Pages

Monday, May 2, 2011

கருணாநிதியும், தர்மபுத்திரனும்...

"ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில், மத்திய அரசின் செயல்பாடுகள், தி.மு.க., விற்கு சங்கடத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, கருணாநிதி அளித்த பதில்,"மகாபாரதத்தில், தர்மருக்கு ஏற்பட்ட சங்கடம் தி.மு.க.,விற்கு ஏற்படாது(தி.மு.க., என்பதும், கருணாநிதி என்பதும் ஒன்றுதானே) அந்த சங்கடம் என்னவென்று, நான் விவரிக்க விரும்பவில்லை' என, சொல்லியிருக்கிறார்.


தருமனுக்கு ஏற்பட்ட சங்கடம் என்ன? எனக்கு தெரிந்து பாரதத்தில் சொல்லப்படுவது இரண்டு. ஒன்று, கவுரவர்களின் தலைநகரான ஹஸ்தினாபுரம். அதாவது, இன்றைய டில்லி. அங்கு சூதாட வருமாறு பாண்டவர்களுக்கு துரியோதனன் அழைப்பு விடுக்கிறான். அன்றைய ராஜ மரபுப்படி, சூதாட்ட அழைப்பை ஒரு அரசன் விடுத்தால், அதை மற்ற அரசன் ஏற்க வேண்டும் என்பது விதி.


சகுனியின் சூதாட்டத்தில் யாரும் வெற்றி பெற முடியாது என்பதும், சூதாட்டத்தை வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் வைத்திருக்கிற பாண்டவர்கள், நிச்சயமாக தோல்வியுறுவர் என்பதை தெரிந்த துரியோதனன், தர்மபுத்திரனை நயவஞ்சமாக ஹஸ்தினாபுரத்திற்கு அழைக்கிறான். அங்கு வந்த, தர்மபுத்திரன் தோல்வியுறுகிறான்.


காங்கிரஸ், டில்லிக்கு தங்களை வஞ்சகமாக அழைத்து, "ஸ்பெக்ட்ரம்'சூதாட்டத்தில் ஈடுபடுத்தி வழக்கு, விசாரணை, கைது, பத்திரிகைகளில் அவப் பெயர், தேர்தலில் தோல்வி ஏற்படுத்தும் முயற்சி இவைகளை செய்கிறது. இந்த முயற்சிகளில் காங்கிரஸ் வெற்றி பெற முடியாது.
தி.மு.க.,விற்கும், கலைஞர் "டிவி'க்கும், தயாளு, கனிமொழி, கடைசியாக ராஜாவிற்கு சங்கடங்களை ஏற்படுத்த முடியாது ---என, டில்லிக்கு இதன் மூலம் சொல்கிறாரா? மகாபாரத கதை மூலம் காங்கிரசிற்கு எச்சரிக்கை விடுகிறாரா?
இரண்டாவது... சூதாட்டத்தில் பணயம் வைத்து தோற்ற பின், இழுத்து வரப்பட்ட திரவுபதி துகிலுரியப்படும்போது, தர்மபுத்திரரும் அவரது தம்பிமார்களும் வாளாவிருக்கின்றனர். தருமனுக்கு ஏற்பட்ட இந்த சங்கடத்தை கருணாநிதி குறிப்பிட்டிருக்க முடியாது.


ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை விசாரிக்கும் பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுவின் தலைவர், பா.ஜ., வை சேர்ந்த முரளி மனோகர் ஜோஷி. மொத்தமுள்ள, 21 உறுப்பினர்களில், காங்கிரசிற்கு ஆதரவாக 10 பேர், எதிராக 11 பேர். அந்த எதிர் ஓட்டில் உத்தரபிரதேசத்தில் எதிரும், புதிருமாக உள்ள முலயாம்சிங்கின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஒரு உறுப்பினர்களை காங்கிரசிற்கு ஆதரவாக மாற்ற பெரும் விலை பேசப்பட்டது. 
அதன் விளைவு, வரைவு அறிக்கை நிராகரிக்கப்பட்டு, அடுத்த தந்திரம் அரங்கேறியுள்ளது.


"தந்திர பூமி' என்ற தலைப்பில், டில்லியைப் பற்றி நாவலாசிரியர் இந்திரா பார்த்தசாரதி ஒரு நாவல் எழுதியிருந்தார். அந்த, "தந்திர பூமியில்' தற்போது, தி.மு.க.,வின் ராஜதந்திரம் தடுமாறி நிற்கிறது. இப்படிப்பட்ட தந்திர பூமியின் நிஜாம்கள் தனக்கெதிராக நகர்த்தும் காய்களை, தவிடு பொடியாக்குவேன் என்பது மட்டும், கருணாநிதியின் செய்தியாக இருக்க முடியாது.


இவர் தர்மனானால், ஹஸ்தினாபுரம் டில்லி ஆனால், காங்கிரஸ், துரியோதனனும், கவுரவர்களும் தானே! தர்மபுத்திரருக்கு ஏற்பட்ட சங்கடம் தனக்கு ஏற்படாது என இவர் கூறுவதன் மூலம், இவரை தர்மபுத்திரருக்கு ஒப்பிட்டுக் கொள்கிறார்.


இதிகாச புராணங்களை எட்டிக் காயாய் வர்ணித்தாலும், அக்கதாபாத்திரங்களில் தன்னை உவமானப்படுத்தி, அடி மனதில் சந்தோஷம் காண்கிறார். 

கடுமையான சிக்கலில் மாட்டித் தவிக்கும் இவருக்கும், இவர் குடும்பத்தினருக்கும், கட்சிக்கும் ஒரு ஆறுதல், இவர், தன்னை தானே தருமபுத்திரரோடு ஒப்பிட்டு கொண்டது மட்டும் தான்.

No comments: