Pages

Wednesday, November 16, 2011

சீமான்களுக்கு சீமைசரக்கு தரும்--—சீஃப் மினிஸ்டர்

சீமான்களுக்கு சீமைசரக்கு தரும்--—சீஃப் மினிஸ்டர்

ரேடியோ மிர்ச்சியில் இன்றுகாலை “சீமை சரக்குக் கடைகள் “( ELITE WINE SHOPS) பற்றி ஒரு கேலி விமர்சனம் கேட்டேன்.
“ஜெ” ஒரு controversy யின் கட்டாகவே ( bundle ) மாறி வருகிறார்..சமச்சீர் கல்வி---சட்டசபை கட்டிடம்—அண்ணா நூலகம்—இப்போது புதிதாய் 200+600—புதிய சாராயக்கடைகள்..திறப்பு அறிவிப்பு..


கீழ்த்தட்டு மக்களுக்கும் நடுத்தட்டு மக்களுக்கும் “டாஸ்மாக் “ மூலம் ”சாராய சேவை”—நடந்து வருகிறது..நடுமேல் தட்டு மற்றும் மேல்தட்டு மக்களுக்காகவே சீமைசரக்குக் கடைகளை அம்மா திறக்க இருக்கிறார்..
இவை முடிந்தவுடன் அடுத்த கட்டமாக..பெண்கள் குழந்தைகளுக்கான “சிறப்பு சாராய கடைகளை “ திறக்க அம்மா உத்தரவிடுவார்..
இது ரொம்ப “ ஓவராக “ இருப்பதாக நினைக்கவேண்டாம்—இந்த அரசின் “பணப்பசிக்கு “இது மட்டுமல்ல—இதற்கு மேலும் நடந்தாலும் நடக்கும்.

ஒரு அரசாங்கத்தின் கடமைகள் மூன்று—
1—ஒழுங்குபடுத்தல்—(REGULATORY )

தொலை தொடர்பு—வர்த்தகம்—போக்குவரத்து போன்ற துறைகளில் செயல்பாடுகளை நெறிமுறை படுத்தும்—ஒழுங்கு படுத்தும் வேலைகளை அரசு செய்ய வேண்டும்—செய்கிறதா?

2—வளர்ச்சி—( DEVELOPMENT)
1991 ஆம் ஆண்டுவரை நாட்டின் மொத்த வருமானத்தை ஜி.டி.பி.ஆல் வகுத்தால் தனி மனித வருமானம் என்றிருந்தது..இது உண்மையில் எல்லாதரப்பு மக்களின் வருமனத்தையும் பிரதிபலிக்க வில்லை.(.இன்று கூட நம் நாட்டின் தனிமனித வருமான்ம் ரூ.30 என மாண்டேக் சிங் அலுவாலியாவும்..இல்லை என வேறு சிலரும் கூறுவதை நாம் கேட்க முடிகிறது)..

ஆகவே பாகிஸ்தானின் பொருளாதார மேதை “மெஹ்பூப் உல் ஹக் “—அவர்களின் மனித வளர்ச்சிக்கான சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டு—உண்மையான வளர்ச்சி எது என்பது மாற்றி அமைக்கப்பட்டது..

இன்று மிகப்பெரும் பொருளாதார வளர்ச்சி—ஒரு பக்கம் அம்பானிக்கள்—அஜிஸ் பிரேம்ஜிக்கள்—மறு பக்கம் அன்னாடம் காய்ச்சிகள்—தினசரி கூலிகள்—என ஏற்ற தாழ்வுகள் “மலைக்கும் மடுவுக்கும் “ உள்ள இடைவெளியாகிவருகிறது..

இச்சூழலில் 10 ஆம் வகுப்பு பெயிலான ராமசாமியால்—எம்.பி.ஏ.பாஸ் செய்த ரமேஷோடு எப்படி போட்டியிடமுடியும்..ஆண் –பெண் பாகுபாட்டினால் எற்படுத்தபட்ட போட்டி—படிப்பு—அந்தஸ்து—ஜாதி—மதத்தால்—எற்படுத்தப்பட்ட போட்டி—இவைகளால் “வளர்ச்சி “ எல்லோருக்கும் எப்படி சமமாக போய்ச்சேர முடியும்.... இதை சரிப்படுத்துவதே அரசின் கடமை—வேலை—பணி—இதைச் செய்கிறதா நம் அரசு?

3—மக்கள் நலன்,,-(WELFARE )
அரசின் மிக முக்கிய பணி மக்கள் நலன்--..வளர்ச்சியை முக்கிய அங்கமாக செய்யும் அரசு –அதை முழுவதும் சமமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்லும் காலம் வரை “வீழ்ந்து கிடக்கும் குடிமகனை “—தூக்கிவிட ஏதுவாக –இலவசங்கள்—கல்வி..வேலை வாய்ப்பில் இடஒதிக்கீடு—மான்யங்கள்—தர வேண்டும்..

இதில் அரசின் –பங்காக—பணியாக—வேலையாக—கடமையாக—”சாராயம் “ எங்கே வந்தது?—

பொருளாதாரத்தில் வீழ்ந்து கிடக்கும் குடிமகனை சாராயத்தினால் வீழ்த்தி—நிரந்தரமாக “வீழ்ந்து கிடக்கும் “”குடி “ மகனாக “அரசு ஏன் ஆக்கவேண்டும்?—

நலத்திட்டங்களுக்கும் வளர்ச்சிப்பாதையில் செல்லவேண்டிய திட்டங்களுக்கும்,,பணம் திரட்ட வேறு வழியே கிடையதா?—

ஆம்—உண்டு—இருக்கு—எஸ்---

பின் ஏன் முந்தைய கருணா அரசும் இன்றைய “ஜெ” அரசும் சாராயத்தை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டு இருக்கிறது?
மதுவிலக்கு இருந்தும் கூட பொருள் திரட்டும் “குஜராத்தை பாருங்கள் “ என்று நாம் அடிக்கடி சொல்லவேண்டுமா?

3 நாளைக்கு முன் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் ஒரு புள்ளிவிவரம் வெளிவந்தது..அதில் 2011—அக்டோபர்-- நவம்பர் –மாத “டாஸ்மாக்’ விற்பனை உயர்வு---16.78-சதம்----டாஸ்மாக்குக்கு சப்ளை-செய்யும் “டிஸ்லரிகள்”—அவைகளில் “பேராசைகாரன் “—தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என்னும் வரம் கேட்ட  “மிடாஸ் “என்ற மைதாஸ் பெயர் கொண்ட டிஸ்ட்லரி—ஜெ வுக்கு சொந்தம்—(இதை ஜெ பலமுறை மறுத்திருக்கிறார்.இருந்தாலும் உண்மை ஊரறியும்.).இதன் விற்பனை உயர்வு 34 சதவீதம்---இப்போது புரிகிறதா சாராயம ஏன் தொடர்கிறது என்று..-

இந்த லாபங்கள் யாருக்கு போகிறது---ஜெ யிக்கு..

மக்கள் நல திட்டங்களை செயல் படுத்த அரசுக்கு வருவாய் ஈட்ட—வேறு வழி தெரியவில்லை—எனவேதான் சாரயங்கள் தொடர்கிறது..”டாஸ்மாக்” திறந்திருக்கிறது..பெருந்தனக்காரர்கள்—சீமான்களுக்காக---சீமை சரக்கு கூடங்களை சீஃப்மினிஸ்டர் திறக்க இருக்கிறார்..இதன் மூலம் அதிக வருவாய் வருமல்லவா?—அதன் மூலம் அரசு--- நலத்திட்டங்களை செயல் படுத்தலாமல்லவா?—
இது உண்மையா?—

அரசுக்கு வருவாய் எனபதை விட அம்மாவுக்கு வருவாய்—ஆள்பவர்களுக்கு வருவாய்—எனபதே உண்மை..

மாறாக இந்த சாராய வியாபாரத்தால் சந்திக்கும் சமூக கொடுமைகள் என்ன என்ன??—மாற்ற முடியா பாதிப்புக்கள் என்னென்ன?

ஓட்டுரிமை வயது 18—ஆனால் குடிமகனின் வயது 13 ஆக குறைந்துள்ளது..(என்னே சாதனை )..
ஆண்டுக்கு 18 சதவீதம் புதுக்குடிகாரகள் உருவாகிறார்கள்..( என்னே வளர்ச்சி )—
தமிழக ஜனத்தொகையில் இன்று பாதிபேர் “குடிகாரர்கள்” –

விளைவு?
மனைவியை—குழந்தைகளை—அடித்து துன்புறுத்தும் “குடிகார “கணவன்கள் எண்ணிக்கை “விர்” ரென உயர்ந்து வருகிறது..

சம்பளம் முழுவது சரக்குக்கே செலவிடுவதால்—குடும்பச்சுமையை தாங்க வேலைக்கு போகும் சிறுவர்கள்..

குடும்ப அமைதி சீர்குலைவால் “விவாக ரத்து “கேட்கும் மனைவிமார்கள்—

நிரந்தர குடியால் உடல்நிலை கெட்டு சீக்கிரமே சிவலோக பதவி அடையும் கணவன் மார்கள்.—
அதனால் இளம்விதவைகள்..பெருகும் அபாயம்..

சாரயம் கொடுத்த தையிரியத்தால் –வழிப்பறி—கொள்ளை—கொலை—என பெருகி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு..( இதை கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் திருமதி.ஹேமா கருணாகரன் நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்)..

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் பெருகி வரும் சாலை விபத்து மரணங்கள்—

இவ்வளவு நன்மைகள் இருப்பதால்தான் அரசு “சீமான்களுக்காக”—புதிய சீமை சரக்கு கடைகளை திறக்கிறதோ?

இப்போது ஆரம்பித்தால் கூட மதுவை ஒழிக்கவும்---மது தங்களை ஒழிப்பதற்க்குள் அவர்களை காப்பாற்றவும்—அதற்கான சிகிச்சைகளை ஏற்படுத்தி—மறுவாழ்வு இல்லங்களை ஏற்படுத்தி—மக்களை ஆரோக்கிய பாதைக்கு கொண்டுவரவும் –இன்னும் 20திலிருந்து 30 ஆண்டுகள்வரை  ஆகும்.

இந்நிலையில்..சீமை சரக்கானாலும் சரி—நாட்டுச்சரக்கானாலும் சரி—சீமானுக்காகவும் சரி—சாமான்யனுக்காகவும் சரி—மேலும் மதுக்கடைகளை திறக்கக் கூடாது---மது விற்பது அரசின் வேலை அல்ல..

 

No comments: