யாக்கண்ணு’.
சினிமா வியாபாரம் படுத்துக் கொண்ட பிறகு, சின்னத் திரையில் ‘சின்னத்தனமான’ வியாபாரம் செய்து, தன் வக்கிர எண்ணங்களை வடித்துக்கொண்டிருக்கிறார் நடிகர் கமலஹாசன்.
விஜய் டிவி, அதன் தயாரிப்பு நிர்வாகம் கிறிஸ்தவர் கைக்கு போன பிறகு, இன்று மத விரோத, கலாச்சார விரோத, பழக்க வழக்க விரோத, நிகழ்ச்சிகளை தயாரித்து ‘சர்ச்சைக்கிடமான’ நிலையை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது!
வெளி நாடுகளில் பிரபலமாகி, தற்போது இந்தி டிவிக்களில் ‘சக்கை போடு’ போட்டுவரும், 100 நாள் ‘கம்யூன்’ வாழ்க்கை டிவி தொடர்  ‘பிக் பாஸ்’.
சமூகம் ஏற்றுக் கொள்ளாத, புறக்கணித்த, செய்கைகளை பத்துப் பன்னிரண்டு பேர், சேர்ந்து வாழ்வதாக, ஓரிடத்தில் வைத்து, அவர்களது படுக்கை அறையில், கேமராவை நுழைத்து, ‘வக்கிர’ எண்ணத்தை ஊக்குவிக்கும் காட்சிகளை, ‘சென்சார்’ இல்லாமல் காட்டும் நிகழ்ச்சிதான் ‘பிக்பாஸ்’.
இந்த தொடர் 100 நாட்கள் நடப்பதாக விளம்பர படுத்தி வசனம் எழுதி, ஒத்திகை பார்த்து (10 நாளிலேயே) ஷூட்டிங் முடித்து, இயல்பாக நடப்பதுபோல ‘பாவ்லா’ காண்பிக்கிறார்கள்.
 பிக்பாஸ்  அது ஒளிபரப்பாகும் அத்தனை காட்சிகளிலும் புதுப்புது சர்ச்சைகளை உருவாக்க வேண்டும். அதைப் பற்றியே மக்கள் பேச வேண்டும். அதன் டிஆர்பி ரேட்டிங் மேலே மேலே எகிர வேண்டும். விஜய் டிவியின் ‘கஜானா’ நிரம்பி வழிய வேண்டும். மக்களின் ‘ஏமாளித்தனம்’ தொடர்ந்து உயர்ந்து வரவேண்டும். இதுதான் இந்நிகழ்ச்சி தயாரிப்பாளர்களின் உள்நோக்கம்!
எது எப்படியும் தொலையட்டும்! உள்ளே அடிக்கும் ‘கூத்து’ பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். அது ‘ஒத்திகை பார்த்து மீண்டும் கேமராமுன் அரங்கேறும் கூத்து’.. வெறும் வாயில் அள்ளி அள்ளி அவலைப் போட்டு, ஊர்வாய் மூடாமல் பார்த்துக் கொள்ளும் குழாயடிச் சண்டை, டீக்கடை பெஞ்ச் கூத்து! அதற்கு நேரம் உள்ளவர்களும், ஆர்வம் உள்ளவர்களும் அதை பார்த்துக் கொள்ளட்டும்!
நமது கவலையெல்லாம், கமலஹாசனின் இரண்டு ‘திருவாய் மலர்ந்து’ அருளல் பற்றியதுதான்! ஒன்று தமிழ்நாட்டில் உணவுக்கு ஏன் மதத்தின் பெயரை வைத்தீர்கள்? சைவ உணவு அசைவ உணவு என்று எப்போது ஏன் எதற்காக பெயரிடப்பட்டது! என்பதுதான்!
இமயமலைக்கு தெற்கே இருப்பது தான் பாரதம் என்பது நமது முன்னோர்கள், நூல்கள், இதிகாசங்களின் அருள்வாக்கு! எம்பெருமான் ஈசனை வணங்குபவர்கள் சைவர்கள். அவர்கள் உண்ணும் உணவு சைவம் என்று சொல்லமுடியாது. காரணம் ஈசனை வணங்குபவர்களில் மாமிசம் உண்பவர்களும் உள்ளனர்!
உணவுப் பழக்கம் ஒரு மனிதனின் மனம், குணத்தை நிர்ணயிக்கும், மாமிச உணவே வீரத்தையும் அதிக சக்தியையும் தரும் என்பவன எல்லாம் நம்பிக்கைகளே! ஆக்ரோஷமான, வலிமையான இரண்டு மிகப் பெரும் காட்டுவிலங்குகள், காண்டாமிருகமும், யானையும் சாகபட்சிணி, கமலஹாசனுக்கு புரியும் பாஷையில் சொன்னால் சைவம்!
உடற்கூறு விஞ்ஞானம் கூட, மனித உடலின் ஜீரண உறுப்புக்கள், மரக்கறி உணவை செரிப்பதற்குண்டான, அமினோஅமிலங்களை மட்டுமே சுரக்கிறது என விளிக்கிறது!
உலகின் மிகப் பெரிய இயக்கம் ‘வேகன்’ 'Vegan' என்னும் மரக்கறி உணவு சாப்பிடுவோர் இயக்கம். இது பிரிட்டனில் 1800களில் தோற்றுவிக்கப்பட்டு உலகெங்கும் கோடிக்கணக்கான சைவ உணவாளர்கள் இருக்கிறார்கள். முஸ்லிம்கள் இதற்கு விலக்கல்ல!
தமிழ்நாட்டில் ‘கழகங்களின்’ கை ஓங்குவதற்கு முன்பு வரை சைவ உணவு ஓட்டல்கள் என்ற பெயர் வழக்கில் இல்லை! மரக்கறி உணவு வேண்டுவோருக்கென இருந்தது ‘பிறாமணாள் காபி கிளப்’புக்கள் தான்! அசைவத்துக்கு மதுரை முணியாண்டி விலாஸ். பின்னாளில் திராவிடர் கழகங்களின் பூணூல் அறுப்பு வெறியாட்டத்தினால் இங்கு பெயர்ப்பலகை மாற்றப்பட்டு, தமிழ் தேசிய வாதிகள் மற்றும் தனித்தமிழ் கழகக் காவலர்கள் ஆசியுடனே ‘சைவ உணவு ரெஸ்ட்ராண்ட்’கள் அறிமுகம் ஆக ஆரம்பித்தது! என்னுடைய இந்த கருத்து விவாதத்துக்கும் ஆராய்ச்சிக்கும் உரியது!
சரி! கமலஹாசனின் குற்றச்சாட்டுக்கு வருவோம்; எப்போதும் ‘மமதையில்’ இருப்பதால், மதம் அவர் மனதை உறுத்துவதால், உணவுப் பழக்கத்தில், வழக்கில் உள்ள ஒரு பெயரை மதத்துக்கானதாக எடுத்துக்கொண்டு, தமிழகம் நினைத்துப் பார்க்காத, ஏன் திராவிட இயக்கத்தினரே யோசிக்காத குற்றச்சாட்டை நம் மீது எய்திருக்கிறார்.
இரண்டாவதாக இப்போது அரசியல் பேசுகிறார். தமிழ்நாடு அரசில் ஊழல் மலிந்துவிட்டதாக புலம்புகிறார்! ‘ஜெ’ உயிரோடு இருந்தவரை ‘அரசியல் பற்றி வாய்திறக்காத’ இந்த வாய் சொல்லாளர், விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இவர் நம்பிய இவரது இஸ்லாமிய நண்பர்கள் தடைபோட்டு வெறுப்பேற்றியபோது மண்டியிட்டு, துவாசெய்து அவர்கள் சொன்ன இடங்களிலெல்லாம் ‘வெட்டி’ படத்தை வெளியிட்டு தன்னை காத்துக் கொண்டவர், ஊழல் பற்றி பேசி அரசியல் களத்தில் நுழைய எத்தனிக்கிறார்!
கமலஹாசனின் அரசியல் ஆசை, பிரவேசம் பற்றி நமக்கு எந்த கருத்துமில்லை! ஆனால் இந்த புது அவதாரம், வேஷம், அரிதாரம் நடிகனுக்கு புதிதில்லையென்றாலும், அரசியல் களத்தின் இன்றைய காலகட்டத்துக்கு புதிது! ரஜினிக்கு போட்டியாக, களத்தில் கமலஹாசன் குதித்தால், அவரது ரசிகன் குதுகலிக்கலாம்! இதில் நமக்கென்ன  இருக்கிறது!
பன்றிக்காய்ச்சல், சாதாரண உடல்வலி, உடல் உஷ்ணத்தோடு தான் ஆரம்பிக்கும்! சாதாரண மருந்து மாத்திரைகளுக்கு கட்டுப்படாது. உயிரைப் போக்கும் எந்த அறிகுறிகளையும் தராது! சரியான மருத்துவரிடம், சரியான நேரத்திற்கு செல்லாவிட்டால், கதை கந்தல்தான்!
விஷவித்துக்களை, தினசரி சாப்பிடும் தானியங்களோடு கலந்துவிடுவது, தேசவிரோத, கலாச்சார விரோத கும்பலுடைய வாடிக்கை! இந்த கும்பல்களின் ஆதிக்கம் பாரதத்தின் பலத் துறைகளிலும் பரவி இருக்கிறது! நரேந்திர மோடி அரசு இந்த ‘வைரஸ்களை’ அழிக்கும் பூச்சிக் கொல்லிகளை தயாரித்து அழித்து வருகிறது! ஆனால் வைரஸ்களும் தனது பெருக்கத்தை குறைக்க மறுக்கிறது!
இந்த தேசவிரோத கும்பலின் தற்போதைய தமிழ் ஊடகப் பணிமனை விஜய் டிவி. புதிதாக வந்த வாகனத்தின் சீப் மெகானிக், ‘வைரஸ் வியாபாரியாக’ கமலஹாசன் பொறுப்பேற்றிருக்கிறார்! இந்த வைரஸ்களை பார்த்து பழக்கப்பட்டுப்போன மாற்று மருந்து ஏற்கனவே ‘இந்துத்வா பணிமனையில்’ இருப்பில்(ஸ்டாக்கில்) உள்ளது!
எடுப்போம்! எய்துவோம்! அழிப்போம்! அகற்றுவோம்! 

காப்பாற்றுவோம் தமிழ்நாட்டை!

Monday, January 23, 2017

மெரினா போராட்டக்களத்திலிருந்து எனக்கு வந்த கடிதம்

மெரினா போராட்டக்களத்திலிருந்து இளஞர் ஒருவர் எனக்கு அனுப்பிய மெயில்
உங்கள் பார்வைக்கு........

என் சந்தேகம் உறுதியானது. நான் நேற்றே குறிப்பிட்டிருந்தேன் மாணவர்கள் கூட்டத்தில் தேசவிரோதிகள் ஊடுறுவல். Now it's confirmed.  இவர்கள்தான் இப்போது #கடற்கரை_கூட்டத்தை_கலைய_விடாமல்_பாதுகாத்து_வருபவை.

1.  மே 17 விடுதலைப் புலி ஆதரவு இயக்கம்.
2.  மக்கள் கலை இயக்க கழகம் எனப்படும் நக்சல் இயக்கம்.
3.  கூடங்குளம் பாதுகாப்பு இயக்கம் எனும் அந்நிய தேசத்திடமிருந்து நிதி பெறும் இயக்கம்.
4.  எஸ்.டி.பி.ஐ. எனப்படும் கொலை வெறிக்குத் தயங்காத இஸ்லாமிய ஜிகாதி இயக்கம்.
5.  மக்கள் அதிகாரம் என்னும் கம்யூனிஸ்ட் குரூப்.
6.  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு.
7.  பெயர் தெரியாத சில கிறிஸ்தவ அமைப்புகள்.

> இந்த இயக்கங்கள் எதற்கும் பொது ஜன ஆதரவு கிடையாது.

> இந்த இயக்கங்கள் அனைத்தும் ஜனநாயகத்தை ஒப்புக் கொள்ளாதவை, பன்முகத் தன்மைக்கு எதிரானவை.

> இந்த இயக்கங்கள் அனைத்தும் அந்நிய நிதியால் நடத்தப்படுபவை, இந்திய இறையாண்மைக்கு எதிரானவை.

இவைகள் இணைந்து...

தானே கூடிய தன்னார்வத் தமிழனின் கோரிக்கை நிறைவேற்றப்பட்ட பின்பும் அவர்களை கலையவிடாமல் தடுப்பது ஏன் ? 

அவசரச் சட்டம் தற்காலிகமானது என பொய் கூறுவானேன்..? 

ஜல்லிக்கட்டுக்காகக் கூடிய நல்லவர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது..!  கலைந்து செல்ல அறிவிப்பு விட வேண்டிய நேரம் இது..!

மத்திய மற்றும் மாநில உளவுத்துறை இப்போது செயலில் இறங்கி விட்டதாக தகவல். எந்த அசம்பாவிதமும் இன்றி அப்பாவி மாணவர்களை இந்த தீய அமைப்புகளின் பிடியிலிருந்து அரசு மீட்க வேண்டும். மாணவர்கள் தேசத்தின் வருங்காலம். அவர்கள் எந்த அமைப்பாலும் மூளைச்சலவை செய்யப்படுவது நல்லதல்ல. பெற்றோர், ஆசிரியர்கள், ஊடகங்கள் மற்றும் அனைவருக்கும் இதில் உண்மையான அக்கறை வேண்டும்.

Sunday, January 15, 2017

பொன்.ராதா கிருஷ்ணன்..மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை..


தன் கைய்யில் இல்லாத...துறை....தன் கட்டுப்பாட்டில் இல்லாத நீதி மன்றம்..
தன் சக்திக்கு மீறிய “டெல்லி லாபியிங்”
மக்களின் மீது அளவற்ற பாசம்
கடவுளர்களின் மீது அதீத பக்தி
இவைகள் மட்டுமே போதுமா ?
ஜல்லிக்கட்டு தடையை நீக்குவதற்கு?
போதாது என்கிறது இன்றைய சூழ்ச்சி உலகு..
பொன்னார் ஏன் மன்னிப்புகேட்க வேண்டும்?
“பீட்டாவும், திமுகவும், காங்கிரசும், கடைசியாக அதிமுகவும், செய்துவிட்டுபோன “ஜல்லிக்கட்டு கொலைக்கு” பாஜகவும் பொன்னாருமா பொருப்பேற்க வேண்டும்? இது எந்த நாட்டு நியாயம்?
தமிழ் கலாச்சாரம், இந்திய பண்பாட்டின் மீது போர் தொடுத்துக்கொண்டிருக்கும் சில தேசத்துரோகிகளின் “லாபியிங்”கில் வீழ்ந்த சுப்ரீம் கோர்ட் எடுத்த முடிவு,கடந்த 8 ஆண்டுகளாக தமிழக அரசுகள் வைத்த பலஹீனமான வாதத்தின் விளைவு..
இதற்கு பாஜகவும், பொன்னாரும் ஏன் பொறுப்பேற்க வேண்டும்?
நாம் நெஞ்சை நிமிர்த்திச் சொல்வோம் ஜல்லிக்கட்டடை மீட்டெடுக்க நாம் மட்டும்தான் உண்மையான, வீரச்சமர் புரிந்தோம்...என்பதை..
சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருக்க வேண்டிய கட்சிகள், தங்களை நீதிபதிகளாக பிரகடனம் செய்துகொண்டால்...அதைப்பற்றி கவலைப்படவேண்டியது மக்களே..நாமல்ல!
விரைவில் “ஜல்லிக்கட்டை கொன்ற” தமிழக மா பாவிகள் மக்கள் மன்றத்தில் தூக்கிலடப்படுவார்கள்..
ஜல்லிக்கட்டு காளை புதிய பொலிவோடு தாமரை தடாகத்திலிருந்து சீறீப்பாயும்..

ஸ்டாலினுக்கு ஒரு நடிகையின் கேள்வி?


அப்பாவை கைபிடித்து நடந்தது
தவறில்லை ஸ்டாலின்
அப்பாவை போல இப்போது நடப்பதுதான்
தவறு ஸ்டாலின்
’”ஜல்லிக்கட்டுக்கு மனுகொடுக்கச் சென்ற
தமிழக எம்பிக்களை ஏன் பார்க்கவில்லை மோடி?
நடிகைகளை பார்க்கமட்டும் நேரமிருக்கிரதாம்...
அதிலே கவுதமிக்கி முதலிடமாம்.....”
நக்கலான நயவஞ்சகக் கேள்வி!
நடிகைகள் என்றால் கடைச்சரக்கா?
வியாபார பொருளா?
வெளிச்சத்தில்கூட கௌவுரவம்
திமுகவில் இல்லையா ஸ்டாலின்?
காளைகளையும், கன்னியரையும் விட்டுவிடுங்கள்
என கமலஹாசன் சொல்கிறார்
நடிகர்களை நரேந்திர மோடியுடன்
இணைத்துவிடும் வேலையை நீங்கள் செய்கிறீர்கள்
இளமையில் போட்ட ஆட்டம்
ஏற்றுக்கொள்ள முடியும் ஸ்டாலின்.
63 இல் ஆடமுடியவில்லை என்பதால்
தப்பாட்டம் ஆடாதீர்கள் ஸ்டாலின்
எங்களுக்கு காவிரி தெரியாது...
ஜல்லிக்கட்டு தெரியாது...
சொல்லிக்கொடுத்தபடி
நடிக்கமட்டும்தான் தெரியும்
அதுவும் கேமராவுக்கு முன்பு..
உங்களைப் போல் “மல்டி ஃபேஸ் “
எங்களுக்கில்லை ஸ்டாலின்
திரிஷாவை வம்புக்கிழுத்தீர்கள்
ஆரியாவை விரட்டியடித்தீர்கள்.
கவுதமியை கலாய்த்தீர்கள்
ரஜ்னிகாந்த்தை ஏகடியம் பேசினிர்கள்
நாங்கள் வாங்கிக்கொடுத்த ஓட்டுக்கு
நன்றியுணர்ச்சி வேண்டாம்
நாவடக்கமாவது வேண்டுமல்லவா? ஸ்டாலின்
இருட்டிலே ஒருமுகம்..
வெளிச்சத்தில் வேறுமுகம்
இது அப்பாவோடு போகட்டும் ஸ்டாலின்
நீங்களும் தொடராதீர்!
நரேந்திர மோடியை தொடாதீர்!
அது உங்களுக்கு நல்லதல்ல! ஸ்டாலின்

Wednesday, January 11, 2017

என் ஊடகத்தனிப்பிறப்புகளுக்கு” மனம் திறந்த மடல்

அன்பிற்கினிய என் ஊடக”தனிப்பிறப்புகளுக்கு”--

ஆட்சியாளரைவிட..மன்னிக்கவும் ஏன் ஆண்டவைவிட..நான்தான் உயர்ந்தவன் என நினைக்கும் உங்களின் சிலருக்கு...இந்த “தற்குரியின்” உளம்திறந்த மடல்..

“பொங்கல் பண்டிகைக்கு மத்திய அரசு விடுமுறையை ரத்து செய்து விட்டது”--இனி விடுமுறை இல்லை...என “ஸ்குரோல்’--”தற்போது”...”பிரேக்கிங் நியூஸ்”---என பொளந்து கட்டிணீர்களே!

இதில் உண்மை இல்லை என தெரிந்தும் ஏன் போட்டீர்கள்?
இதுதான் “புது ஊடக தர்மமா?”

கடந்த 10 ஆண்டுகளாக “பொங்கல்” கட்டாய விடுமுறை லிஸ்டில் வரவில்லை என்பது அனைவருக்கும் தெரியுமல்லவா?
பின் ஏன் பொங்கலுக்கு விடுமுறை இல்லை “ என “பச்சை பொய்” சொன்னீர்கள்.?

மாநிலங்களில் உள்ள..“மத்திய அர்சு ஊழியர் நல ஒருங்கிணைப்புகுழு” உறுப்பினர்கள்தான் “மாநில விடுமுறையை “ தீர்மானிக்கின்றனர்..அதாவது அந்த 3 சிறப்பு விடுமுறை தினத்தை முடிவு செய்கின்றனர்..என்பது உங்களுக்கு தெரிந்தும் இதில் மோடியையும் பாஜகவையும் மத்திய அரசையும் பழித்து ஏன் உண்மையை மறைத்தீர்கள்? பொய்க்கு துணை போனீர்கள்?

2017 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் விடுமுறைகள் 24.06.2016 அன்று அறிவிக்கப்பட்டு விட்டடதும்,14,01 2017 அன்று பொங்கல் அன்று சனிக்கிழமை அரசின் பொது விடுமுறை வருவதால், தசரா அன்று இன்னொருநாள் கூடுதல் விடுமுறை எடுத்துக்கொள்ள்லாம் என 23.11.2016 அன்று கூடிய அரசு ஊழியர் குழு முடிவுசெய்த்தை நீங்கள் மறைத்து செய்தி வெளியிட்டது ஏன்?

இப்போது பொங்கலன்று கட்டாய விடுமுறை உங்கள் கூப்பாட்டினால் அறிவிக்கப்பட்டுவிட்டது..அதிலும் மத்திய அரசுக்கு சம்பந்தமில்லை..அரசு ஊழியர் ஒருங்கிணைப்பு குழுதான் இந்த மாற்றத்தையும் அறிவித்தது,,இதிலும் கூட மத்திய அர்சு பணிந்ததாக ஏன் பொய் செய்தி வெளியிட்டீர்கள்?..

ஒருநாள் அதிக லீவு கிடைத்த மத்திய அரசு ஊழியர்களுக்கு உங்களால் இப்பொது ஒருநாள் லீவை ரத்து செய்து அவரகள் வயிற்றெரிச்சலை ஏன் கொட்டிக்கொண்டீர்கள்?

நீங்கள் போட்ட “பரபரப்பு “ செய்தியை மத்திய அரசின் இணைய தளங்கலில் உறுதிசெய்து கொள்ளாத  “வீர”மனி”யும், சசியும், ஸ்டாலினும், வைகோவும், “”ஒப்பாரி அறிக்கை வெளியிட்டு இப்போது தலைகுனிந்து நிற்க நீங்கள் ஏன் காரணமானீர்கள்?

இவர்கள் மீது உங்களுக்கு என்ன கோபம்?

அத்தனை  தலைவர்களும் உண்மையை ஊர்ஜிதம் செய்துகொள்ளாமல் அறிக்கை வெளியிட்டு அவமானப்பட்டபோது, உண்மைதெரிந்து முழு ஆதாரத்துடன் அறிக்கை வெளியிட்ட அன்புமணி ராமதாஸ், டாக்டர் தமிழிசை, பொன் ராதா, போன்றோர் அறிக்கையை இருட்டடிப்பு செய்தத்துதான் உங்கள் பத்திரிக்கை தர்ம லீலாவினோதமா?

மோடி அரசை தூற்றுவதன் மூலம்தான் உங்கள் வாழ்க்கை நடக்கிறது என்றால்  உங்கள் ஜீவாதாரத்தை கெடுக்க நாங்கள் விரும்பவில்லை!

ஆனால் “பொய் செய்திகளை மட்டுமே “ வெளியிட்டு “சென்சேஷன்” நிகழ்த்த விரும்பினால்....இப்படி ஏற்கனவே செய்தவர்களின் அழிவினால்தான், நீங்கள் வந்து இருக்கீறீர்கள்...நீங்களும் அதையே செய்தால் ..உங்களுக்குப்பின்னால்...”அடுத்த ஆள்” ரெடியாக இருக்கிறான்..என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்..

“உயிரே போனாலும் உண்மையை போற்றுவோம்”  
”கோடி கோடியாய் கொட்டிக்கொடுத்தாலும், 
பொய்மைக்கு துணை போகோம்’

நன்றி!

என்றென்றும் நட்புடன்
எஸ்.ஆர்.சேகர்

Saturday, December 31, 2016

”சித்தி”--அதிமுக பொதுச்செயலாளரானார்---இரண்டாம் புரட்சித்தலைவி “சின்னம்மா”

அதிமுக உள்கட்சி விவகாரங்களில் நாம் மூக்கை நுழைக்கலாமா?
சசிகலா பொதுச்செயலாளர் ஆனதை நாம் விமர்சிக்கலாமா?
அதிமுக உடையக்கூடாது என்ற நாம் சசி பொதுச்செயலாளர் ஆனதை எப்படி விமர்சிக்கலாம்?.
என்ற கேள்விகள் சரியா?

யாரை பொதுச்செயலாளர் ஆக்கலாம் என்பது அதிமுக வின் உரிமை.ஆனால் அப்படி ஆனவர் அல்லது ஆக்கப்பட்டவர் யார் என்பதை விமர்சிப்பது யாருக்கும் உரிமை உண்டு.

அந்த வகையில் பொது தளத்துக்கு ஒருவர் வந்த பிறகு, அது பற்றி கருத்து சொல்வதற்கு எவருக்கும் உரிமை உண்டு என்பதாலேயே இந்த பதிவு.

உலக வரலாற்றிலேயே இல்லாத வகையில், ஒரு கட்சியின் பொதுக்குழு தீர்மானம் போட்டு, அந்த பொதுக்குழுவில் கலந்து கொள்ளாத ஒருவரை, வருந்தி, கஷ்ட்டப்பட்டு, பொதுச்செயலாளர் ஆகவேண்டும் என நிர்பந்தித்து, ( ஆம்1 அப்படித்தான் தீர்மானம் சொல்கிறது)...அதாவது “நீங்கள் வந்து தலைமை ஏற்கவேண்டும்”என பிரார்த்தித்து, அனைத்து பிரதிநிதிகளும் தீர்மான பிரதியை எடுத்துக்கொண்டிபோய், கட்டயப்படுத்தி, காலில் விழுந்து, கும்பிட்டு , மன்றாடி கேட்டுக்கொண்டு, அதற்காக மனமிறங்கி மான்புமிகு “சின்னம்மாவை”. இன்று அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக்கி மகிழ்ந்துள்ளனர்.

சீத்தாரம் கெசரியை, சட்டத்திற்கு புறம்பாக, அவர் இயற்கை உபாதை கழிக்க வேளியே சென்றபோது, தலைவர் பதவியிலிருந்து  நீக்கி, அதே கூட்டத்தில், “வெளிநாட்டு மருமகளை”, கட்சியின் தலைவார்க்கியது காங்கிரஸ் கட்சி.

கட்சியில் தகுதியான பலர் இருந்த போதும், நேரு குடும்பத்தினரை தவிர வேறு யாரும் அதற்கு தகுதி இல்லை என காங்கிரச் கட்சி முடிவு செய்து, சோனியா கந்தியை, காங்கிரஸ் தலைவர் ஆக்கியதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகளுக்கு மாறாய், எந்த தியாகமும் செய்யாத “ஜெ” உற்ற தோழி என்கிற மிகப்பெரிய தியாகத்திற்காக மட்டுமே, சசியை பொதுச்செயலாளர் ஆக்கியதை, அதிமுக தொண்டர் உள்ளிட்ட தமிழக மக்கள் “கசப்பாககவே” கருதுகின்றனர்.

இந்தவகையில் அதிமுகவின் வளர்ச்சிக்கு சசியின் தியாகம் என்ன என்ற திமுகவினரின் கேள்வியில், நியாயம் இல்லாமல் இல்லை.

“சசி” எத்தனை கிளைகளை உருவாக்கினார்?,எத்தனை உறுப்பினர்களை சேர்த்தார்?, எத்த்னை போராட்டங்களில் கலந்து கொண்டார்?  ஊழல் வழக்குகள் தவிர, கட்சியின் எத்தனை போராட்டங்களில் கலந்து கொண்டு  சிறை சென்றார்?.,என்ற சசி எதிர்ப்பாளர்களின் கேள்விகளில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

36, ஆண்டுகள் அவர் “அம்மாவோடு” இருந்தார்...அம்மாவிற்கு மூளையாக செயல் பட்டார்..அம்மவின் இன்ப துன்பங்களில்  அவர் பங்கு கொண்டார்...கட்சியின்  ஒவ்வொரு அசைவிலும்,அம்மாவோடு சசியின் முடிவுகளும் இருந்தன..என்ற “பொன்னையனின் வாதம், சசி தேர்வுக்கு பலம் சேர்ப்பதாக இல்லை.

இது ஒரு வாதமாக வைக்கப்பட்டால், கலைஞர் கருணாநிதியின் நிழலாக இருக்கும், “சண்முகநாதனுக்குத்தான்”, அடுத்த திமுக தலைவருக்கான தகுதி இருக்கிறது என்ற பத்திக்கை செய்திகளின் வாதமும் கணக்கில் எடுக்க வேண்டியிருக்கும்.

“ஜெ” என்கிற அதிமுக தலைவரின் பின்னணியில், “சசி” இருந்திருக்கிறார் என்பது மறுக்கமுடியாத உண்மை. அப்படியாயின் எந்த கட்சியிலும் இல்லாத “திடீர் நீக்கம்”, “திடிர் சேர்க்கை”, “திடிற் பதவி உயர்வுகள்”, சசியின் அறிவுருத்தலால்தான் நடை பெற்று இருக்க முடியும் என்று நம்ப வேண்டியிருக்கிறது.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எஸ்.வீ.சேகரின் கூற்றுப்படி, யாரும் தன் காலி விழுவதை “ஜெ” விரும்பியதில்லை, என்பது உண்மையானால், “ஜெ” காலில் விழவைக்கும் கலாச்சாரத்தை, உருவாக்கியது “சசிதான்” என்பது உறுதியாகிறது.

காரணம் “ஜெ” மரைவுக்குப்பிறகு, “மறந்து பொயிருக்க வேண்டிய “ “காலில் விழும் கலாச்சாரத்தை”, “சசி” மீண்டும் தொடர்வதன் மர்மம் என்ன?

“ஜெ”, அளவுக்கு “சசி” என்ன அப்படிப்பட்ட பெரிய தலைவரா? என்ற கேள்விகளும் பொது தளத்தில் கேட்கப்படுகிறது.

பொதுக்குழு தீர்மானத்தை “ஜெ”-எம்ஜியார், சமாதிகளில் வைத்து கண்ணீர்மல்கி “சசி” அதை ஏற்றுக்கொண்டது, 2012 ஆம் ஆண்டு “ஜெ” சசியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி, அதற்கு பிறகு சேர்த்துக்கொண்டபோது “சசி” எழுதிய மன்னிப்பு கடிதத்தில், “நான் இனி எந்த எம்.எ.ஏ, எம்.பி, மந்திரி பதிவிகளை ஏற்றுக்கொள்ளவோ ஆசைப்படவோ மாட்டேன்..உங்களுக்கு சேவை செய்வதை மட்டுமே என் வாழ்நாள் குறிக்கோளாக கொள்வேன் “ என்று எழுதிக்கொடுத்தது, உண்மை அல்ல என்பதற்கு சான்று என்றும், சசியோடு கட்சியிலிருந்தும் போயஸ் தோட்டத்திலிருந்தும் வெளியே அனுப்பப்பட்ட “மன்னார்குடி” குடும்பத்தர் அனைவரும்,  “ஜெ” இறந்ததும் அவரது உடலருகே நின்றதுமா “ஜெ” க்கு காட்டும் விசுவாசம் என்றும், “ஜெ” யின் மனசாட்சியாக இருந்த பல அமைச்சர்களும், எம்.பி, எம்.எல்.ஏ.க்களும் “ஜெ” பூத உடலருகே நெருங்கக்கூட அனுமதிக்க வில்லை என்றும் “புலம்பும்” உண்மை அதிமுக விசுவாசிகள்க்கு “சசியி” பதில் என்ன?

மறைந்த  எம்.ஜி.யாரின் நெருங்கிய நண்பரும், பறைந்த எம்.பி.யுமான வலம்புரி ஜான் அவர்கள் 29 ஆண்டுகளுக்குமுன் எழுதிய கட்டுரை ஒன்றை “தினமலர்” நாளிதழ் பிரசுரித்துள்ளது.

அதில் “சசிகலா” எம்.ஜி.யாரி ஆளுமல்ல..”ஜெ” யின் ஆளுமல்ல..சசிகலா...சசிகாலாவின் ஆள்..அவர் தனக்கு மட்டுமே விசுவாசமானவர்..என்று கூறியதை இன்றைய நிகழ்வுகள் உண்மையாக்கிவிட்டது என்பது அதிமுக அடிமட்ட தொண்டனின் குரலாக இருக்கிறது.

இதற்கு மேலும் வலுசேர்க்கும் செய்திகளை தினமலர் நாளிதழ் இன்று வெளியிட்டு இருக்கிறது.

மிசார வாரியத்தின் பலகோடி ரூபாய் டெண்டருக்கு சசியின் மன்னார்குடி குடும்பத்தார் போட்டிபோடுகின்றனர் என்பது சசியின் தலைமையில் அடுத்த4 ஆண்டுகளை தமிழ்நாடு எப்படி கடத்தும் என்ற கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

எது எப்படி இருந்தாலும் கட்சியின் அடிமட்ட தொண்டராக இருந்து பலதியாகங்களை செய்த தகுதிவாய்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன், செங்கோட்டையன், தம்பிதுரை,பன்னீர்செல்வம் ,  போன்ற மூத்த தலைவர்கள், பதவிக்காவும் பயத்தினாலும்  சசியின் காலடியில் சரணடைந்ததை எந்த தொண்டனாலையும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்பது உள்கட்சி புகைச்சலில் இருந்து புரிகிறது.

அதெல்லாம் சரி, இதுவரை “ரிமோட் கண்ட்ரோலாக” மட்டுமே இருந்த  சசியால், நேரடி அர்சியலில் பிரகாசிக்கமுடியுமா? ஆட்சியில் , நேரடி நிர்வாகத்தில், அனுபவம் இல்லத சசியால், முதலமைச்சர் பொறுப்பை (விரைவில் அப்படி ஒரு செய்தி வருமாம்)..ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டை ஆட்சி செய்யமுடியுமா>.என்பது அர்சியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

வருமானத்திற்கதிகமான சொத்து சேர்ப்பு வழக்கில் சசியின் தலைமேல் “கத்தி” தொங்கிக்கொண்டிருக்கிறது..தீர்ப்பு எப்போதும் வரலாம் என்றும்..அதில் தண்டனை உறுதி என்றும், சட்டவல்லுனர்கள் சொல்லுகிறார்கள்.

இந்த நிலையில் எம்.ஜி.யார் உருவாக்கிய அதிமுக என்னும் மாபெரும் இயக்கம், பல “காண்ட்ரவர்சிகள்” உள்ளடக்கிய சசிகலாவை, தன் பொதுச்செயலாளர் ஆக்கி, இன்னும் சிலவாரங்களில் முதலமைச்சராக முடி சூட்டி,தமிழகத்தை எந்த பாதையில் அழைத்துச்செல்லப்போகிரது ?

இன்னும் 4 ஆண்டுகள் முழுமையாக ஆளத்தகுதி பெற்ற அவ்வியக்கம், தற்போது செய்திருக்கும் “குளறுபடிகளால்” மீதமுள்ள ஆட்சியை இழந்து, திமுகவிற்கு இடங்கொடுத்து விடக்கூடாது, என்கிற கவலையும் அச்சமும், தமிநாட்டு மக்களிடம் நிலவுகிறது.

இந்தகவலைகள் உண்மையாகுமா?  அல்லது ஏதாவது “அதிசயம் ‘ நிகழுமா?

காலந்தான் பதில் சொல்லும்..
 

Monday, December 12, 2016

அண்ணா தி.மு.க. உடையக்கூடாது

"ஜெ"’க்கு பின்னால் தமிழ்நாட்டு ஆளும் கட்சியான அதிமுக என்கிற இரும்புக் கோட்டையின் எத்தனை கதவுகளில் வரும் வாரங்களில் விரிசல் விழுந்திருக்கும் என்று தெரியவில்லை! ஆனால் அதை ஏற்படுத்த முயல்பவர்கள் அதிமுகவிற்கு வெளியே உள்ளவர்களை விட அதற்குள்ளே இருப்பவர்கள்தான் அதிகம் என்று நான் நினைக்கிறேன்.

அதிமுக என்பது பாஜகவின் கூட்டுக் கட்சிதான். கொள்கை ரீதியாக இரு கட்சிகளுக்கும் இடையே பெரிய இடைவெளி கிடையாதுதான். அதிமுக வாக்காளர்களில் பெரும் பகுதி பாஜக ஆதரவாளர்கள் தான்!

ஆனால் தேர்தல் என்று வந்துவிட்டால் அதிமுக, பாஜகவிற்கு எதிராகவே செயல்பட்டு வந்திருக்கிறது ஒரு சில சமயம் தவிர.

‘தற்போது மிகச் சரியான சந்தர்ப்பம் அடைந்திருக்கிறது. வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜெ என்கிற மாபெரும் தலைவியை இழந்து அதிமுக தளபதி இல்லாத ராணுவம் போல, தாய் இல்லாத குழந்தை போல தடுமாறுகிறது.

இந்நிலையில் மத்தியில் வலுவானதொரு ஆட்சியும் மிகப் பலமான மோடி என்கிற பிரதமரும் கொண்ட கட்சியாக இருக்கும் பாஜக, அதிமுகவை கபளீகரம் செய்வது தானே நியாயமாக இருக்கும். ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரத் துடிக்கும் பாஜகவிற்கு இதை விட்டால் வேறு ஏது சந்தர்ப்பம் கிடைக்கும்?’ என நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது.

இப்படி சிந்திக்க வேண்டிய நீங்கள் அதிமுக உடையக்கூடாது என கவலைப்படுவது வியப்பாக இருக்கிறது என நினைப்பதும் எனக்கு புரிகிறது! 

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது நானும் மறைந்த ஜனா.கிருஷ்ணமூர்த்தியும் 
கே.என்.லட்சுமணனும் தேர்தல் பிரச்சாரம் முடிந்து சேலத்தில் தங்க நேரிட்டது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஜனாவிடம் ஒரு கேள்வி கேட்டார். ஐயா! ராஜீவ் காந்தியின் மரணம், பாஜகவின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய லாபம் அல்லவா?" என்றார்.

ஒருவரின் மரணத்தில் அரசியல் லாபம் பார்க்கும் கட்சியல்ல பாஜக" என்றார் ஜனா.
அதையே தான் தற்போது நான் சொல்கிறேன். அதிமுக என்பது தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு மக்களால் புறக்கணிக்கப்பட்டு பலமிழக்குமானால் அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை.

ஆனால் பதவி வெறி பிடித்தவர்கள், அதிமுகவின்   அரசியல் புரோக்கர்கள், ஜெவிற்கு எடுபிடியாக இருந்த வர்திகளாலேயே அதிமுக உடைந்து விடக்கூடாது என மக்கள் நினைக்கிறார்கள்.

திமுக என்கிற தேசிய விரோத, ஹிந்து விரோத, ஊழல் கட்சியை விரட்டவே தேசிய நோக்கமும் தெய்வபக்தியும் கொண்ட எம்ஜிஆர் அண்ணா திமுகவை உருவாக்கினார்.

மூகாம்பிகையின் தீவிர பக்தரான எம்ஜிஆர் திராவிட இயக்கத்தின் ‘கடவுள் மறுப்பு’ அஸ்திவாரத்தை தகர்த்தெறிந்தார்.

வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என கோஷமிட்டு, ஹிந்தி ஆதிக்கத்தை ஒழிக்கிறேன் எனச் சொல்லி தன் குடும்ப உறுப்பினர்களை மட்டும் ஹிந்தி படிக்க வைத்து, தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து தனிமைப்படுத்தப் பார்த்த திமுகவிற்கு முற்றும் எதிராக, எம்ஜிஆரின் கண்ணோட்டம் அகில இந்திய அளவில் இருந்தது.

எம்ஜிஆருக்குப் பிறகு ஜெ அடுத்த வாரிசாக அதிமுகவில் முடி சூடப்படவில்லை. எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு நாவலர் நெடுஞ்செழியன் இடைக்கால முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் அவரை  நிரந்தர முதல்வராக்காமல், ராஜீவ் காந்தி  அதிகாரத்தை பயன்படுத்தி எம்ஜிஆரின் மனைவி வி.என். ஜானகியை முதல்வராக்கினார். 18 நாள் கூட நீடிக்காத அவரது ஆட்சியை டிஸ்மிஸ் செய்து ஜனாதிபதி ஆட்சியை பிரகடனம் செய்து, அதிமுகவை ஜெ-ஜா என இரண்டாக உடைத்தது ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் கட்சி.

பாஜக மறைந்த ஜெவுக்கு இறுதி சடங்கிற்கு பீரங்கி வண்டியை டெல்லியிலிருந்து ஏர்லிப்ட் செய்தது. நாடாளுமன்ற இரு அவைகளையும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற ஒத்தி வைத்தது. இது எம்.ஜி.ஆருக்குக் கூட செய்யாதது.

மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் போட்டு பாராட்டுரை வாசித்தது, மாநில முதல்வராக அதிமுக விரும்புபவர் சுமுகமாக தேர்வு பெற உதவியது என்பது பாஜகவின் பெருந்தன்மை!

இந்நிலையில் ‘ஜெ’யின் எழுச்சி பல்வேறு போராட்டங்களில் தழும்புகளை பெற்றே வெற்றி கண்டது.

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு ஜாதியை பிசாசாக, பேயாக காண்பித்து ஆட்சியை பிடித்த திமுக, பார்ப்பனர்களை எதிர்க்கிறோம் எனச் சொல்லி தன் குடும்பத்து பையன்களுக்கு பார்ப்பனக் குடும்பப் பெண்களை மருமகளாக்கி மக்களை ஏமாற்றியது. திமுக -

ஜெ, அதிமுக பொதுச் செயலாளரானவுடன் திராவிடக் கட்சிகளின் பார்ப்பன எதிர்ப்பு பஸ்பமாகிப் போனது. இந்திய அரசியலில் திருப்புமுனை ஏற்படுத்திய அயோத்தி ராமர் ஆலய போராட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் போலி மதசார்பற்ற வாதிகளாகி ராமபிரானுக்கு கோயில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, ஜெ மட்டுமே ஒரே வீரப் பெண்மணியாக, ராமனுக்கு அயோத்தியில் கோயில் எழுப்பாது அரேபியாவிலா எழுப்ப முடியும்?" என ஆணித்தரமாக முழக்கியது திராவிட இயக்கங்களின் போலி மத சார்பற்ற தன்மையை குழி தோண்டிப் புதைத்தது. 

திமுக என்கிற தீய சக்தி ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்கிற எம்.ஜி.ஆரின் போராட்டத்தை அவருக்குப் பின் தலைமையேற்று நடத்தி அதில் தொடர்ந்து வெற்றி கண்டவர் ஜெ.

கடவுள் மறுப்பு, தேசிய எதிர்ப்பு, பிராந்திய வெறி, தமிழ் ஆதரவு என்னும் பெயரில் பிறமொழி எதிர்ப்பு, ஊழல், குடும்ப ஆட்சி என்னும் திமுகவின் நிலைப்பாடுகளை தகர்த்தெறிய உருவாக்கப்பட்டதே அதிமுக.

ஆனால் இந்த கொள்கைகள் முன்னிலைப்படுத்தப்பட்டு இவைகளை காக்க இனி அதிமுக முயலுமா? அல்லது எரிந்த வீட்டில் பிடுங்கிய வரையில் ஆதாயம் என்னும் வகையில் பதவிப் போட்டி, ஆட்சி வெறி, பண பலம், அரசியல் சகுனித்தனம் இவைகளில் சிக்குண்டு, அதன் இன்றைய தலைவர்கள் அதிமுகவை சீரழிக்கப் போகிறார்களா?

திமுகவிற்கு எதிராக மிகப் பெரிய வாக்கு வங்கியை எம்ஜிஆர்  உருவாக்கினார். அவருக்குப்பின் ஜெ அதை இன்னும் அதிகப்படுத்தினார். தமிழக வரலாற்றில் எம்ஜிஆருக்குப் பிறகு 2வது முறையாக மீண்டும் ஜெ தற்போது ஆட்சியைப் பிடித்தார். இது தமிழக மக்கள் தேசியத்திற்கும் தெய்வீகத்திற்கும் கொடுத்த ஆதரவு. இந்த கோடிக்கணக்கான வாக்காளர்களின் உள்ளக் கிடக்கையை அதிமுக தலைவர்கள் ஒற்றுமையாக இருந்து பூர்த்தி செய்ய வேண்டும்.

திமுகவிற்கு எதிரான ஒரு பிரம்மாண்டமான சக்தியான அதிமுகவானது, காங்கிரஸ், திமுக, அரசியல் புரோக்கர்கள் சூழ்ச்சியில் சிக்கி உடைந்து சிதறிப் போய்விடக் கூடாது.

மக்கள் ஆதரவில்லாமல் அதிமுக மடியுமானால் அது வேறு விஷயம். ஆனால் உட்கட்சி பூசலால் உடைந்து சின்னாபின்னமானால் அது எம்ஜிஆருக்கும் ஜெவுக்கும் செய்யும் துரோகம்.

அது தமிழ்நாட்டு வாக்காளர்களின் நம்பிக்கைக்கு செய்யும் துரோகமுமாகும்.
எஸ்.ஆர்.சேகர்.