Pages

Sunday, May 29, 2011

பிஜேபி வீடு பற்றி எரிகிறதாம்--காங்கிரஸ் ஓநாய் கண்ணீர்


காமன்வெல்த் விளையாட்டு ஊழலில் முக்கிய குற்றவாளி..காங்கிரஸ் எம்.பி. ---காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்..சுரேஷ் கல்மாடி..---சிபிஐயால் கைது செய்யப்பட்டது…அதில் டெல்லி முதல்வர் ஷிலா திஷித்தும் சம்பந்தப்பட்டுரிக்கிறார்..என ….ஷுங்லு கமிட்டி அறிக்கை குற்றம்சாட்டியது…

ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலில் மத்தியமந்திரி சரத்பவாருக்கு தொடர்பிருக்கிறது என்கிற செய்தி….ஐ.மு.கூ.தலைவர் சோனியா காந்தி ஸ்விஸ் வங்கியில் பலகோடி ரூபாய் பதுக்கியிருக்கிறார் என சுப்ரமணிய சாமியும் ஸ்வீடன் பத்திரிக்கியும் வெளியிட்ட தகவல்…----இதற்கு இன்னும் சோனியாகாந்தி மறுப்பு தெரிவிக்காத நிலை….

2ஜி ஊழலில் ஆண்டிமுத்து ராசா அம்புதான்…முக்கிய குற்றவாளிகள் காங்கிரஸூக்குள் இருக்கிறார்கள்…என்ற குற்றச்சாட்டு…சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் அமெரிக்காவால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு------ சம்பந்தமே இல்லாமல் திக்விஜய்சிங் இரங்கல் தெரிவித்து கெட்டபெயர் வாங்கிக்கொண்டது….

உ.பி.விவசாயிகள் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டார்கள்…என தவறான..அரைவேக்காட்டுத்தனமான தகவலுடன் ஜனாதிபதியிடம் ராகுல்காந்தி புகார் தந்தது…என காங்கிரஸ் கலகலத்துப்போனாலும்..வெட்கமில்லாமல் வெளியேவந்து நடமாடுவது வேறுவிஷயம்…..

ஊழல் கண்காணிப்பு அதிகாரி தாமஸ் நியமனம் செல்லாது என சுப்ரீம்கோர்ட் அளித்த உத்தரவுக்கு ராஜினாமா செய்யாமல் பிரதமரும் சோனியாவும் வெளியே தலைகாட்டமுடியாமல் தவிக்கும் தவிப்பு….

தமிழக சட்டமன்ற தேர்தலில் மரண அடி வாங்கியபிறகு ரேடியோ..டி.வி..ஸ்டேஷன்களில்..பேட்டிகொடுக்கமுடியாமல்..சத்தமில்லாமல்..”பேனல் டிஸ்கஷன்களில்” கலந்துகொள்ள தைரியமில்லாமல் ஓடிஒளிந்த கார்த்சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் கும்பல்…

இந்நிலையில் “பிஜேபி வீடு பற்றி எரிகிறது”—என முதலைக்கண்ணீர் விடும் காங்கிரஸார்…அவுட்லுக் பத்திரிக்கையில் சுஷ்மாவின் பேட்டி வெளிப்படை…-----இன்றைய “இந்துப் பத்திரிக்கையின்..நீனாவியாஸ்”---அதை அப்படியே வெளியிட்டுள்ளார்..அவர்கள் அதற்கு கொடுத்த விளக்கம் உள்நோக்கமானது..பொய்யானது..என்பது படித்தாலே புரியும்..

வரிவிடாமல் படியுங்கள்…அதில் எங்கே கருத்து வேறுபாடு….எங்கே குடுமிப்புடி சண்டை…எங்கே கோஷ்டி மோதல்…..நம்மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லமுடியாதவர்கள்….பிஜேபி ஆளும் மாநில அரசுகளெல்லாம்..அசுரவேகத்தில் வளர்ந்து வருவதை பொறுக்க முடியாதவர்கள்…கடைசியாக எடுத்திருக்கும் ஆயுதம்..அதுவும் “டூத்..பிக்கை” (பல்குத்தும் குச்சி)..எடுத்து தாக்குதல் நடத்துகிறார்களாம்…பரிதாப பட்ட ஜென்மங்கள்…

வரிந்து கட்டிக்கொண்டு காங்கிரஸ்காரர்கள் விமர்சிப்பதை புரிந்துகொள்ள முடிகிறது…சாவின் விளிம்பிலுள்ள காங்கிரஸூக்கு வாய்திறக்க வழிவேண்டாமா?.....

ஆனால் கலஞர் டி.வி.க்கு என்ன வந்தது…ஆமாம்….அவர்களும் மரண பயத்தின் உச்சத்தில் தானே இருக்கிறார்கள்…சட்டமன்ற தேர்தலில் வாங்கிய மரண அடிக்கு..மானாட..மயிலாட..வும்….சமுதாய செய்திகளுமே கண்பித்தவர்களுக்கு..அரசியல் செய்தி வேண்டாமா?...அதனால்தான்..தமிழகத்தை தாண்டி போகமுடியாதவர்களுக்கு..அரசியல் செய்தி தேவைப்பட்டது..டெல்லி திஹார் ஜெயிலுக்கு படையெடுக்கும் கட்சிக்கு பிஜேபி செய்திதான் ஒரு ஆறுதலோ?...

ஒன்று மட்டும் உண்மை…அரசியலில் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது..( நல்லவனாக இருக்கவேண்டியதில்லை..என்பதே காங்கிரஸ்—திமுக..அரசியல் )..வல்லவனாகவும் இருக்கவேண்டும்..

இவர்கள் அவிழ்த்துவிடும் “கோயபல்ஸ் புளுகு மூட்டைகளை” நாடறியும்..காங்கிரஸாரே...இப்படி வம்பு பேசுவதை நிறுத்திவிட்டு.......ஊழல்..விலைவாசி உயர்வால் கொதித்துப் போயிருக்கும் மக்களிடம் இனியாவது கொஞ்சம் நல்லெண்ணத்தை சம்பாதிக்க முயற்சி செய்யுங்களேன்.

Tuesday, May 17, 2011

பா.ஜ.கவிற்கு தோல்வியா?


சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவிற்கு பூஜ்யம்---------வாக்கு சதவீதம் ஒரு சதம் மட்டுமே உயர்வு-----மாநிலத்தலைவர் உள்ளிட்ட பெரும் தலைகள் உருண்டன----தேர்தல் தோல்விக்கு..பொறுப்பேற்று மாநிலத்துணைத்தலைவர் ராஜினாமா-----

அடுக்கடுக்கான திடுக்கிடும் செய்திகள்---பா.ஜ.கவின் தொண்டனின் மனநிலை லேசாகவாவது ஆடுகிறதா?---அவன் அலைபாய்கிறானா?---எதிர்த்துப் போட்டியிட்ட ஒரேகட்சி நிலைகுலையாதா?-----

எண்ணற்ற ஆசைகளில் எதிரிகள் விரிக்கும் வலைகளில்... பாஜ விழாத காரணத்தால்...”ஜெ”..புகழ் பாடியவர்கள் ,,தொலைந்துவிட்ட கருணாநிதியை..தேடும் படலத்தை விட்டு விட்டு.. ஆண் சிங்கமாக கர்ஜிக்கும் பாஜக மீது தாக்குதல் துவங்கியுள்ளனர்..

முதன் முதலில் இது “ஜெ” யின் வெற்றி அல்ல...கருணாவின் மீதிருந்த “கடுப்பலை”----திமுக மீதிருந்த “எதிர்ப்பலை”---திமுக எதிர்ப்பலைக் குதிரையின் மீது ஒரு ஜாக்கியாக “ஜெ”--கால்களை காம்யூனிஸ்டுகளும்...வாலில் விஜயகாந்தும்---கட்டிக்கொண்டும்--ஒட்டிக்கொண்டும்----வெற்றியை தட்டிக்கொண்டு போய்விட்டனர்....

குஸ்தி களத்தில் இரண்டு பயில்வான்கள்---ஒன்று ஜெ--இரண்டு கருணா...கடந்த நாலரை ஆண்டுகளாக “ஜெ”--ஃபார்மில் இல்லை..சண்டையே போடவில்லை..அதாவது... எதிர்கட்சியாக செயலபடவே இல்லை..முழுதும் கொடநாடுவாசம்..கருணாவின் மீதிருந்த கடுப்பில் பார்வையாளர்களாக இருந்த மக்களே சண்டை போட்டு கருணாவை வீழ்த்திவிட்டனர்..எதிரில் ந்ன்றுகொண்டுருந்த “ஜெ” வெற்றி பெற்ற தாக அறிவிக்கப்பட்டார்..

”ஜெ”யிக்கு மக்கள் போட்டது பிச்சை--பாஜ ஓட்டு பாஜ உழைத்து சம்பாதித்தது..உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்---

தேர்தல் களத்தில் பா.ஜ.க.திட்டமிட்டு செயல்பட்டது......”ஒரு ஊழலுக்கு மாற்று மற்றொரு ஊழலா?”-----என சங்கநாதமிட்டது...”ஊழல் கூட்டணிகளிடமிருது தமிழகத்தை விடுவியுங்கள்”--என வீரச்சமர் புரிந்த்தது..

இரண்டு “மாமிச மலைகளுக்கிடையே”நடந்த சண்டையில் மக்கள் பாஜவை பார்க்கவே முடியவில்லை--அந்த அளவுக்கு புழுதி உயரே  பறந்தது..இந்த சூழலில் கூட ஒரு சதவீத ஓட்டுயர்வு..பாஜ உழைப்புக்கு கிடைத்த வெற்றி...

ஆக பாஜ தோற்க வில்லை--அது வருத்தப்பட....வேதனைப்பட...கவலைப்பட----ஒன்றுமில்லை--தேவையுமில்லை..

ஒன்று மட்டும் உறுதி..பாஜ பிரச்சார பலன்கள் முழுதும் ---பாஜ கருணா எதிர்ப்பு போர் முழுதும் --எங்காவது கருணா ஜெயித்து விடுவாரோ என்கிற “ஃபியர் சைகோஸிஸ்”--என்னும் அதீத பயத்தினால்.....”ஜெ”விற்க்கே போய் விட்டது..

இப்போது பாஜ காலம்--ஆம்...”ஜெ”யின் முகம் எல்லோருக்கும் தெரியும்...திறமைகளும் சொல்லாமலே புரியும்...கருணாவை ஆட்சியில் அமர்த்த திமுக முயல்கிறதோ இல்லையோ “ஜெ” உடனே துவங்கி விடுவார்...பாஜவின் திமுக எதிர்ப்பு நிலை ஏற்கனவே தெரியும்--இப்போது “ஜெ” யின் முகத்திரை பாஜவால் கிழிக்கப்படுமானால்...அடுத்த ஆட்சி பாஜகவுனுடையதே .

””மீண்டும் ஒரு டீ பார்ட்டி”

அரசியல் சதுரங்கம் எப்போதும் வேகமாகவே நகரும்.சிந்திப்பதற்குமுன் பலகாய்கள் தலைசாய்ந்திருக்கும்..
இந்த வேகத்துடன் ஒரு காய் நகர்த்தல் டெல்லியில் இருந்து துவக்கி இருக்கிறது

1999 “ டீ பார்ட்டியால்” வாஜ்பாய் அரசை வீழ்த்திய ஜெ..இம்முறை சோனியாவின் டீபார்ட்டி அழைப்பை ஏற்றிருப்பதில் பல்வேறு விஷயங்கள் அடங்கியுள்ளன.

ஆட்சி மாறியதும் காட்சிகள் மாறுகின்றனவே…..திமுகவுடன் “விவாகரத்து”  ஆகாததற்கு முன்பே அதிமுகவுடன் திருமண பேச்சு வார்த்தைகள் துவங்கிவிட்டனவே?...என்ற சந்தேகங்கள் பலர் மனதில் எழுவது இயற்கைதான்.

திமுக அரசின் மீதான கடுங்கோபமே
அதிமுகவை கோபுர உச்சிக்கு கொண்டு போயிருக்கிறது என்பதை “ஜெ” இம்முறை அறிந்திருக்கிறார்..இதை அவரது பேட்டியிலும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
“தமிழ் நாட்டுமக்கள் ஜனநாயகத்தை காப்பாற்றவும்…திமுகவின் குடும்ப ஆட்சிக்கு எதிராகவும் வாக்களித்து இருக்கிறார்கள்” என வெளிப்படையாக பேசியிருப்பது ,…இம்முறை அவர் “பக்குவப்பட்டிருக்கிறார்”..என்பதற்கான அறிகுறிகள்..

“தனது அரசு பெரிய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது என்றும்…மின்வெட்டு….விலைவாசி…சட்டம் ஒழுங்குக்கு முன்னுரிமை”..என்றும் அவர் கூறியிருப்பது அவர் விரைவாக  செயல்பட துடிகிறார்…என்பதை காட்டுகிறது…

இவைகளை சரிசெய்ய வேண்டுமென்றால் மத்திய அரசின் நிதியும் ...உதவிகளும்... ஒத்துழைப்பும் அவசியமாகிறது. ஒரு லஷத்து பத்தாயிரம் கோடி ரூபாய் கடனில் தவிக்கும் தமிழ்நாட்டுக்கு நிதி..அதிகமாகவும்…விரைவாகவும்..கிடைக்க மத்திய அரசுடன் இணக்கம் அவசியம்..என்கிற எம்ஜிஆர் ஃபார்முலாவை…”ஜெ” அறியாதவர் அல்ல.. அதனால் சோனியாவின் “டீ பார்ட்டியை” “ஜெ”…ஏற்றது ஆச்சர்யமல்ல.

ஆதர்ஷ் ஊழல்..காமன் வெல்த் ஊழல்…2ஜி ஊழல்..என காங்கிரசின் பெயர் நாடு முழுதும் கெட்டுப்போய் கிடக்கிறது..இதில் 2ஜி ஊழலில் சிக்கிய திமுகவுடனான கூட்டால் தமிழகத்தில் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியை தழுவியிருக்கிறது…திமுக உறவு காங்கிரஸுக்கு பெரும் சுமை என்றாலும் 2ஜி ஊழலில் காங்கிரஸும் சம்பந்தப்பட்டிருப்பதால்…திமுகவை உடனே “கை” கழுவமுடியாது..

2014 தேர்தல் காங்கிரஸுன் முன்னுரிமை…அதனால் “ஜெ”யுடன் உறவுக்கு அடித்தளம் போட இந்த “டீ பார்டி”—என்பதெல்லாம்…ரொம்ப “பேராசை சிந்தனைகள்”

காங்கிரஸை முதுகில் சுமக்க “ஜெ” என்ன முதிர்ச்சி இல்லாதவரா?---காங்கிரஸுக்கு எதிராக “ஆண்ட்டி இன்கம்பன்ஸி ஃபாக்டர்” உள்ளது..”வின்னபிலிட்டி ஃபாக்டரும்”—காங்கிரஸிடம் இல்லை…இதே காரணங்களுக்காகவே மதிமுகவை கழற்றிவிட்டு விஜைகாந்த்தை..”ஜெ” சேர்த்துக்கொண்டார்..என்பது குறிப்பிடத்தக்கது..

இச்சூழலில்..”ஜெ” யுடைய முழுநோக்கமும்….மாநில நிர்வாகத்தை தூக்கிநிறுத்தி …”இது நல்ல அரசு” என மக்களிடம் உடனடியாக பெயர் வாங்குவதும் தான் …இதற்கு மத்திய அரசோடு ”மோதுவது…முரண்டு பிடிப்பது”….நலன் பயக்காது எனபதை “ஜெ” பத்தாண்டு ஆட்சி அனுபவத்தில் அறியாதவர் அல்ல.

அதனால்..”டெல்லி தந்திர பூமியில்”…2011 மே மாத டீ பார்ட்டிக்கு…”ஜெ” ஒத்துக்கொண்டது…திமுக விட்டுச்சென்ற பிரச்சினைகளை சரிசெய்ய எடுக்கும் முயற்சியின் முதல் தந்திரம்தான்..
இரண்டு பேருக்கும் இருவரது உறவும் வேண்டும்…காங்கிரஸுக்கு 2014 பாராளுமன்ற தேர்தல் ஒருகண்…திமுக உறவை கழற்றி விடுவது மற்றொரு கண்..”ஜெ”யுக்கு..மாநிலத்தை சீர் செய்ய மத்திய நிதியில் ஒரு கண்…அரசியல் எதிரி திமுகவை “நிராதரவாக நிறுத்தவேண்டும்”..என்பது மற்றொரு கண்…

டெல்லியில் இந்த நான்கு கண்கள் சந்திப்பதில் ”கண்”டிப்பாக தமிழகத்திற்கு நல்லது இருந்தால் சரிதான்.

Wednesday, May 11, 2011

பற்றி எரிந்த இலங்கைக்கு பெட்ரோல் கொடுத்தது யார்?

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தி, ஒரு மீனவர் கொல்லப்பட்டார். உடனே, அன்றைய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயை, வாஜ்பாய் தொலைபேசியில் அழைத்தார்.

"இனி ஒரு துப்பாக்கி தோட்டா, இந்திய மீனவர்கள் மீது பாயுமானால், இலங்கைக்கான அனைத்து பொருளாதார உதவிகளையும் உடனடியாக நிறுத்துவோம்' என எச்சரித்தார். விளைவு, வாஜ்பாய் பிரதமராக இருந்த வரை, தமிழக மீனவர்களை தொட்டு பார்க்கும் தைரியம், இலங்கை கடற்படைக்கு இல்லாமல் இருந்தது.

சோனியா பதவியேற்றது முதல், தமிழர்களை ஒழிக்கும் ராஜபக்ஷேவிற்கு, வலதுகரமாக விளங்கி வருகிறார். தமிழர்களையும், தமிழகத்தையும் அவமதிக்கும் வண்ணமாக, இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு, ராஜபக்ஷேவை, சிறப்பு விருந்தினராக அழைத்தார். இதையே மீண்டும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலும் தொடர்ந்தார்.

இலங்கை அதிபரின் சகோதரர், கோத்தபய ராஜபக்ஷே தலைமையிலான குழு, இந்திய ராணுவ உதவியையும், ஆலோசனையையும் பெற, ஐந்து முறை இந்தியா வந்து சென்றிருக்கின்றனர். 2006ல், ஐந்து எம்-17 ஹெலிகாப்டர்கள் இலங்கை விமானப் படைக்கு ரகசியமாக இந்தியா அனுப்பியது. அதில், இலங்கை விமானப்படை சின்னம் பொறித்து உபயோகிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த செயல்பாட்டின் காரணமாக, தமிழர்கள் என்றால், கிள்ளுக் கீரைகள் என, ராஜபக்ஷேவிற்கு உற்சாகம் பிறந்தது. காங்கிரஸ், ராஜபக்ஷேவிற்கு கொடுத்த ஊக்கம், ஊட்டம், தமிழர்களை நிராதரவாக்கியது. இப்படிப்பட்ட காங்கிரஸ், எந்த முகத்தோடு ராஜபக்ஷேவை எதிர்த்து தங்கபாலு தலைமையில், இப்போது போராட்டம் நடத்தியது என்பது தான் புரியாத புதிர்.

இலங்கை தமிழருக்கு ஆதரவாக, களம் இறங்கியதாக காட்டி கொண்டவர்களில் கம்யூனிஸ்ட்களும் அடங்குவர். தமிழகத்தில் அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களும், வீதியில் வந்து போராடியதும், "தமிழர்கள் மீது' அவர்களுக்கு இருந்த மாசில்லா பற்றின் அடையாளம் என்பதாக தான் நாம் நினைக்கலாம்.ஆனால், ஊடுருவி பார்த்தால், உண்மை வேறுவிதமாக உள்ளது. 


இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க, முதன்முதலாக அதிகமாக ஆயுதங்களை சப்ளை செய்தது கம்யூனிஸ்ட் சீனா தான். ஏப்ரல், 2007ல், 25 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ தளவாடங்களை, ஆயுதங்களை சீனா, இலங்கைக்கு விற்பனை செய்தது. இரண்டெடுத்தால், ஒன்று இலவசம் போல, இதை வாங்கியதற்காக, ஆறு எப்-17 ரக, சண்டை ஜெட் விமானங்களை இலவசமாக கொடுத்தது.

இந்த ஆயுதங்களால் கொல்லப்பட்ட, எல்.டி.டி.இ.,யினரை விட, அப்பாவி தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகம். நேபாளத்தில் பிரசாந்தா தலைமையிலான கம்யூனிஸ்ட்கள் ஆட்சி ஏற்க, ஆலோசனை கூற, இங்கிருந்து கம்யூனிஸ்ட்கள் சென்றனர். ஒவ்வொரு முறை நடக்கும் இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டிற்கு, ரஷ்யாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் பிரதிநிதிகள் வருகின்றனர். அங்கு நடைபெறும் மாநாடுகளுக்கும் இந்திய கம்யூனிஸ்ட்கள் போகின்றனர்.

இப்படி உலக கம்யூனிஸ்ட்களோடு கொஞ்சி குலாவும் இந்திய கம்யூனிஸ்ட்கள், சீனா, ஆயுதங்களை இலங்கைக்கு விற்கும் போது ஏன் கண்டிக்கவில்லை, அதிர்ச்சி அடையவில்லை, ஏன் ஒரு அறிக்கை கூட கொடுக்கவில்லை. இதுதான் கம்யூனிஸ்ட்களின் தமிழர் பாசமா?

Monday, May 9, 2011

கோபாலபுரம் கலைஞர் பவன் 2006-11 சிறப்பு அயிட்டங்கள்

சென்னையில், அடையாறு ஆனந்தபவன், உடுப்பி கிருஷ்ண பவன், சென்னை சரவண பவன், மதுரை முனியாண்டி விலாஸ் முதலியன, தங்கள் தயாரிப்புகளுக்கு பெயர் பெற்றவை. அதேமாதிரி, கோபாலபுரம் கலைஞர் பவன், 2006-11ல் தயாரித்த சிறப்பு மெனுக்களில், சிலவற்றை, வாசகர்களுக்கு வழங்கவே இந்த தலைப்பு.

மெனு 1: கடந்த, 2008ல், தி.மு.க., சார்பில் ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, வசந்தி ஸ்டான்லி, 2007ல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், போலி ஆவணங்கள் கொடுத்து, 3.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு உள்ளது.இதில் வேடிக்கை என்னவென்றால், வழக்கே, போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி என்பதால், கைது செய்யப்படாமல் இருக்க, முன் ஜாமினுக்கு நிறுத்திய பிணைதாரர் போலி, அவர் ஆவணமும் போலி என்பதும் வேறு கதை.

மெனு 2: ஈரோடு மாவட்ட தி.மு.க., செயலர், ஜவுளித்துறை அமைச்சர், என்.கே.கே.பி.ராஜா மீது, ஆள் கடத்தல், சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு வழக்கு ஒன்று, ஆகஸ்ட், 2008ல், சென்னை, ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது; வழக்கு மிகவும் வலுவாக இருந்தது. நீதிமன்றம் கடுமையான கண்டனங்களை அரசு மீது வீசும் என்ற நிலை உருவானது.வேறு வழியில்லாமல், ராஜாவை அமைச்சர் பதவியிலிருந்து கருணாநிதி வெளியே அனுப்பினார். மந்திரிகுமாரி, அரசிளங்குமரி என்ற ராஜா கதைகளின் மூலம் பிரபலமான கருணாநிதிக்கு, அரசியல் வாழ்வில், "ராஜாக்கள்' தான் வில்லன்களாகி இருக்கின்றனர்.

மெனு 3: ஊழல் வழக்கில் சிக்கிய தன் சொந்தக்காரரை, விடுவிக்க வேண்டுமென, மாநில தலைமை ஊழல் தடுப்பு அதிகாரிக்கே, போன் செய்தார் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா. ஒரு குறும்புக்கார அதிகாரி, இப்பேச்சை, "டேப்' செய்து, பத்திரிகையில் கசிய விட்டார்; புயல் வெடித்தது. பத்திரிகைகள் விரைவதற்கு முன், கருணாநிதி விரைந்து, பூங்கோதையின் பதவியை பறித்தார். அந்த, "சிடி'யில் சிக்கிய பூங்கோதை, இன்று மிகப்பெரிய ராடியா டேப்பில் தப்பித்து வருகிறார் என்பது வேறு கதை.

மெனு 4: சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன். கன்னியாகுமரியில், கலர், "டிவி' வினியோகத்தில், தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் கொடுக்க, சப்-கலெக்டரை நிர்பந்தித்தார். வாக்குவாதம் முற்றி, கைகலப்பு மற்றும் ஜாதிப் பெயர் தூற்றல் நடந்தது. அரசு அதிகாரிகளுக்கு ஆதரவாக அரசு ஊழியர்களும், மக்களும் திரண்டனர். அமைச்சர் மற்றும் ஆட்கள் மீது எப்.ஐ.ஆர்., போடப்பட்டது. ஆனால், அதற்கு ஆன காலம் இரண்டு மாதம். எஸ்.சி., - எஸ்.டி., சட்டப்பிரிவுகளில் போடப்பட்ட வழக்குகள் பின்னால் நீக்கப்பட்டன.

Friday, May 6, 2011

ராகுலை நம்பி இளைஞர்கள் போகலாமா?

இளைஞர்களே... அரசியலுக்கு வாருங்கள்! எந்த ஊருக்கு போனாலும், ராகுல் இந்த அழைப்பை சொல்லத் தவறுவதில்லை. அவர் உண்மையிலேயே அழைக்கிறாரா? இவரை நம்பி இளைஞர்கள் போகலாமா? இப்படி நம் மனதில் கேள்விகள் எழுவது இயற்கைதான்!

மத்திய பிரதேசத்தில், மீனாட்சி நடராஜன் என்ற தமிழரை, எம்.பி., ஆக்கவில்லையா... தமிழகத்தில், இளைஞர் காங்கிரசுக்கு, 10 சீட் பெற்றுத் தரவில்லையா... ராகுலை நம்ப, இதற்கு மேல் ஆதாரம் வேண்டுமா? இது எந்த அளவுக்கு உண்மை? 

ராகுலே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம், விடிவெள்ளி, எதிர்காலம் என ஊடகங்களும், பத்திரிகைகளும் போட்டி போட்டு, மாறி மாறி, "ஏற்றி விட்ட உசுப்புகளுக்கு' இவர் உகர்ந்தவர்தானா, தகுந்தவர்தானா? 

வறண்ட இந்தியாவை, வளர்ந்த இந்தியாவாக மாற்ற, பல நீர் மேலாண்மை ஜாம்பவான்கள், நதிகள் இணைப்பு என்ற திட்டம் தீட்டி கொடுத்ததை, வல்லவர் வாஜ்பாய் அமல் செய்ய நினைத்தபோது, ஆட்சி மாறியது. ஒரே வீச்சில், ஒரே பேச்சில், நதிகள் இணைப்புக்கு, ராகுல் தடை சொன்னபோது, அவரது முதிர்ச்சியின்மையின் முதல் வெளிப்பாடு. 

ஏழை இந்தியா, பணக்கார இந்தியா என இந்தியா இரண்டாக உள்ளது என்றார் ராகுல். இதற்கு யார் காரணம்? 50 ஆண்டுகள் தொடர்ந்து ஆண்ட உங்கள் குடும்பமா என்றபோது, பதில் சொல்ல வார்த்தையின்றி தவித்தது இரண்டாம் வெளிப்பாடு.

கேரள முதல்வர், "அச்சுவை' வயதை காரணம் காட்டி இகழ்ந்தார். தனது கூட்டணியில், 86 வயது கருணாநிதியை வைத்துக் கொண்டு... இது, மூன்றாம் வெளிப்பாடு.

இது ஒருபுறமிருக்க, அழைக்கும் இளைஞர்கள் உழைக்க, இவரால் உகந்த இடம் தர முடிந்ததா? கடந்த, 2009 லோக்சபா தேர்தலில் மத்திய அமைச்சரவையை தீர்மானிக்கும் இடத்தில் இவர் இருந்தார். இந்த வல்லமையை இவர் எப்படி பயன்படுத்தினார்? யார் யாருக்கெல்லாம் சீட்டு கொடுத்தார்... அமைச்சர் பதவி கொடுத்தார்... பார்த்தோமென்றால், இவர் மீது இருக்கும் பரவசங்கள் பறந்து போகும்.

காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற, 208 பேரில், 78 பேர் பரம்பரை குடும்ப அரசியல்வாதிகள். இதில், 19 பேர், குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அமைச்சர் எம்.எல்.ஏ., எம்.பி.,யாக உள்ளனர். இவர் டிக்கெட் கொடுத்த இளைஞர் காங்கிரசை சேர்ந்த, 30 வயதிற்குட்பட்ட, 33 எம்.பி.,க்களுக்கும், முழு அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 

மன்னராட்சி மறைந்தது உண்மைதான். ஆனால், மன்னராட்சியில் இருந்த வாரிசு அரசியல், ஜனநாயகத்திலும் தொடர்கிறது. இப்பிரிவிற்கு காங்கிரஸ் தலைமை வகிக்கிறது. 

இந்திராவிற்கு பேரனாகவும், ராஜிவுக்கு மகனாகவும் பிறக்காமல் போயிருந்தால், காங்கிரசில் இவர் இருக்கும் இடம் யாருக்கு தெரிந்திருக்கும்?

Icon

Tuesday, May 3, 2011

குறைகள் மட்டும் தானா, நிறைகளே இல்லையா?

"ஐந்து ஆண்டு கால, தி.மு.க., ஆட்சியில் நிறைகளே இல்லையா? குறைகள் மட்டும் தான் கண்களுக்கு தெரிகிறதா' என, பலதரப்பில் இருந்தும் கேள்விகள்? எழுகின்றன. வேறு எவரும் செய்ய முடியாத, தி.மு.க.,விற்கே உரித்தான சில சாதனைகள் இக்கேள்விக்கு பதிலாய் கண்முன்னே விரிகிறது.

நான் குறிப்பிடும் திட்டத்தில், உண்மையான பயனாளிகள் எவ்வளவு பேர் பயன் பெற்றனர் என்பதை விட, இத்திட்டத்தை எப்படி திண்மையோடு, தி.மு.க., செய்திருக்கிறது என்பது தான் பாராட்டுதலுக்குரிய விஷயம்.கடந்த ஐந்தாண்டுகளாக, முதியோருக்கான நலத்திட்ட உதவித்தொகைகளை, 10 லட்சத்து, 45 ஆயிரம் பேருக்கு வழங்கி வருகிறது. அதாவது, 10.45 லட்சம் பயனாளிகளை கண்டுபிடித்து, திட்டத்தில் சேர்த்து உதவி வருகிறது. இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? இதே திட்டத்திற்கு, கடந்த ஜெயலலிதா ஆட்சியில், பயனாளிகள் எண்ணிக்கை வெறும், 63 ஆயிரம் மட்டுமே!

இந்திரா காந்தி தேசிய விதவைகள் பென்ஷன் திட்டம், இந்திரா காந்தி தேசிய ஊனமுற்றோர் பென்ஷன் திட்டம், மாநில முதியோர் பென்ஷன் திட்டம், மாற்றுத் திறனாளிகள் உதவித் திட்டம், ஆதரவற்ற விதவைகள் உதவித் திட்டம், ஆதரவற்ற விவசாயக் கூலிகள் உதவித் திட்டம், 50 வயதாகியும், திருமணமாகாத ஆதரவற்ற பெண்கள் பென்ஷன் திட்டம் என, திட்டங்களின் பட்டியலும் பெரியது.

இதில், இந்திரா காந்தி தேசிய முதியோர் பென்ஷன் திட்டம், 5.1 லட்சம் பயனாளிகள். விதவைகளுக்கான பென்ஷன் திட்டம், 30 ஆயிரத்து 859; உடல் ஊனமுற்றோர் நிதி உதவி, 3.4 லட்சம் பேர் என, பயன்பெற்றோர் பட்டியலும் பெரிதாய் நீள்கிறது.

இத்தனை திட்டத்திற்கும், ஆட்களை கண்டுபிடித்து, கட்சிக்கு ஓட்டு சேர்ப்பது மாதிரி சேர்த்து, அவர்களுக்கு நிதியுதவி செய்வது பாராட்டுக்குரியது. இன்னொருபுறத்தில், அரசின் உதவிகளை பயன்படுத்தி, ஒரு வலுவான ஓட்டு வங்கியையே உருவாக்க முடியும் என்பதை, தி.மு.க.,விடம் மற்ற கட்சிகள் கற்றுக் கொள்ள வேண்டும்

இது போலவே, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நடத்தியது தான் பெரும் சாதனை. இதில் என்ன பெருமை இருக்கிறது? இதனால், தமிழுக்கு என்ன நன்மை விளைந்தது? கோவைக்கு தான் கட்டமைப்பில் என்ன வியத்தகு வளர்ச்சிகள் ஏற்பட்டன? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கலாம். இக்கேள்விகளுக்கெல்லாம், திருப்திகரமான பதில் இல்லை தான்.

ஆனாலும், அரசு செலவில் தி.மு.க., நடத்திய, பிரமாண்டம் வியக்க வைத்தது. திரும்பிய திசையெல்லாம் மக்கள் வெள்ளம். ஏதோ ஒப்புக்கு ஆராய்ச்சி, ஒப்புக்கு கருத்தரங்கம் என்றாலும் கூட, "எல்லா புகழும் கலைஞருக்கே' என்ற நெடியே தூக்கலாக இருந்திருந்தாலும் கூட, தமிழகத்தையே கோவையில் கூட்டி விட்டனர்.

அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட, குறிப்பாக, ஜெயலலிதா கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்று கருணாநிதியிடம் உண்டு... முதலமைச்சர் வருகிறார் என்ற காரணத்திற்காக போக்குவரத்தை நிறுத்தி, நெரிசல் ஏற்படுத்தி, பொதுமக்களின் பொல்லாங்கை, வயிற்றெரிச்சலை கருணாநிதி கொட்டிக் கொள்ளவில்லை.

உள்ளாட்சித் துறையிலிருந்து, பின்னாளில் துணை முதல்வராக உயர்ந்த அவரது புதல்வர் ஸ்டாலினும், இவ்வகையில் தந்தை வழியே பின்பற்றினார். அதிக படாடோபமின்றி, ஆடம்பரம் இன்றி, இருந்தது மட்டுமல்ல, தன் வருகையால் பொதுமக்களுக்கு, "டார்ச்சர்' கொடுக்கவில்லை.

அமைச்சர்களை சந்திப்பது, மன்னர்களை சந்திப்பது போல் சிரமமானது என்பது தமிழகத்தில் மட்டும் தான். ஆனால், வாஜ்பாய் காலத்தில், பிரதமரை சந்திப்பதே மிக எளிதாக இருந்தது. தமிழக முதல்வரை சந்திப்பது குதிரைக் கொம்பானது என்ற நிலையை மாற்றிய பெருமை கருணாநிதிக்கு உண்டு.அடுத்து வருபவர்களும், இந்த பெருமைக்குரியவர்களாக இருந்தால், தமிழ் மக்களுக்கு நல்லது தானே!

Monday, May 2, 2011

கருணாநிதியும், தர்மபுத்திரனும்...

"ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில், மத்திய அரசின் செயல்பாடுகள், தி.மு.க., விற்கு சங்கடத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, கருணாநிதி அளித்த பதில்,"மகாபாரதத்தில், தர்மருக்கு ஏற்பட்ட சங்கடம் தி.மு.க.,விற்கு ஏற்படாது(தி.மு.க., என்பதும், கருணாநிதி என்பதும் ஒன்றுதானே) அந்த சங்கடம் என்னவென்று, நான் விவரிக்க விரும்பவில்லை' என, சொல்லியிருக்கிறார்.


தருமனுக்கு ஏற்பட்ட சங்கடம் என்ன? எனக்கு தெரிந்து பாரதத்தில் சொல்லப்படுவது இரண்டு. ஒன்று, கவுரவர்களின் தலைநகரான ஹஸ்தினாபுரம். அதாவது, இன்றைய டில்லி. அங்கு சூதாட வருமாறு பாண்டவர்களுக்கு துரியோதனன் அழைப்பு விடுக்கிறான். அன்றைய ராஜ மரபுப்படி, சூதாட்ட அழைப்பை ஒரு அரசன் விடுத்தால், அதை மற்ற அரசன் ஏற்க வேண்டும் என்பது விதி.


சகுனியின் சூதாட்டத்தில் யாரும் வெற்றி பெற முடியாது என்பதும், சூதாட்டத்தை வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் வைத்திருக்கிற பாண்டவர்கள், நிச்சயமாக தோல்வியுறுவர் என்பதை தெரிந்த துரியோதனன், தர்மபுத்திரனை நயவஞ்சமாக ஹஸ்தினாபுரத்திற்கு அழைக்கிறான். அங்கு வந்த, தர்மபுத்திரன் தோல்வியுறுகிறான்.


காங்கிரஸ், டில்லிக்கு தங்களை வஞ்சகமாக அழைத்து, "ஸ்பெக்ட்ரம்'சூதாட்டத்தில் ஈடுபடுத்தி வழக்கு, விசாரணை, கைது, பத்திரிகைகளில் அவப் பெயர், தேர்தலில் தோல்வி ஏற்படுத்தும் முயற்சி இவைகளை செய்கிறது. இந்த முயற்சிகளில் காங்கிரஸ் வெற்றி பெற முடியாது.
தி.மு.க.,விற்கும், கலைஞர் "டிவி'க்கும், தயாளு, கனிமொழி, கடைசியாக ராஜாவிற்கு சங்கடங்களை ஏற்படுத்த முடியாது ---என, டில்லிக்கு இதன் மூலம் சொல்கிறாரா? மகாபாரத கதை மூலம் காங்கிரசிற்கு எச்சரிக்கை விடுகிறாரா?
இரண்டாவது... சூதாட்டத்தில் பணயம் வைத்து தோற்ற பின், இழுத்து வரப்பட்ட திரவுபதி துகிலுரியப்படும்போது, தர்மபுத்திரரும் அவரது தம்பிமார்களும் வாளாவிருக்கின்றனர். தருமனுக்கு ஏற்பட்ட இந்த சங்கடத்தை கருணாநிதி குறிப்பிட்டிருக்க முடியாது.


ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை விசாரிக்கும் பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுவின் தலைவர், பா.ஜ., வை சேர்ந்த முரளி மனோகர் ஜோஷி. மொத்தமுள்ள, 21 உறுப்பினர்களில், காங்கிரசிற்கு ஆதரவாக 10 பேர், எதிராக 11 பேர். அந்த எதிர் ஓட்டில் உத்தரபிரதேசத்தில் எதிரும், புதிருமாக உள்ள முலயாம்சிங்கின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஒரு உறுப்பினர்களை காங்கிரசிற்கு ஆதரவாக மாற்ற பெரும் விலை பேசப்பட்டது. 
அதன் விளைவு, வரைவு அறிக்கை நிராகரிக்கப்பட்டு, அடுத்த தந்திரம் அரங்கேறியுள்ளது.


"தந்திர பூமி' என்ற தலைப்பில், டில்லியைப் பற்றி நாவலாசிரியர் இந்திரா பார்த்தசாரதி ஒரு நாவல் எழுதியிருந்தார். அந்த, "தந்திர பூமியில்' தற்போது, தி.மு.க.,வின் ராஜதந்திரம் தடுமாறி நிற்கிறது. இப்படிப்பட்ட தந்திர பூமியின் நிஜாம்கள் தனக்கெதிராக நகர்த்தும் காய்களை, தவிடு பொடியாக்குவேன் என்பது மட்டும், கருணாநிதியின் செய்தியாக இருக்க முடியாது.


இவர் தர்மனானால், ஹஸ்தினாபுரம் டில்லி ஆனால், காங்கிரஸ், துரியோதனனும், கவுரவர்களும் தானே! தர்மபுத்திரருக்கு ஏற்பட்ட சங்கடம் தனக்கு ஏற்படாது என இவர் கூறுவதன் மூலம், இவரை தர்மபுத்திரருக்கு ஒப்பிட்டுக் கொள்கிறார்.


இதிகாச புராணங்களை எட்டிக் காயாய் வர்ணித்தாலும், அக்கதாபாத்திரங்களில் தன்னை உவமானப்படுத்தி, அடி மனதில் சந்தோஷம் காண்கிறார். 

கடுமையான சிக்கலில் மாட்டித் தவிக்கும் இவருக்கும், இவர் குடும்பத்தினருக்கும், கட்சிக்கும் ஒரு ஆறுதல், இவர், தன்னை தானே தருமபுத்திரரோடு ஒப்பிட்டு கொண்டது மட்டும் தான்.