Pages

Friday, May 6, 2011

ராகுலை நம்பி இளைஞர்கள் போகலாமா?

இளைஞர்களே... அரசியலுக்கு வாருங்கள்! எந்த ஊருக்கு போனாலும், ராகுல் இந்த அழைப்பை சொல்லத் தவறுவதில்லை. அவர் உண்மையிலேயே அழைக்கிறாரா? இவரை நம்பி இளைஞர்கள் போகலாமா? இப்படி நம் மனதில் கேள்விகள் எழுவது இயற்கைதான்!

மத்திய பிரதேசத்தில், மீனாட்சி நடராஜன் என்ற தமிழரை, எம்.பி., ஆக்கவில்லையா... தமிழகத்தில், இளைஞர் காங்கிரசுக்கு, 10 சீட் பெற்றுத் தரவில்லையா... ராகுலை நம்ப, இதற்கு மேல் ஆதாரம் வேண்டுமா? இது எந்த அளவுக்கு உண்மை? 

ராகுலே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம், விடிவெள்ளி, எதிர்காலம் என ஊடகங்களும், பத்திரிகைகளும் போட்டி போட்டு, மாறி மாறி, "ஏற்றி விட்ட உசுப்புகளுக்கு' இவர் உகர்ந்தவர்தானா, தகுந்தவர்தானா? 

வறண்ட இந்தியாவை, வளர்ந்த இந்தியாவாக மாற்ற, பல நீர் மேலாண்மை ஜாம்பவான்கள், நதிகள் இணைப்பு என்ற திட்டம் தீட்டி கொடுத்ததை, வல்லவர் வாஜ்பாய் அமல் செய்ய நினைத்தபோது, ஆட்சி மாறியது. ஒரே வீச்சில், ஒரே பேச்சில், நதிகள் இணைப்புக்கு, ராகுல் தடை சொன்னபோது, அவரது முதிர்ச்சியின்மையின் முதல் வெளிப்பாடு. 

ஏழை இந்தியா, பணக்கார இந்தியா என இந்தியா இரண்டாக உள்ளது என்றார் ராகுல். இதற்கு யார் காரணம்? 50 ஆண்டுகள் தொடர்ந்து ஆண்ட உங்கள் குடும்பமா என்றபோது, பதில் சொல்ல வார்த்தையின்றி தவித்தது இரண்டாம் வெளிப்பாடு.

கேரள முதல்வர், "அச்சுவை' வயதை காரணம் காட்டி இகழ்ந்தார். தனது கூட்டணியில், 86 வயது கருணாநிதியை வைத்துக் கொண்டு... இது, மூன்றாம் வெளிப்பாடு.

இது ஒருபுறமிருக்க, அழைக்கும் இளைஞர்கள் உழைக்க, இவரால் உகந்த இடம் தர முடிந்ததா? கடந்த, 2009 லோக்சபா தேர்தலில் மத்திய அமைச்சரவையை தீர்மானிக்கும் இடத்தில் இவர் இருந்தார். இந்த வல்லமையை இவர் எப்படி பயன்படுத்தினார்? யார் யாருக்கெல்லாம் சீட்டு கொடுத்தார்... அமைச்சர் பதவி கொடுத்தார்... பார்த்தோமென்றால், இவர் மீது இருக்கும் பரவசங்கள் பறந்து போகும்.

காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற, 208 பேரில், 78 பேர் பரம்பரை குடும்ப அரசியல்வாதிகள். இதில், 19 பேர், குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அமைச்சர் எம்.எல்.ஏ., எம்.பி.,யாக உள்ளனர். இவர் டிக்கெட் கொடுத்த இளைஞர் காங்கிரசை சேர்ந்த, 30 வயதிற்குட்பட்ட, 33 எம்.பி.,க்களுக்கும், முழு அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 

மன்னராட்சி மறைந்தது உண்மைதான். ஆனால், மன்னராட்சியில் இருந்த வாரிசு அரசியல், ஜனநாயகத்திலும் தொடர்கிறது. இப்பிரிவிற்கு காங்கிரஸ் தலைமை வகிக்கிறது. 

இந்திராவிற்கு பேரனாகவும், ராஜிவுக்கு மகனாகவும் பிறக்காமல் போயிருந்தால், காங்கிரசில் இவர் இருக்கும் இடம் யாருக்கு தெரிந்திருக்கும்?

Icon

Tuesday, May 3, 2011

குறைகள் மட்டும் தானா, நிறைகளே இல்லையா?

"ஐந்து ஆண்டு கால, தி.மு.க., ஆட்சியில் நிறைகளே இல்லையா? குறைகள் மட்டும் தான் கண்களுக்கு தெரிகிறதா' என, பலதரப்பில் இருந்தும் கேள்விகள்? எழுகின்றன. வேறு எவரும் செய்ய முடியாத, தி.மு.க.,விற்கே உரித்தான சில சாதனைகள் இக்கேள்விக்கு பதிலாய் கண்முன்னே விரிகிறது.

நான் குறிப்பிடும் திட்டத்தில், உண்மையான பயனாளிகள் எவ்வளவு பேர் பயன் பெற்றனர் என்பதை விட, இத்திட்டத்தை எப்படி திண்மையோடு, தி.மு.க., செய்திருக்கிறது என்பது தான் பாராட்டுதலுக்குரிய விஷயம்.கடந்த ஐந்தாண்டுகளாக, முதியோருக்கான நலத்திட்ட உதவித்தொகைகளை, 10 லட்சத்து, 45 ஆயிரம் பேருக்கு வழங்கி வருகிறது. அதாவது, 10.45 லட்சம் பயனாளிகளை கண்டுபிடித்து, திட்டத்தில் சேர்த்து உதவி வருகிறது. இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? இதே திட்டத்திற்கு, கடந்த ஜெயலலிதா ஆட்சியில், பயனாளிகள் எண்ணிக்கை வெறும், 63 ஆயிரம் மட்டுமே!

இந்திரா காந்தி தேசிய விதவைகள் பென்ஷன் திட்டம், இந்திரா காந்தி தேசிய ஊனமுற்றோர் பென்ஷன் திட்டம், மாநில முதியோர் பென்ஷன் திட்டம், மாற்றுத் திறனாளிகள் உதவித் திட்டம், ஆதரவற்ற விதவைகள் உதவித் திட்டம், ஆதரவற்ற விவசாயக் கூலிகள் உதவித் திட்டம், 50 வயதாகியும், திருமணமாகாத ஆதரவற்ற பெண்கள் பென்ஷன் திட்டம் என, திட்டங்களின் பட்டியலும் பெரியது.

இதில், இந்திரா காந்தி தேசிய முதியோர் பென்ஷன் திட்டம், 5.1 லட்சம் பயனாளிகள். விதவைகளுக்கான பென்ஷன் திட்டம், 30 ஆயிரத்து 859; உடல் ஊனமுற்றோர் நிதி உதவி, 3.4 லட்சம் பேர் என, பயன்பெற்றோர் பட்டியலும் பெரிதாய் நீள்கிறது.

இத்தனை திட்டத்திற்கும், ஆட்களை கண்டுபிடித்து, கட்சிக்கு ஓட்டு சேர்ப்பது மாதிரி சேர்த்து, அவர்களுக்கு நிதியுதவி செய்வது பாராட்டுக்குரியது. இன்னொருபுறத்தில், அரசின் உதவிகளை பயன்படுத்தி, ஒரு வலுவான ஓட்டு வங்கியையே உருவாக்க முடியும் என்பதை, தி.மு.க.,விடம் மற்ற கட்சிகள் கற்றுக் கொள்ள வேண்டும்

இது போலவே, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நடத்தியது தான் பெரும் சாதனை. இதில் என்ன பெருமை இருக்கிறது? இதனால், தமிழுக்கு என்ன நன்மை விளைந்தது? கோவைக்கு தான் கட்டமைப்பில் என்ன வியத்தகு வளர்ச்சிகள் ஏற்பட்டன? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கலாம். இக்கேள்விகளுக்கெல்லாம், திருப்திகரமான பதில் இல்லை தான்.

ஆனாலும், அரசு செலவில் தி.மு.க., நடத்திய, பிரமாண்டம் வியக்க வைத்தது. திரும்பிய திசையெல்லாம் மக்கள் வெள்ளம். ஏதோ ஒப்புக்கு ஆராய்ச்சி, ஒப்புக்கு கருத்தரங்கம் என்றாலும் கூட, "எல்லா புகழும் கலைஞருக்கே' என்ற நெடியே தூக்கலாக இருந்திருந்தாலும் கூட, தமிழகத்தையே கோவையில் கூட்டி விட்டனர்.

அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட, குறிப்பாக, ஜெயலலிதா கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்று கருணாநிதியிடம் உண்டு... முதலமைச்சர் வருகிறார் என்ற காரணத்திற்காக போக்குவரத்தை நிறுத்தி, நெரிசல் ஏற்படுத்தி, பொதுமக்களின் பொல்லாங்கை, வயிற்றெரிச்சலை கருணாநிதி கொட்டிக் கொள்ளவில்லை.

உள்ளாட்சித் துறையிலிருந்து, பின்னாளில் துணை முதல்வராக உயர்ந்த அவரது புதல்வர் ஸ்டாலினும், இவ்வகையில் தந்தை வழியே பின்பற்றினார். அதிக படாடோபமின்றி, ஆடம்பரம் இன்றி, இருந்தது மட்டுமல்ல, தன் வருகையால் பொதுமக்களுக்கு, "டார்ச்சர்' கொடுக்கவில்லை.

அமைச்சர்களை சந்திப்பது, மன்னர்களை சந்திப்பது போல் சிரமமானது என்பது தமிழகத்தில் மட்டும் தான். ஆனால், வாஜ்பாய் காலத்தில், பிரதமரை சந்திப்பதே மிக எளிதாக இருந்தது. தமிழக முதல்வரை சந்திப்பது குதிரைக் கொம்பானது என்ற நிலையை மாற்றிய பெருமை கருணாநிதிக்கு உண்டு.அடுத்து வருபவர்களும், இந்த பெருமைக்குரியவர்களாக இருந்தால், தமிழ் மக்களுக்கு நல்லது தானே!

Monday, May 2, 2011

கருணாநிதியும், தர்மபுத்திரனும்...

"ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில், மத்திய அரசின் செயல்பாடுகள், தி.மு.க., விற்கு சங்கடத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, கருணாநிதி அளித்த பதில்,"மகாபாரதத்தில், தர்மருக்கு ஏற்பட்ட சங்கடம் தி.மு.க.,விற்கு ஏற்படாது(தி.மு.க., என்பதும், கருணாநிதி என்பதும் ஒன்றுதானே) அந்த சங்கடம் என்னவென்று, நான் விவரிக்க விரும்பவில்லை' என, சொல்லியிருக்கிறார்.


தருமனுக்கு ஏற்பட்ட சங்கடம் என்ன? எனக்கு தெரிந்து பாரதத்தில் சொல்லப்படுவது இரண்டு. ஒன்று, கவுரவர்களின் தலைநகரான ஹஸ்தினாபுரம். அதாவது, இன்றைய டில்லி. அங்கு சூதாட வருமாறு பாண்டவர்களுக்கு துரியோதனன் அழைப்பு விடுக்கிறான். அன்றைய ராஜ மரபுப்படி, சூதாட்ட அழைப்பை ஒரு அரசன் விடுத்தால், அதை மற்ற அரசன் ஏற்க வேண்டும் என்பது விதி.


சகுனியின் சூதாட்டத்தில் யாரும் வெற்றி பெற முடியாது என்பதும், சூதாட்டத்தை வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் வைத்திருக்கிற பாண்டவர்கள், நிச்சயமாக தோல்வியுறுவர் என்பதை தெரிந்த துரியோதனன், தர்மபுத்திரனை நயவஞ்சமாக ஹஸ்தினாபுரத்திற்கு அழைக்கிறான். அங்கு வந்த, தர்மபுத்திரன் தோல்வியுறுகிறான்.


காங்கிரஸ், டில்லிக்கு தங்களை வஞ்சகமாக அழைத்து, "ஸ்பெக்ட்ரம்'சூதாட்டத்தில் ஈடுபடுத்தி வழக்கு, விசாரணை, கைது, பத்திரிகைகளில் அவப் பெயர், தேர்தலில் தோல்வி ஏற்படுத்தும் முயற்சி இவைகளை செய்கிறது. இந்த முயற்சிகளில் காங்கிரஸ் வெற்றி பெற முடியாது.
தி.மு.க.,விற்கும், கலைஞர் "டிவி'க்கும், தயாளு, கனிமொழி, கடைசியாக ராஜாவிற்கு சங்கடங்களை ஏற்படுத்த முடியாது ---என, டில்லிக்கு இதன் மூலம் சொல்கிறாரா? மகாபாரத கதை மூலம் காங்கிரசிற்கு எச்சரிக்கை விடுகிறாரா?
இரண்டாவது... சூதாட்டத்தில் பணயம் வைத்து தோற்ற பின், இழுத்து வரப்பட்ட திரவுபதி துகிலுரியப்படும்போது, தர்மபுத்திரரும் அவரது தம்பிமார்களும் வாளாவிருக்கின்றனர். தருமனுக்கு ஏற்பட்ட இந்த சங்கடத்தை கருணாநிதி குறிப்பிட்டிருக்க முடியாது.


ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை விசாரிக்கும் பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுவின் தலைவர், பா.ஜ., வை சேர்ந்த முரளி மனோகர் ஜோஷி. மொத்தமுள்ள, 21 உறுப்பினர்களில், காங்கிரசிற்கு ஆதரவாக 10 பேர், எதிராக 11 பேர். அந்த எதிர் ஓட்டில் உத்தரபிரதேசத்தில் எதிரும், புதிருமாக உள்ள முலயாம்சிங்கின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஒரு உறுப்பினர்களை காங்கிரசிற்கு ஆதரவாக மாற்ற பெரும் விலை பேசப்பட்டது. 
அதன் விளைவு, வரைவு அறிக்கை நிராகரிக்கப்பட்டு, அடுத்த தந்திரம் அரங்கேறியுள்ளது.


"தந்திர பூமி' என்ற தலைப்பில், டில்லியைப் பற்றி நாவலாசிரியர் இந்திரா பார்த்தசாரதி ஒரு நாவல் எழுதியிருந்தார். அந்த, "தந்திர பூமியில்' தற்போது, தி.மு.க.,வின் ராஜதந்திரம் தடுமாறி நிற்கிறது. இப்படிப்பட்ட தந்திர பூமியின் நிஜாம்கள் தனக்கெதிராக நகர்த்தும் காய்களை, தவிடு பொடியாக்குவேன் என்பது மட்டும், கருணாநிதியின் செய்தியாக இருக்க முடியாது.


இவர் தர்மனானால், ஹஸ்தினாபுரம் டில்லி ஆனால், காங்கிரஸ், துரியோதனனும், கவுரவர்களும் தானே! தர்மபுத்திரருக்கு ஏற்பட்ட சங்கடம் தனக்கு ஏற்படாது என இவர் கூறுவதன் மூலம், இவரை தர்மபுத்திரருக்கு ஒப்பிட்டுக் கொள்கிறார்.


இதிகாச புராணங்களை எட்டிக் காயாய் வர்ணித்தாலும், அக்கதாபாத்திரங்களில் தன்னை உவமானப்படுத்தி, அடி மனதில் சந்தோஷம் காண்கிறார். 

கடுமையான சிக்கலில் மாட்டித் தவிக்கும் இவருக்கும், இவர் குடும்பத்தினருக்கும், கட்சிக்கும் ஒரு ஆறுதல், இவர், தன்னை தானே தருமபுத்திரரோடு ஒப்பிட்டு கொண்டது மட்டும் தான்.

Friday, April 29, 2011

மக்கள் பணம்; மக்களுக்கு வர வேண்டிய பணம்

தாய்மார்களுக்கு சத்தான உணவு கிடைக்காததால், இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு சத்து குறைந்த குழந்தைகளாக பிறக்கின்றன. ஐந்து வயதுக்குள் உள்ள குழந்தைகளில் சரிபாதி குழந்தைகள், குறைவான எடையுள்ள குழந்தைகளாக உள்ளன.

இந்நிலையில், காமன்வெல்த் போன்ற மிக அதிகமான செலவு செய்த விளையாட்டுக்கள் நம்நாட்டுக்கு தேவைதானா என்ற கேள்வி எழுகிறது. விளையாட்டு போட்டிகளால், ஊரின் கட்டமைப்பு உயருகிறது. வெளிநாட்டுக்காரர்கள் வருவதால், சுற்றுலா பெருகுகிறது. ஆயிரக்கணக்கானவர்களுக்கு வருமானம் தரும் தொழிலில் சுற்றுலா பெரும்பங்கு வகிக்கிறது.
சுற்றுலாவால் நாட்டின் பெருமையும், மரியாதையும் உயருகிறது. இவ்வளவையும் தரவேண்டியதை, நடைபெற்று முடிந்த, "காமன்வெல்த் விளையாட்டு' தந்ததா, என்பதும் ஒரு கேள்வி. சரி,"2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கு வருவோம். மேலே சொன்ன நலிந்தவர்களை தூக்கிவிட, மக்கள் நல அரசுக்கு தேவை நிதி. அதை அள்ளித் தருகிற, "அட்சய பாத்திரம்'மாக, "2ஜி' இருந்தது. ஆனால், அதில் கிடைத்த வருமானம் போய்ச் சேர்ந்ததோ, ஒரு சில தனிப்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமே.
"2ஜி'க்கு பிறகு நடைபெற்ற, "3ஜி' ஏலம், பிரணாப் முகர்ஜி தலைமையில் வெளிப்படையாக நடந்தது. அதனால், 35 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் எதிர்பார்த்த ஏலம், ஒரு லட்சம் கோடி ரூபாயை ஈட்டித் தந்தது. அப்போது தான், "2ஜி'யின் செல்வாக்கு என்ன, அதில் வந்த வருமானம் என்ன என்பது நாட்டு மக்களுக்கு தெரிந்தது. நாட்டையே உலுக்கிய மிகப்பெரிய ஊழல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
காமன்வெல்த் போட்டிகளுக்காக செலவழித்ததாக கூறி சுருட்டப்பட்டது மக்களுடைய வரிப்பணம்; "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் கொள்ளையடிக்கப்பட்டதும், மக்களுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய பணம். இந்த பணம் இரண்டு பேரால் மட்டுமே சுருட்டப்பட்டதாக இப்போதைக்கு தெரியவந்துள்ளது.
இவர்கள் வெளியில் தெரியும் முகங்களே. ஒளிந்திருக்கும் முகங்கள் யார் யார், அவர்களுக்கு சென்று அடைந்தது எவ்வளவு, ஆட்சியும், அதிகாரமும் தான் அவர்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறதா? "பதவி இழந்த பிறகும், மரியாதை பெறுபவனே பண்பாளன்' - இது சாணக்கியன் கூற்று. பதவி போன பிறகு இவர்கள் நிலை என்ன, செல்லாக் காசா, ஜெயில் வாசமா, காலம்தான் பதில் சொல்லும்.

கனிமொழியும், கல்மாடியும்

காமன்வெல்த் விளையாட்டு ஊழலுக்காக சுரேஷ் கல்மாடி நேற்று முன்தினம் கைது. நாளையோ அல்லது மே மாதம் 6ம் தேதியோ கனிமொழி கைதாகலாம். கனிமொழி கைதானால், அது, தி.மு.க.,விற்கு தேய்பிறை தான்.சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டது குறித்து, கருத்து தெரிவித்த பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, "ஒரு கூட்டமே கைது செய்யப்பட வேண்டிய இடத்தில், ஒருவர் தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்' என்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணியே குற்றங்களுக்குள் ஒளிந்திருப்பதால், கனிமொழி கைதானால், காங்கிரசும் காட்டிக் கொடுக்கப்படலாம். இருவருமே அனைத்து ஊழல்களிலும், பின்னிப் பிணைந்திருப்பதால், அரசியலிலும் கைதேர்ந்தவர்கள் என்பதால், ஒருவர் ஏற்படுத்தும் உராய்வு, இருவரையுமே சேர்த்து, "சந்திக்கிழுக்கும்' என்பதை இருவருமே அறியாதவர்கள் அல்லர்.

காமன்வெல்த் விளையாட்டு ஊழலும், "2ஜி' அலைக்கற்றை ஊழலும் பல ஒற்றுமைகளைக் கொண்டவை. இரண்டிலேயும், வெளியே தெரியும் முகங்கள் ஒன்று; வெளியே தெரியாத உண்மையான முகங்கள் அதிகம். இரண்டு ஊழல்களிலும் நாட்டின் மிகப்பெரிய, "தலைகள்' பங்கு பெற்றிருக்கின்றன.பெரிய இடத்து சம்பந்தம் - பெருந்தலைகளின் பங்கு இருப்பதாலேயே, கனிமொழியும், கல்மாடியும் சிறிதும் அச்சப்பட்டதாகத் தெரியவில்லை. கல்மாடி, தான் அனைவரையும் கலந்தாலோசித்தே முடிவெடுத்ததாக தைரியமாக சொல்கிறார். இதை உறுதிப்படுத்தும் வண்ணம், சி.பி.ஐ., விசாரணைக்குப் பின், அவர், மன்மோகன், சோனியா கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் மற்றும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். மேலிடமும் தன்னோடு சேர்ந்து, "சிக்கி' இருப்பதாலேயே, தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணம் அவருக்கு உள்ளது.

இந்த விவகாரத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி, நிதின் கட்காரி பெற்ற தகவலும், பண பரிவர்த்தனைகள், நிதி முடிவுகள் அனைத்தும், அமைச்சர்கள் குழு, அமைச்சரவை உப கமிட்டி, பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமருக்கு தெரிந்தே நடைபெற்று இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது."2ஜி' அலைக்கற்றை ஊழலிலும், கலைஞர், "டிவி'க்கு கொடுக்கப்பட்ட, 210 கோடி ரூபாயை பார்க்கும் போது, "தி.மு.க.,வின் விஞ்ஞானப்பூர்வ ஊழல்' பட்டம் தகுதி இழந்தது தெரிகிறது. ஆண்டு வருமானம் வெறும், 47 கோடி உள்ள கலைஞர், "டிவி' வெறும் ஒரு லட்ச ரூபாய் மட்டுமே முதலீடு கொண்ட, தன்னை விட மிகச்சிறிய இரண்டு நிறுவனங்களிலிருந்து, 210 கோடி ரூபாய் கடன் பெறுவது என்பது, தி.மு.க.,வின் விஞ்ஞானப்பூர்வ ஊழல் பெருமைக்கு ஒரு களங்கம். எங்கோ தப்பு நடந்திருக்கிறது; யாரோ தவறாக ஆலோசனை கூறியிருக்கின்றனர்.

சர்க்காரியா காலத்திலிருந்த விவேகம், இப்போது கருணாநிதியின் வாரிசுகளிடம் இல்லை. லாபம் வரும் என்று தெரிந்தே தான் ராஜா தொலைத் தொடர்பு அமைச்சராக, கனிமொழியால் ஆக்கப்பட்டிருப்பதாக, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை சொல்கிறது. விவசாயத்திலிருந்து வருமானமில்லை, வாழ்வு நடத்த வழியில்லை என்பதால், தினசரி 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதே நாட்டில் ஊழல்கள் மூலம் ஆயிரம், லட்சம் கோடிகளை குவிப்பவர்களும் இருக்கின்றனர். இதற்கு எப்போது வரும் தீர்வு?

Saturday, April 16, 2011

ஒரு ஊழலுக்கு மாற்று இன்னொரு ஊழலா?

சட்டசபை தேர்தலில், 80 சதவீதத்திற்கு அதிகமாக மக்கள் ஓட்டளித்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்பதா? ஆட்சியாளர்கள் மீதிருந்த அதிருப்தி என கொள்வதா? வாக்காளர்கள் கடமை இதோடு முடிந்து விட்டதா? நாம் யாரை தேர்வு செய்ய ஓட்டளித்து இருக்கிறோம்? அடுத்த ஐந்து ஆண்டுகள் எந்த ஊழல் கட்சி கையில் அதிகாரம் போகப் போகிறது?

தமிழ்ப் பண்பாடு, நாகரிகம், கலாசாரம், ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, "குடவோலை' ஓட்டு முறை மூலம், ஜனநாயகத்தை உலகத்திற்கு கற்றுத் தந்தவர்கள் தமிழ் மன்னர்கள். சர்வ அதிகாரமும் பெற்றவன் மன்னன். அனைவரும் அவன் கொடை கீழ் தான் என்றிருந்த போதும், தமிழ் மன்னர்கள் ஜனநாயகத்தைப் போற்றி வந்திருக்கின்றனர். 

குற்றமிழைத்தவர்கள், கொலைகாரர்கள், குடிகாரர்கள், சமூக அந்தஸ்து இல்லாதவர்கள், தனக்குப் பின் தன் வாரிசு என்போருக்கெல்லாம் தேர்தலில் போட்டியிடத் தகுதியில்லை என, அன்றே நிர்ணயித்தவர்கள் தமிழர்கள். ஆனால், இன்று அவைகள் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது கண்டு, நெஞ்சம் கனக்கிறது. 

அன்றைய 10ம் நூற்றாண்டில் மட்டுமல்ல, இன்றைய, 21ம் நூற்றாண்டிலும் தமிழகம் தலை நிமிர்ந்து தான் நின்றது. உலகின் மிகப்பெரும் ஐ.டி., நிறுவனங்கள், நாசா போன்ற விண்வெளி அமைப்புகள், தமிழர்களையும், சீனர்களையும் தான் தங்கள் நிறுவனங்களுக்கு தேர்வு செய்தனர். தமிழர்களின் அறிவுத்திறன், வேகம், முற்போக்கு சிந்தனையே இதற்கு காரணம் என்று பில்கேட்ஸ் முதலானோர் கூறினர்.

இத்தகைய பெருமை பெற்ற தமிழகம், 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் புரிந்து தமிழ், தமிழன் என்று பேசி, நம்மை ஏமாற்றி, உலகம் நம்மை எள்ளி நகையாட வைத்த கட்சிகளால், இன்று, தலைகுனிந்து நிற்கிறது. ஓட்டளித்த 80 சதவீத மக்கள், இன்றைய ஆட்சியாளரை மாற்றிவிட்டால், இந்த நிலை மாறி விடுமா? தமிழகம் மீண்டும் தலைநிமிர்ந்து விடுமா? 

ஆட்சியாளர்களுக்கு நாம் அதிகாரம் வழங்குகிறோம், பொறுப்பு கொடுக்கிறோம். அதற்கு ஆட்சியாளர்கள், மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். அவர்கள் பதில், ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தலின் போது மட்டும் தான் இருக்கிறது என்பதும் ஒரு காரணம். 

மக்கள் நலனுக்காக ஆட்சி செய்ய வேண்டிய நல்லவர்கள் கிடைக்காததால், வாக்காளர்களும், உண்மையான ஆட்சி மாற்றத்தை செய்ய முடியாமல், இதுவரை, ஒரே தோசையை திரும்பத் திரும்ப, திருப்பிப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கு என்ன தீர்வு? புதிய ஆட்சியாளர்களை கொண்டு வர முடியாதா? 

ஆளும் கட்சியின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த சட்டசபைக்குள்ளும், சட்டசபைக்கு வெளியேயும் ஒரு மூன்றாவது சக்தி வேண்டும். அது தரமான, தகுதியான, நிரூபிக்கப்பட்ட, மக்கள் நலம் விரும்பும் சக்தியாக இருக்க வேண்டும். நீதிபதிகள், தேர்வாணைக் குழு நிர்வாகிகள், பல்கலைக் கழக துணைவேந்தர்கள் என்பன போன்ற பல்வேறு மக்கள் நல முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில், ஆளும் கட்சியின் ஜால்ராக்கள் அல்லது தகுதியில்லாதவர்கள் நியமிக்கப்படுவதைத் தடுக்க, இந்த மூன்றாவது சக்தி சட்டசபைக்குள் வர வேண்டும்.

சட்டசபைக்கு வெளியேயும் ஒரு மூன்றாவது சக்தி தேவை. அதுவும், தரமும், தகுதியும் வாய்ந்த அரசு சாரா பொது நல அமைப்பாக இருக்க வேண்டும். இன்று ஊழலுக்கு எதிராக, இந்தியாவை உலுக்கிய, இளைஞர்களை கவர்ந்த சமூக ஊழியர் அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் மாதிரியான ஒரு காவல் அமைப்பு வேண்டும். 

அதில் பொதுமக்கள் பெருமளவு பங்கு கொள்ள வேண்டும். இந்த சமூக அமைப்பிலிருந்து பாதி பேர், அரசின் பிரதிநிதிகள் பாதி பேர் என்று சேர்ந்த குழுவே, அரசின் கொள்கைகளை முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவுகளே இறுதியில் சட்டமாக்கப்பட வேண்டும்.

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஆட்சியாளர்களின் செயல்பாட்டுக்கு ஓட்டுரிமை மூலம் மக்கள் தீர்ப்பளிக்கின்றனர். அதுவும், இன்றைய அரசுக்கு தண்டனை தரப்படுகிறதே தவிர, நாளைய நல்ல அரசு தேர்வுக்கான தீர்ப்பாக அது இருப்பதில்லை. இந்நிலை மாற வேண்டும் என்றால், அரசின் ஐந்து ஆண்டு கால செயல்பாட்டிலும், மக்களின் பங்கும், பங்களிப்பும் இருக்க வேண்டும்.

ஓட்டுரிமை பயன்படுத்தும் போது மட்டுமே வாக்காளர்களின் பங்கு அரசியலில் இருக்கிறது என்ற நிலை உள்ளதாலேயே, இம்மாதிரி ஊழல் அரசுகள் வந்து போகின்றன. அரசின் செயல்பாடுகள் வெளிப்படையாக இல்லை. உள்ளொன்றும், வெளியொன்றும் என இரு முகங்களில் உள்ளதை, "விக்கிலீக்ஸ்' இணையதளம் வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது.

அரசை யாரெல்லாம் நடத்துகின்றனர்? தமிழ், தமிழன், இந்தியன் என்போரெல்லாம், இந்தியாவின் இறையாண்மையை எப்படி வெளிநாட்டிற்கு விற்கின்றனர்? பன்னாட்டு கம்பெனிகள் எப்படி இந்திய அரசுகளை ஆட்டிப் படைக்கின்றன? இவையெல்லாம் விக்கிலீக்ஸ் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிந்தது. 


இந்த நிலை தொடராமல் இருக்க, அரசின் கொள்கை முடிவு எடுப்பதில், அதை அமல்படுத்துவதில், வாக்காளர்களாகிய நம் பங்கு இருக்க வேண்டும். அதுவும், ஆட்சி செய்யும் ஐந்து ஆண்டு காலமும் இருக்க வேண்டும். இதற்கு நம் உரிமைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், ஜனநாயக தத்துவத்தை குடை சாய்க்கும் ஆட்சியாளர்களை தடுத்து நிறுத்த முடியும்.
]
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டாலே இது சாத்தியம். இதில், பத்திரிகை, ஊடகங்கள் பங்கு மகத்தானது. அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை நான்கே நாட்களில் உலகறியச் செய்தது ஊடகங்கள் தான். இதே ஊடகங்கள் தான், தரமுள்ள, தகுதியாக மூன்றாவது சக்தியை சட்டசபைக்குள் கொண்டு செல்ல காரணமாக இருக்க வேண்டும். 

சட்டசபைக்கு வெளியே வலிமையான மக்கள் சக்தி கொண்ட, தகுதியான சமூக குழுக்களை உருவாக்க பத்திரிகைகள் உதவ வேண்டும். இந்த இரண்டும் நடக்கும்போது, ஊழல் பறந்தோடும்; நேர்மை நெஞ்சு நிமிரும்; தமிழகம் மீண்டும் தலை நிமிரும்.

Thursday, April 14, 2011

இளமையில் எங்கிருந்தார் இராகுல் காந்தி





ராகுல் காந்தி சென்றவிடமெல்லாம் காங்கிரஸை தோற்கடித்து, ”அதை இல்லாமல் செய்துவரும் பெரும்பணியை” --செய்துவருவது நாம் அறிந்ததே..அந்தவகையில் தமிழ்நாட்டிற்கும் வந்து காங்கிரஸையும்--திமுகவையும் தோற்கடிக்கப் போகும் பெருமையை ( மே--13ந்தேதி புரியும்).செய்திருக்கிறார்.

கேரளாவிற்கு சென்று அங்கு 87 வயது “அச்சுவை” சாடியிருக்கிறார். மீண்டும் முதல்வரானால் 87 வயது “அச்சுவிற்கு “--பதவி முடியும் போது 92 வயதாகுமாம்.பெரியவர்களை மதிக்கும் தேசம் இது--கொஞ்சம் காலம் முன்பு வரை காங்கிரஸ் தலைவர்களின் சராசரி வயது 75.

திடீர் தலைவரான இவருக்கு இவை தெரிந்திருக்க நியாமில்லை.
அது போகட்டும் .இவர் ஆதரிக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு எத்தனை வயதாம்?--தமிழ்நாட்டில் 87 என்ற எண் நல்ல எண்--கேரளாவில் அதே 87 என்ற எண் கெட்ட எண்ணா?--








எவ்வளவோ வெளிநாட்டவர் இந்தியாவிற்கு வந்து ஆன்மீக பலம் பெற்றனர்..

ராகுலின் 15 வயது முதல் 30 வயதுவரையிலான இருந்த இடம் யாருக்கும் தெரியவில்லை ...இந்தியாஅவில் பிறந்த இந்த வெளிநாட்டவர் பெண்மீக பலம் நாடி ஏதோ ஒரு நாட்டில் இருந்திருக்கலாம்--நாடுதான் தெரியவில்லை---

--