Pages

Friday, April 29, 2011

மக்கள் பணம்; மக்களுக்கு வர வேண்டிய பணம்

தாய்மார்களுக்கு சத்தான உணவு கிடைக்காததால், இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு சத்து குறைந்த குழந்தைகளாக பிறக்கின்றன. ஐந்து வயதுக்குள் உள்ள குழந்தைகளில் சரிபாதி குழந்தைகள், குறைவான எடையுள்ள குழந்தைகளாக உள்ளன.

இந்நிலையில், காமன்வெல்த் போன்ற மிக அதிகமான செலவு செய்த விளையாட்டுக்கள் நம்நாட்டுக்கு தேவைதானா என்ற கேள்வி எழுகிறது. விளையாட்டு போட்டிகளால், ஊரின் கட்டமைப்பு உயருகிறது. வெளிநாட்டுக்காரர்கள் வருவதால், சுற்றுலா பெருகுகிறது. ஆயிரக்கணக்கானவர்களுக்கு வருமானம் தரும் தொழிலில் சுற்றுலா பெரும்பங்கு வகிக்கிறது.
சுற்றுலாவால் நாட்டின் பெருமையும், மரியாதையும் உயருகிறது. இவ்வளவையும் தரவேண்டியதை, நடைபெற்று முடிந்த, "காமன்வெல்த் விளையாட்டு' தந்ததா, என்பதும் ஒரு கேள்வி. சரி,"2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கு வருவோம். மேலே சொன்ன நலிந்தவர்களை தூக்கிவிட, மக்கள் நல அரசுக்கு தேவை நிதி. அதை அள்ளித் தருகிற, "அட்சய பாத்திரம்'மாக, "2ஜி' இருந்தது. ஆனால், அதில் கிடைத்த வருமானம் போய்ச் சேர்ந்ததோ, ஒரு சில தனிப்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமே.
"2ஜி'க்கு பிறகு நடைபெற்ற, "3ஜி' ஏலம், பிரணாப் முகர்ஜி தலைமையில் வெளிப்படையாக நடந்தது. அதனால், 35 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் எதிர்பார்த்த ஏலம், ஒரு லட்சம் கோடி ரூபாயை ஈட்டித் தந்தது. அப்போது தான், "2ஜி'யின் செல்வாக்கு என்ன, அதில் வந்த வருமானம் என்ன என்பது நாட்டு மக்களுக்கு தெரிந்தது. நாட்டையே உலுக்கிய மிகப்பெரிய ஊழல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
காமன்வெல்த் போட்டிகளுக்காக செலவழித்ததாக கூறி சுருட்டப்பட்டது மக்களுடைய வரிப்பணம்; "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் கொள்ளையடிக்கப்பட்டதும், மக்களுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய பணம். இந்த பணம் இரண்டு பேரால் மட்டுமே சுருட்டப்பட்டதாக இப்போதைக்கு தெரியவந்துள்ளது.
இவர்கள் வெளியில் தெரியும் முகங்களே. ஒளிந்திருக்கும் முகங்கள் யார் யார், அவர்களுக்கு சென்று அடைந்தது எவ்வளவு, ஆட்சியும், அதிகாரமும் தான் அவர்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறதா? "பதவி இழந்த பிறகும், மரியாதை பெறுபவனே பண்பாளன்' - இது சாணக்கியன் கூற்று. பதவி போன பிறகு இவர்கள் நிலை என்ன, செல்லாக் காசா, ஜெயில் வாசமா, காலம்தான் பதில் சொல்லும்.

No comments: