Pages

Monday, December 12, 2016

அண்ணா தி.மு.க. உடையக்கூடாது

"ஜெ"’க்கு பின்னால் தமிழ்நாட்டு ஆளும் கட்சியான அதிமுக என்கிற இரும்புக் கோட்டையின் எத்தனை கதவுகளில் வரும் வாரங்களில் விரிசல் விழுந்திருக்கும் என்று தெரியவில்லை! ஆனால் அதை ஏற்படுத்த முயல்பவர்கள் அதிமுகவிற்கு வெளியே உள்ளவர்களை விட அதற்குள்ளே இருப்பவர்கள்தான் அதிகம் என்று நான் நினைக்கிறேன்.

அதிமுக என்பது பாஜகவின் கூட்டுக் கட்சிதான். கொள்கை ரீதியாக இரு கட்சிகளுக்கும் இடையே பெரிய இடைவெளி கிடையாதுதான். அதிமுக வாக்காளர்களில் பெரும் பகுதி பாஜக ஆதரவாளர்கள் தான்!

ஆனால் தேர்தல் என்று வந்துவிட்டால் அதிமுக, பாஜகவிற்கு எதிராகவே செயல்பட்டு வந்திருக்கிறது ஒரு சில சமயம் தவிர.

‘தற்போது மிகச் சரியான சந்தர்ப்பம் அடைந்திருக்கிறது. வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜெ என்கிற மாபெரும் தலைவியை இழந்து அதிமுக தளபதி இல்லாத ராணுவம் போல, தாய் இல்லாத குழந்தை போல தடுமாறுகிறது.

இந்நிலையில் மத்தியில் வலுவானதொரு ஆட்சியும் மிகப் பலமான மோடி என்கிற பிரதமரும் கொண்ட கட்சியாக இருக்கும் பாஜக, அதிமுகவை கபளீகரம் செய்வது தானே நியாயமாக இருக்கும். ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரத் துடிக்கும் பாஜகவிற்கு இதை விட்டால் வேறு ஏது சந்தர்ப்பம் கிடைக்கும்?’ என நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது.

இப்படி சிந்திக்க வேண்டிய நீங்கள் அதிமுக உடையக்கூடாது என கவலைப்படுவது வியப்பாக இருக்கிறது என நினைப்பதும் எனக்கு புரிகிறது! 

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது நானும் மறைந்த ஜனா.கிருஷ்ணமூர்த்தியும் 
கே.என்.லட்சுமணனும் தேர்தல் பிரச்சாரம் முடிந்து சேலத்தில் தங்க நேரிட்டது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஜனாவிடம் ஒரு கேள்வி கேட்டார். ஐயா! ராஜீவ் காந்தியின் மரணம், பாஜகவின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய லாபம் அல்லவா?" என்றார்.

ஒருவரின் மரணத்தில் அரசியல் லாபம் பார்க்கும் கட்சியல்ல பாஜக" என்றார் ஜனா.
அதையே தான் தற்போது நான் சொல்கிறேன். அதிமுக என்பது தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு மக்களால் புறக்கணிக்கப்பட்டு பலமிழக்குமானால் அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை.

ஆனால் பதவி வெறி பிடித்தவர்கள், அதிமுகவின்   அரசியல் புரோக்கர்கள், ஜெவிற்கு எடுபிடியாக இருந்த வர்திகளாலேயே அதிமுக உடைந்து விடக்கூடாது என மக்கள் நினைக்கிறார்கள்.

திமுக என்கிற தேசிய விரோத, ஹிந்து விரோத, ஊழல் கட்சியை விரட்டவே தேசிய நோக்கமும் தெய்வபக்தியும் கொண்ட எம்ஜிஆர் அண்ணா திமுகவை உருவாக்கினார்.

மூகாம்பிகையின் தீவிர பக்தரான எம்ஜிஆர் திராவிட இயக்கத்தின் ‘கடவுள் மறுப்பு’ அஸ்திவாரத்தை தகர்த்தெறிந்தார்.

வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என கோஷமிட்டு, ஹிந்தி ஆதிக்கத்தை ஒழிக்கிறேன் எனச் சொல்லி தன் குடும்ப உறுப்பினர்களை மட்டும் ஹிந்தி படிக்க வைத்து, தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து தனிமைப்படுத்தப் பார்த்த திமுகவிற்கு முற்றும் எதிராக, எம்ஜிஆரின் கண்ணோட்டம் அகில இந்திய அளவில் இருந்தது.

எம்ஜிஆருக்குப் பிறகு ஜெ அடுத்த வாரிசாக அதிமுகவில் முடி சூடப்படவில்லை. எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு நாவலர் நெடுஞ்செழியன் இடைக்கால முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் அவரை  நிரந்தர முதல்வராக்காமல், ராஜீவ் காந்தி  அதிகாரத்தை பயன்படுத்தி எம்ஜிஆரின் மனைவி வி.என். ஜானகியை முதல்வராக்கினார். 18 நாள் கூட நீடிக்காத அவரது ஆட்சியை டிஸ்மிஸ் செய்து ஜனாதிபதி ஆட்சியை பிரகடனம் செய்து, அதிமுகவை ஜெ-ஜா என இரண்டாக உடைத்தது ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் கட்சி.

பாஜக மறைந்த ஜெவுக்கு இறுதி சடங்கிற்கு பீரங்கி வண்டியை டெல்லியிலிருந்து ஏர்லிப்ட் செய்தது. நாடாளுமன்ற இரு அவைகளையும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற ஒத்தி வைத்தது. இது எம்.ஜி.ஆருக்குக் கூட செய்யாதது.

மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் போட்டு பாராட்டுரை வாசித்தது, மாநில முதல்வராக அதிமுக விரும்புபவர் சுமுகமாக தேர்வு பெற உதவியது என்பது பாஜகவின் பெருந்தன்மை!

இந்நிலையில் ‘ஜெ’யின் எழுச்சி பல்வேறு போராட்டங்களில் தழும்புகளை பெற்றே வெற்றி கண்டது.

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு ஜாதியை பிசாசாக, பேயாக காண்பித்து ஆட்சியை பிடித்த திமுக, பார்ப்பனர்களை எதிர்க்கிறோம் எனச் சொல்லி தன் குடும்பத்து பையன்களுக்கு பார்ப்பனக் குடும்பப் பெண்களை மருமகளாக்கி மக்களை ஏமாற்றியது. திமுக -

ஜெ, அதிமுக பொதுச் செயலாளரானவுடன் திராவிடக் கட்சிகளின் பார்ப்பன எதிர்ப்பு பஸ்பமாகிப் போனது. இந்திய அரசியலில் திருப்புமுனை ஏற்படுத்திய அயோத்தி ராமர் ஆலய போராட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் போலி மதசார்பற்ற வாதிகளாகி ராமபிரானுக்கு கோயில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, ஜெ மட்டுமே ஒரே வீரப் பெண்மணியாக, ராமனுக்கு அயோத்தியில் கோயில் எழுப்பாது அரேபியாவிலா எழுப்ப முடியும்?" என ஆணித்தரமாக முழக்கியது திராவிட இயக்கங்களின் போலி மத சார்பற்ற தன்மையை குழி தோண்டிப் புதைத்தது. 

திமுக என்கிற தீய சக்தி ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்கிற எம்.ஜி.ஆரின் போராட்டத்தை அவருக்குப் பின் தலைமையேற்று நடத்தி அதில் தொடர்ந்து வெற்றி கண்டவர் ஜெ.

கடவுள் மறுப்பு, தேசிய எதிர்ப்பு, பிராந்திய வெறி, தமிழ் ஆதரவு என்னும் பெயரில் பிறமொழி எதிர்ப்பு, ஊழல், குடும்ப ஆட்சி என்னும் திமுகவின் நிலைப்பாடுகளை தகர்த்தெறிய உருவாக்கப்பட்டதே அதிமுக.

ஆனால் இந்த கொள்கைகள் முன்னிலைப்படுத்தப்பட்டு இவைகளை காக்க இனி அதிமுக முயலுமா? அல்லது எரிந்த வீட்டில் பிடுங்கிய வரையில் ஆதாயம் என்னும் வகையில் பதவிப் போட்டி, ஆட்சி வெறி, பண பலம், அரசியல் சகுனித்தனம் இவைகளில் சிக்குண்டு, அதன் இன்றைய தலைவர்கள் அதிமுகவை சீரழிக்கப் போகிறார்களா?

திமுகவிற்கு எதிராக மிகப் பெரிய வாக்கு வங்கியை எம்ஜிஆர்  உருவாக்கினார். அவருக்குப்பின் ஜெ அதை இன்னும் அதிகப்படுத்தினார். தமிழக வரலாற்றில் எம்ஜிஆருக்குப் பிறகு 2வது முறையாக மீண்டும் ஜெ தற்போது ஆட்சியைப் பிடித்தார். இது தமிழக மக்கள் தேசியத்திற்கும் தெய்வீகத்திற்கும் கொடுத்த ஆதரவு. இந்த கோடிக்கணக்கான வாக்காளர்களின் உள்ளக் கிடக்கையை அதிமுக தலைவர்கள் ஒற்றுமையாக இருந்து பூர்த்தி செய்ய வேண்டும்.

திமுகவிற்கு எதிரான ஒரு பிரம்மாண்டமான சக்தியான அதிமுகவானது, காங்கிரஸ், திமுக, அரசியல் புரோக்கர்கள் சூழ்ச்சியில் சிக்கி உடைந்து சிதறிப் போய்விடக் கூடாது.

மக்கள் ஆதரவில்லாமல் அதிமுக மடியுமானால் அது வேறு விஷயம். ஆனால் உட்கட்சி பூசலால் உடைந்து சின்னாபின்னமானால் அது எம்ஜிஆருக்கும் ஜெவுக்கும் செய்யும் துரோகம்.

அது தமிழ்நாட்டு வாக்காளர்களின் நம்பிக்கைக்கு செய்யும் துரோகமுமாகும்.
எஸ்.ஆர்.சேகர்.

No comments: