Pages

Tuesday, May 3, 2011

குறைகள் மட்டும் தானா, நிறைகளே இல்லையா?

"ஐந்து ஆண்டு கால, தி.மு.க., ஆட்சியில் நிறைகளே இல்லையா? குறைகள் மட்டும் தான் கண்களுக்கு தெரிகிறதா' என, பலதரப்பில் இருந்தும் கேள்விகள்? எழுகின்றன. வேறு எவரும் செய்ய முடியாத, தி.மு.க.,விற்கே உரித்தான சில சாதனைகள் இக்கேள்விக்கு பதிலாய் கண்முன்னே விரிகிறது.

நான் குறிப்பிடும் திட்டத்தில், உண்மையான பயனாளிகள் எவ்வளவு பேர் பயன் பெற்றனர் என்பதை விட, இத்திட்டத்தை எப்படி திண்மையோடு, தி.மு.க., செய்திருக்கிறது என்பது தான் பாராட்டுதலுக்குரிய விஷயம்.கடந்த ஐந்தாண்டுகளாக, முதியோருக்கான நலத்திட்ட உதவித்தொகைகளை, 10 லட்சத்து, 45 ஆயிரம் பேருக்கு வழங்கி வருகிறது. அதாவது, 10.45 லட்சம் பயனாளிகளை கண்டுபிடித்து, திட்டத்தில் சேர்த்து உதவி வருகிறது. இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? இதே திட்டத்திற்கு, கடந்த ஜெயலலிதா ஆட்சியில், பயனாளிகள் எண்ணிக்கை வெறும், 63 ஆயிரம் மட்டுமே!

இந்திரா காந்தி தேசிய விதவைகள் பென்ஷன் திட்டம், இந்திரா காந்தி தேசிய ஊனமுற்றோர் பென்ஷன் திட்டம், மாநில முதியோர் பென்ஷன் திட்டம், மாற்றுத் திறனாளிகள் உதவித் திட்டம், ஆதரவற்ற விதவைகள் உதவித் திட்டம், ஆதரவற்ற விவசாயக் கூலிகள் உதவித் திட்டம், 50 வயதாகியும், திருமணமாகாத ஆதரவற்ற பெண்கள் பென்ஷன் திட்டம் என, திட்டங்களின் பட்டியலும் பெரியது.

இதில், இந்திரா காந்தி தேசிய முதியோர் பென்ஷன் திட்டம், 5.1 லட்சம் பயனாளிகள். விதவைகளுக்கான பென்ஷன் திட்டம், 30 ஆயிரத்து 859; உடல் ஊனமுற்றோர் நிதி உதவி, 3.4 லட்சம் பேர் என, பயன்பெற்றோர் பட்டியலும் பெரிதாய் நீள்கிறது.

இத்தனை திட்டத்திற்கும், ஆட்களை கண்டுபிடித்து, கட்சிக்கு ஓட்டு சேர்ப்பது மாதிரி சேர்த்து, அவர்களுக்கு நிதியுதவி செய்வது பாராட்டுக்குரியது. இன்னொருபுறத்தில், அரசின் உதவிகளை பயன்படுத்தி, ஒரு வலுவான ஓட்டு வங்கியையே உருவாக்க முடியும் என்பதை, தி.மு.க.,விடம் மற்ற கட்சிகள் கற்றுக் கொள்ள வேண்டும்

இது போலவே, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நடத்தியது தான் பெரும் சாதனை. இதில் என்ன பெருமை இருக்கிறது? இதனால், தமிழுக்கு என்ன நன்மை விளைந்தது? கோவைக்கு தான் கட்டமைப்பில் என்ன வியத்தகு வளர்ச்சிகள் ஏற்பட்டன? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கலாம். இக்கேள்விகளுக்கெல்லாம், திருப்திகரமான பதில் இல்லை தான்.

ஆனாலும், அரசு செலவில் தி.மு.க., நடத்திய, பிரமாண்டம் வியக்க வைத்தது. திரும்பிய திசையெல்லாம் மக்கள் வெள்ளம். ஏதோ ஒப்புக்கு ஆராய்ச்சி, ஒப்புக்கு கருத்தரங்கம் என்றாலும் கூட, "எல்லா புகழும் கலைஞருக்கே' என்ற நெடியே தூக்கலாக இருந்திருந்தாலும் கூட, தமிழகத்தையே கோவையில் கூட்டி விட்டனர்.

அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட, குறிப்பாக, ஜெயலலிதா கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்று கருணாநிதியிடம் உண்டு... முதலமைச்சர் வருகிறார் என்ற காரணத்திற்காக போக்குவரத்தை நிறுத்தி, நெரிசல் ஏற்படுத்தி, பொதுமக்களின் பொல்லாங்கை, வயிற்றெரிச்சலை கருணாநிதி கொட்டிக் கொள்ளவில்லை.

உள்ளாட்சித் துறையிலிருந்து, பின்னாளில் துணை முதல்வராக உயர்ந்த அவரது புதல்வர் ஸ்டாலினும், இவ்வகையில் தந்தை வழியே பின்பற்றினார். அதிக படாடோபமின்றி, ஆடம்பரம் இன்றி, இருந்தது மட்டுமல்ல, தன் வருகையால் பொதுமக்களுக்கு, "டார்ச்சர்' கொடுக்கவில்லை.

அமைச்சர்களை சந்திப்பது, மன்னர்களை சந்திப்பது போல் சிரமமானது என்பது தமிழகத்தில் மட்டும் தான். ஆனால், வாஜ்பாய் காலத்தில், பிரதமரை சந்திப்பதே மிக எளிதாக இருந்தது. தமிழக முதல்வரை சந்திப்பது குதிரைக் கொம்பானது என்ற நிலையை மாற்றிய பெருமை கருணாநிதிக்கு உண்டு.அடுத்து வருபவர்களும், இந்த பெருமைக்குரியவர்களாக இருந்தால், தமிழ் மக்களுக்கு நல்லது தானே!

No comments: