Pages

Monday, October 4, 2010

கலைஞரின் பட்டுடை மஹாத்மியம்

தஞ்சை பெரிய கோயில் 1000 ஆவது ஆண்டு விழாவில் ஜரிகையுடன் கூடிய வெண்பட்டு வேட்டி, சட்டை, துண்டு அணிந்து வந்தது அவரைப் பற்றி தெரியாதவர்களுக்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம்.—பத்திரிக்கைகளில் பளபளக்கும் ஃபோட்டோக்கள்,அருமை மகள் கனிமொழியின் :”சூப்பர் “காமண்ட்—பக்கத்திலிருந்த கணேசனாருக்கு “நம்மூர் டிரஸ்” என்ற விளக்கம், நமக்கெதுவும் “”குத்தவும் இல்லை—குடையவும் இல்லை”

கலைஞர் குடும்பம் வெளியுலகுக்கு பகுத்தறிவாளர் குடும்பம்.  உள்ளே சராசரி இந்து குடும்பம். கோவிலுக்கு போவதும்-- பல கோவில்களில் மருமகள்கள் கட்டளை தாரர்களாக இருப்பதும்,-- கோவில்களுக்கு அன்னதான மண்டபங்கள் கட்டுவதும்,--சாய் பாபாவை வீட்டுக்கழைத்து தயாளு அம்மாள் அவர்காலில் விழுந்து ஆசிகள் வாங்குவதும்,-- பலபத்திரிக்கைகளில் வந்த செய்திதான்.

 தமிழகத்தின் ஒரு மூத்த அரசியல் தலைவர், பள்ளிப்படிபை தாண்டாமலே கலை, இலக்கியம், நாடகம், சினிமா, என பல துறைகளில்-- முத்திரை பதித்தவர்--ஆலமரம் போல பரந்து-- விரிந்து கிளை பரப்பி, இருக்கிற ஒரு பெரும் குடும்பத்தின் தலைவர்,-- இந்தவயதில், இந்த கெட்டப்பில், பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருந்தார். காணக்கண்கோடி வேண்டும் –எனபதுபோல் இருந்தது அந்தக்காட்சி.

நாம் எற்றுக்கொள்ளாவிட்டாலும், தமிழகத்தின் ஒருபகுதி மக்களை தன் திசையில் இழுத்துச் சென்ற அந்தப் பெரியவரின் இந்த உடையை அவரது “கொள்கை கூட்டமே “”விமரிசித்தாலும் நமக்கு இது புதுமையாய் தோன்ற வில்லை. இதுபோல பல்வேறு வகையான உடைகளை போட்டு அவரை அழகு பார்க்கவேண்டும் என்ற அவரது குடும்பத்தின் ஆசைகளை இப்போது செய்யாமல் பின் எப்போது செய்யமுடியும்.

கருப்பு –சிவப்புகரை துண்டிலிருந்து மஞ்சள் துண்டிற்கு அவர் மாறிய போது நாவலர் நெடுஞ்செழியன் “மஞ்சள் துண்டு மடாதிபதி “ என சொன்னதும், கையிலே இருந்த “கழக மோதிரத்தை கழற்றி விட்டு “ஜாதகப்படி கல்மோதிரம் “ போட்டதை பகுத்தறிவாளர்கள் சாடியதும் பற்றி கருத்து சொல்ல நாம் விரும்பவில்லை.

ஆட்சி அதிகார கட்டிலில் ஏறுவதற்குமுன் பலர் இரும்புக்கோட்டையாகத்தான் இருந்திருக்கிறார்கள். கொள்கைக்கோமான்களாக, லக்‌ஷிய புருஷர்களாக, கரைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர்களாக, என அடுக்கிகொண்டே போகலாம். ஆனால் அதிகாரம் என்னும் “பட்டணத்து பூதம்” இந்த கிராம தேவதைகளை ஒரே அடியில் வீழ்த்துவதும் நாம் கண்டுகொண்டிருக்கும் எதார்த்தம்.

பதவிகள் பெற்ற பிறகு ,புரோக்கர்களும், கைத்தடிகளும், ஜோதிடர்களும், இவர்களை சூழ்ந்துகொள்கிறார்கள்.எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலே இன்று வருகிறதே “பன்றிக்காய்ச்சல் “அதுபோல இவர்கள்.—மந்திரித்த கயிறை கட்டிக்கொள்ள சொல்வார்கள். கழக மோதிரத்தை மந்திரக்கல் மோதிரத்துக்கு மாற்றுவார்கள்.—இவர்தான் பெரிய ஜெம்மாலஜிஸ்ட் என்பார்கள்.—இவர்கொடுத்த கல்லால் எம்.எல்.ஏ—மந்திரியானதாக சொல்வார்கள். அவர் எதால் எம்.எல்.ஏ. ஆனார் என்பதை மறக்கடிக்க செய்வார்கள்.

இந்தக்கோவிலில் பாலாபிஷேகம் செய்தால் “எதிக்கட்சி தலைவன்” தூள்—தூளாவான் -என்பார்கள்.நேற்றுவரை நம்மை தெரியாதவன் இன்று நமக்காக “தங்கத்தேர் “ இழுத்தேன் என்பான். மிளகாய் வத்தலை போட்டால் –உள் எதிரி—வெளி எதிரி—எல்லாரும் கருகிப் போவான் என்பார்கள். இல்லாத எதிரிகள் வற்றல் மிளகாயால் இருக்கும் எதிரிகளாவார்கள்.உனக்கு நடக்கும் இந்த திசைக்கு பரிகாரமாக சோட்டானிக்கரைக்கு போ---மாசாணி அம்மனை கும்பிடு—பச்சை துண்டை வெளியில் தெரியுமாறு போடு—என சொல்லும் “”ஐடியாக்களை” இந்த “”பவர் சீட் “நம்பவைக்கும்.

பக்கத்தில் ஒட்டிஉறவாடும் இந்த தினசரி போன் ஒட்டுண்ணிகள் மெயின் ரோட்டிலிருக்கும் நம்மை சந்துபொந்துகளுக்கு பதவி இறக்கம் செய்வார்கள். ஏற்கனவே நம்மைக்காத்த நல்லவர்களிடமிருந்து நம்மை அன்னியமாக்குவார்கள். ””தள்ளி நின்றால்தான் தலைவன் -எட்டிப்போ—என நம்மை ஒட்டவிடாமல் புதிய கீதை உபதேசம் செய்வார்கள். பழய சோற்றுக்காரனுக்கு புதிய கீதை அமிருதமாக தெரியும். மெயின் கூட்டதை விட்டு இப்படி கண்ணைக்கட்டி தன் கூட்டத்துக்கு இழுத்துக்கொள்ளும் இந்த காக்காய் கூட்டம். இதிலே விழாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

உழைப்பு—உண்மை—தன்னம்பிக்கை—இவைகளை மீறி உலகில் உள்ள ஒரே விஷயம் சகுனித்தனம் மட்டுமே. அது தற்காலிக வெற்றி மட்டுமே தரலாம்.அதன் பின் சென்றால் நாம் இவ்வளவு நாள் உழைத்து சம்பாதித்த இடத்தை ஒரேநாளில் இழக்கவேண்டியிருக்கும்.

கலைஞருடைய கதை கடைசியில் இங்கேதான் வருகிறது. பகுத்தறிவெல்லாம் வெறும் மேடை பேச்சுக்குத்தான். உள்ளே இருக்கும் ஆசைகளின் வெளிப்பாடாக கலைஞர் வெண்பட்டு உடுத்தி இருந்தால் நாம் அதை பார்த்து பரவசப்படுகிறோம். ஆனால் ராஜராஜனின் கோயிலை மிதித்தால் ஆட்சிகட்டில் நம்மை மிதிக்கும் என்னும் மூடநம்பிக்கை அவர்மனதில் ஓடி, அதற்காகத்தான் இது பரிகாரம்---. வேறுவாசல் வருகை,-- மேல்குலப்பெண்டிரின் நாட்டியத்தை காணவே இந்த மேட்டுக்குடி பட்டுடை—என்பது இருக்குமானால், இவ்வளவு நாள் பிரச்சாரம் செய்த –பகுத்தறிவை—மூடநம்பிக்கை ஒழிப்பை,--- “”ஓதிய தலைவன் உடைத்தெரிந்தான் --- படித்த தொண்டன் மட்டுமே பாது காக்கிறான் “”—என்ற நிலை உருவாகும்.

இதுதான் பட்டுடை மஹாத்மியத்தின் ரகசியம்


--

1 comment:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அந்தக் கூட்டத்துக்கு இது எருமை மாட்டில் மழையே!
அவர்கள் சொல்வது யாவும் தொண்டருக்கே!