Pages

Sunday, August 7, 2011

உரத்த சிந்தனை : நேர்மையின் நிழலில்...

கேரளாவில், ராஜீ நாராயணசாமி எனும், இடுக்கி ஜில்லா கலெக்டரை பணிமாற்றம் செய்தபோது, அம்மாவட்டமே, "பந்த்' நடத்தி, "அவரை மாற்றக் கூடாது' என வலியுறுத்தியது.

நேர்மையான, உண்மையும், நெஞ்சுறுதியும் கொண்ட அதிகாரிகள், நாடு முழுவதும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், அவர்கள், அதற்காகத் தரும் விலையோ, மிகப் பெரியது.

அருண்பாட்டியா எனும் மகாராஷ்டிரா கேடர் ஐ.ஏ.எஸ்., அஞ்சா நெஞ்சுடன், நெஞ்சுறுதியுடன் செயல்பட்டதால், பணிக்காலம் முழுவதும் போராட்ட மயமாகவே கழித்தார்.

தண்டனை இடமாற்றங்கள், பதவி இறக்கங்கள், சொந்த அதிகாரிகளே புறக்கணித்த நிலைகள், மிரட்டல்களைத் தாண்டி, மனவுறுதியோடு செயல்பட்ட நல்ல உதாரணங்கள் பல உண்டு.

இந்த உறுதிப்பாடான செயல்பாட்டுக்குக் கிடைக்கும் அவமரியாதைக்கு அஞ்சியே, பல அதிகாரிகள், "யார் எக்கேடு கெட்டால் என்ன; நமக்கேன் வம்பு?' என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றனர். பின் ஏன் இவர்கள் இந்திய ஆட்சிப்பணிக்கு வர வேண்டும்.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது, இப்பணியை தொடர்வது பற்றிய விவாதம் எழுந்தது. "அகில இந்திய பணிகளின் தந்தை' என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலும், அரசமைப்புக் குழுவிலிருந்த, பீமாராவ் அம்பேத்கரும், அகில இந்திய பணி தொடர வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினர்.


ஐ.ஏ.எஸ்., பணியின் முதல் மற்றும் முக்கிய கரு, சேவை.

தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாத, தன் திறமை, அறிவு இவைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பணியாளர்களை உருவாக்கும் இந்திய ஆட்சிப் பணிக்கு, மத்திய அரசின் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலமாக, ஆண்டு தோறும் தேர்வு நடத்தி, அதில் வடிகட்டி திடமான, "சாரை' தேர்வு செய்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக, இத்தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இப்படி நடக்கும் தேர்வில், முதல், 50லிருந்து, 100 பேருக்கே, ஐ.ஏ.எஸ்., - ஐ.எப்.எஸ்., வாய்ப்பு கிடைக்கிறது. அதாவது, 1,000த்தில் ஒருவருக்கே இந்த வாய்ப்பு. உலகிலேயே மிகக் கடுமையாக வடிகட்டி தேர்வு செய்யப்படும் பணி, என்ற பெருமையை இது பெறுகிறது.

காலங்கள் மாறியது; காட்சிகள் மாறியது. பொது நிர்வாகத்தில், சேவை முக்கியக் குறிக்கோளாக இருந்த நிலை, பின்னுக்குத் தள்ளப்பட்டது. இப்போது, அதிகாரிகள் வெளியே தெரிய ஆரம்பித்து, தினசரி மீடியாக்களில் வர ஆரம்பித்து விட்டனர். அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும் விளம்பரத்திற்கு சமமாக, இன்று இவர்கள், விளம்பரங்கள் பெற ஆரம்பித்து விட்டனர்.

தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளாமல், சேவை என்ற நிலை அதலபாதாளத்திற்கு போய்விட்டது. வானளாவிய அதிகாரம், ஆளுங்கட்சிக்கு ஆதரவான நிலைப்பாடு என்ற செயல்பாடுகளால், பொருள் குவிப்பில் நாட்டம் ஏற்பட்டு விட்டது.

"டிஸ்கவரி ஆப் இந்தியா' புத்தகத்தில், "இந்தியாவின் சிவில் சர்வீசில், இந்தியனுமில்லை, சிவிலுமில்லை' என்றார் நேரு. அன்று அவர் சொன்னது, உண்மையாகி வருகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்தியா முழுவதும், மானாவாரியாக எல்லா மாநிலங்களிலும், ஊழல் செய்யும் அதிகாரிகள் பெருகி வருகின்றனர்.


வேலியே பயிரை மேய்வது போல, ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் கூட, இதில் அடக்கம். இப்பணியில் சேரும் போது, சேவையை மையமாகக் கொண்டு சேருபவர்களால், அதே எண்ணத்தை தொட முடியாத அரசியல் சூழல்கள் உருவாவதும், இதற்கு ஒரு காரணம்.

ஐ.ஏ.எஸ்., பணியாளர்கள் தங்களது அனுபவம், அறிவு மற்றும் இப்பணி உருவாக்கி வைத்த நீண்ட நெடிய பாரம்பரியம் அடிப்படையில், அவரது மேலுள்ள துறை அமைச்சருக்கு ஆலோசனையும், அறிவுரையும் வழங்க வேண்டும் அப்படி வழங்கப்பட்ட அறிவுரையின் அடிப்படையில் தான், 20 முதல், 30 ஆண்டுகளுக்கு முன் வரை, அமைச்சர்கள் செயல்பட்டனர்.

மக்கள் நல திட்டங்களை காமராஜர் கொண்டு வந்த போது, பொருளாதார ரீதியில் அரசால் செயல்படுத்த முடியாது என்பதை, அதிகாரிகள் அவரிடத்தில் தைரியமாக சொல்ல முடிந்தது. ரூபாய்க்கு ஒருபடி அரிசி திட்டத்தை, அண்ணாதுரை கொண்டு வந்த போதும், அதிகாரிகள் தங்கள் கருத்தை வெளிப்படையாக சொல்ல முடிந்தது. ஆனால், அதையும் மீறி, திட்டம் கொண்டு வரப்பட்டது வேறு விஷயம்.

அதுவரை, சீனியாரிட்டி அடிப்படை யில், துறைகளின் செயலர்கள் மற்றும் தலைமைச் செயலர்கள் நியமிக்கப்பட்ட நிலை மாறி, சீனியாரிட்டி பின்னுக்குத் தள்ளப்பட்டது. தனக்கு வேண்டியவர்கள், பிரச்னை இல்லாதவர்கள், சுருக்கமாக சொன்னால், "எஸ்' சொல்பவர்கள் முன்னுரிமைப் பெற்றனர்.

இந்த கலாசாரம் வளர ஆரம்பித்தவுடன், இதற்கு கீழிருந்த அதிகாரிகளும், இதை தொடர ஆரம்பித்தனர். உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோமாயின், இலவச கலர், "டிவி' திட்டம், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் பொருளாதர ரீதியாக சாத்தியமற்றது என்பது, சாதாரண மனிதனுக்கும் தெரியும்.

இன்றைக்கு, தமிழக அரசின் கடன், 1 லட்சத்து, 10 ஆயிரம் கோடி ரூபாயை தொடுமளவுக்கு, ஏறி வருகிறது என்பதும் தெரியும். இந்நிலையில், சம்பந்தப்பட்ட துறை செயலரும், தலைமைச் செயலரும் இது சாத்தியமற்றது என்ற கருத்துக்களை, கோப்பிலாவது பதிவுச் செய்திருக்க வேண்டும். அப்படி நடந்திருக்காது என்பதை, அவர்களுக்குக் கிடைத்த, பதவி உயர்வுகளிலிருந்தே நாம் யூகித்துக் கொள்ளலாம்.

தன்னுடைய, கனவுத்திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரம், அமைச்சருக்கு உண்டு. ஆட்சிப் பணியாளர்கள் கருத்தும், அறிவுரையும் மட்டுமே வழங்க முடியும். ஆனால், தங்கள் கருத்தை, "கோப்பில்' பதிவுச் செய்யும் தைரியம் கூட, அதிகாரிகளுக்கு இல்லாத வகையில், அவர்கள், ஆட்சியாளர்களால் வைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதே உண்மை.

இதே கதை, "2ஜி' ஊழல் விவகாரத்திலும் நடந்தது. அமைச்சர் சொல்லை தட்டாத அதிகாரிகள், இன்று அவரோடு சேர்ந்து, "உள்ளே' இருக்கின்றனர்.

தனக்கு மேலுள்ள அமைச்சரை, திருப்திபடுத்தும் நோக்குக்குக் காரணமில்லாமல் இல்லை. சேவை மனப்பான்மையில் பணியில் சேர்ந்தவர்கள், பதவி உயர்வு மனப்பான்மைக்கு சென்று விடுகின்றனர். பணி மூப்பு பெறும் போது, அத்துறையின் தலைமைச் செயலராக உயர வேண்டுமென்றால், விதிமுறைகளை மீறிய அமைச்சரின் நட்பும், ஆசியும் வேண்டியிருக்கிறது.

இப்போது கூட, பல சீனியர் அதிகாரிகளை மீறி ஜூனியர்கள் பெரிய பதவிகளில் இருக்க இதுவே காரணம்.
வீரப்ப மொய்லி தலைமையிலான இரண்டாவது நிர்வாக சீர்திருத்த கமிட்டியும், இப்பணியை நேர் செய்ய, பல்வேறு அளவுகோல்களை அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. இந்த ஆண்டு முதல், தேர்வு முறையில் கூட மாற்றம் கொண்டு வந்தது கூட, இந்த சீரமைப்பின் ஒரு பகுதியே.

எவ்வளவு சொன்னாலும், எழுதினாலும், அரசியல்வாதிகள் முழுமனதோடு ஒத்துழைக்காமல், ஆட்சிப்பணிகளில் சீர்திருத்தம் செயல்படாது.

எனவே, ஐ.ஏ.எஸ்., சிறப்பாக செயல்பட, அரசியல்வாதிகள் நேர்மையாக இருக்க வேண்டும். அலை எப்போது ஓயும், கடலில் எப்போது குளிப்போம்?

5 comments:

Anonymous said...

Dear Sir,
I have seen your article on IAS Officials and it is good. You can make an attempt to write about each honest officer separately with more details
which would be a basis and form a foundation for young IAS Officers and others who are honest and want to continue to be honest. Such open appreciation would induce them to continue to be honest in spite of all troubles. They would get more determination to live with honesty. You can write on weekly basis in Dinamalar itself. When we talk more of corruption we generally fail to appreciate the honest people. Please think and start writing. I expect your reaction to my suggestion.
S.Nedunchezhian.

எஸ்.ஆர்.சேகர் said...

அன்பிற்கினிய திரு நெடுஞ்செழியன்..வணக்கம்..

என் கட்டுரைக்கு தங்கள் பாராட்டுக்கும்..ஆலோசனைக்கும் நன்றி..

கட்டுரையின் ஆரம்பமே நல்ல அதிகாரிகளை பாராட்டித்தான் ஆரம்பித்திருக்கிறேன்..

தினமலருக்கும் கட்டுரை அனுப்ப மட்டுமே முடியும்..பிரசுரிப்பது அவர்கள் முடிவு...

நீங்கள் இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்தை தினமலர்..”வாசகர் கடிதம் “பகுதிக்கும் அனுப்புங்கள்..

நன்றி..நெடுஞ்செழியன்...

எஸ்.ஆர்.சேகர் said...

அன்பிற்கினிய திரு நெடுஞ்செழியன்..வணக்கம்..

என் கட்டுரைக்கு தங்கள் பாராட்டுக்கும்..ஆலோசனைக்கும் நன்றி..

கட்டுரையின் ஆரம்பமே நல்ல அதிகாரிகளை பாராட்டித்தான் ஆரம்பித்திருக்கிறேன்..

தினமலருக்கும் கட்டுரை அனுப்ப மட்டுமே முடியும்..பிரசுரிப்பது அவர்கள் முடிவு...

நீங்கள் இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்தை தினமலர்..”வாசகர் கடிதம் “பகுதிக்கும் அனுப்புங்கள்..

நன்றி..நெடுஞ்செழியன்...

Anonymous said...

Dear Mr.S.R.Sekar,
Well,
Congrats for your artilcle..."Uratha Sindhanaikal"..In Dinamalar.
Every Indian..especially Tamilan is proud about your effort.
keep your effort

Jai Hind.!

Dr.M.Meenakshi Sundaram,MBBS.,MD.

நராயணன்.கணேசன் said...

Narayana Ganeshan

அருமை. பாராட்டுகள்.