Pages

Tuesday, August 3, 2010

புதைக்கப்படும் புலனாய்வுத் துறை : உரத்த சிந்தனை: எஸ்.ஆர்.சேகர்

ஜூலை 4, 2010-தினமலர்

மத்திய புலனாய்வுத் துறை – சி.பி.ஐ., என்றாலே, ஒரு பெருமிதம், மிடுக்கு, கம்பீரம். இப்படித் தான் சிலகாலம் வரை, நம் அனைவர் மனதிலும் சி.பி.ஐ., நின்றது. இப்போது அது பழங்கதை. இன்று சி.பி.ஐ., என்பது பபூனாக, மத்தியில் ஆட்சி செலுத்தும் கட்சியின் கையாளாக, ஏவலாளாக… புரியும்படி சொன்னால், ஆளும் கட்சியின் அடியாளாக செயல்படும் அவலம் தான் இன்றைய நிஜம். அவ்வப்போதும், சமீபகாலமாகவும், குறிப்பாக ஐ.மு.கூ., ஆட்சி 2004 துவங்கியது முதல், சி.பி.ஐ., ஆளும் கட்சியின் ஏவலாளாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. சட்ட நெறிமுறைகள், தர்ம நெறிமுறைகளெல்லாம் தூக்கி எறியப்பட்டு, அரசின் நிர்பந்தத்தால், வழக்குகளை பாதியிலேயே வாபஸ் பெறுவது போன்ற, புதிய கலாசாரத்தை சி.பி.ஐ., பின்பற்றத் துவங்கி விட்டது.

ஐ.மு.கூ., அரசு பதவி ஏற்று ஓராண்டு காலம் வரை, சி.பி.ஐ., தொந்தரவு செய்யப்படவில்லை. 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம், பெட்ரோல் பங்க் ஒதுக்கீடு ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு முடியும் தறுவாயில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சதீஷ் சர்மா வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவிக்கப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்டிருந்த 15 வழக்குகளும், சி.பி.ஐ.,யால் வாபஸ் பெறப்பட்டன. இது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் என்பது மட்டுமல்ல, சி.பி.ஐ.,யை அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டது ஆளும்கட்சி என்பது வெட்டவெளிச்சமானது. சத்திஸ்கர் மாநில ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், பெரும்பான்மையை நிரூபிக்கவும், எம்.எல்.ஏ.,க் களை விலைக்கு வாங்கிய வழக்கில், முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி மீதிருந்த வழக்குகளை சி.பி.ஐ., கோர்ட்டில் திரும்பப் பெற்று, ஆளும் கட்சியின் ஏவலாள் எனும் அவப்பெயருக்குள்ளாயிற்று.

கடந்த 1984ல், சீக்கியர்களை கொன்று குவித்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஜெகதீஷ் டைட்லர், வலுவான ஆதாரங்களோடு, கிட்டத்தட்ட குற்றவாளி என அறிவிக்கப்படுவார் என்னும் சூழலில், அவர் மீதிருந்த அத்தனை வழக்குகளும் மார்ச் 2009ல் திரும்பப் பெறப்பட்டன. இதன் முக்கிய காரணம், அடுத்த இரண்டு வாரங்களில் அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது. போபர்ஸ் வழக்கில், பல்வேறு தடைகளை மீறி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் எனும் நிலை ஒரு சமயம் வந்தது. மே 2009ல் ஐ.மு.கூ., மீண்டும் ஆட்சியை பிடித்தவுடன், அதே ஆண்டு அக்டோபரில், தேடப்படும் குற்றவாளி பட்டியலிலிருந்து சோனியாவின் குடும்ப நண்பர், இத்தாலியின் ஒட்டவோ குட்ரோச்சியை சி.பி.ஐ., விடுவித்தது. அவரது லண்டன் வங்கியில் அதுவரை சி.பி.ஐ., முடக்கி வைத்திருந்த பிரச்னைக்குரிய 21 கோடி ரூபாய் பணம் முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது. விளைவு, ஒரே நாளில் அவர் பணத்தை எடுத்துக் கொண்டார். இப்படி சி.பி.ஐ., ஆளும்கட்சி பிரமுகர்களுக்கு கொத்தடிமையாக செயல்பட்டது அதிர்ச்சிக்குரிய சம்பவம்.

ஜூன் 22, 2008ல், சோனியா அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அரசு தோற்கடிக்கப்படும் எனும் சூழலில், முலாயம் சிங்குக்கு வலை வீசப்பட்டது. வலையாக மாறிய சி.பி.ஐ., அமர்சிங்கிடம் பேரம் படிந்தது. இதற்கு கைமாறாக, சமாஜ்வாடி எம்.பி.,க்களின் ஓட்டுக்களால், ஐ.மு.கூ., அரசு காப்பாற்றப்பட்டது. பிரதிபலனாக சி.பி.ஐ., டிச., 2008ல் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்ப்பு வழக்கிலிருந்து முலாயம் சிங்கை விடுவித்து வழக்குகளை வாபஸ் பெற்றது. மார்ச் 30, 2010ல், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் மீது, பாட்னா ஐகோர்ட் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டிய சி.பி.ஐ., அதை செய்யாமல் தவிர்த்தது. இந்த பேரத்தில், அரசுக்கு ஆதரவாக தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லாலு வெளிநடப்பு செய்தார். தாஜ் ஓட்டல் வழக்கு மற்றும் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில், உ.பி., முதல்வர் மாயாவதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய வேண்டிய சி.பி.ஐ., ஏப்., 23, 2010ல் அவகாசம் கேட்டது. அதற்கு விலையாக லோக்சபாவில் வெட்டுத்தீர்மானத்தில் அவரது கட்சி எம்.பி.,க்கள் 21 பேர் அரசுக்கு ஆதரவு ஓட்டளித்தனர். கொடுக்க வேண்டியதை கொடுத்து, சி.பி.ஐ., மூலம் பெற வேண்டியதை மன்மோகன் அரசு பெற்றது. இப்படி, தன் கட்சித் தலைவர்களை விடுவிக்கவும், தன்னுடைய ஆட்சியை காப்பாற்ற எதிர்க்கட்சிகளை மிரட்டி பணிய வைக்கவும் சி.பி.ஐ.,யை மத்திய அரசு தனது அடியாளாக பயன்படுத்தியது.

போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தொடுத்த வழக்கில் மனு ஐ.பி.சி., 304(2) பிரிவில் தண்டனை பெற்றுத்தர தாக்கல் செய்யப்பட்டது. சி.பி.ஐ.,யின் சாட்சியங்கள் வலுவாக இல்லாததால், பின்னாளில் வழக்கு ஐ.பி.சி., 304(எ) பிரிவுக்கு மாற்றப்பட்டு, வழக்கு நீர்த்துப் போனது. இடைக்காலத்தில் யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு எதிராக வலுவான சாட்சியங்கள் திரட்டப்படும். சி.பி.ஐ., அரசியல் காரணங்களுக்காக, “ரெவ்யு பெட்டிஷன்’ போடவில்லை. அவ்வாறு செய்திருந்தால், இன்று குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைத்திருக்கும். ஆட்சியாளர்களின் பிடியில் சி.பி.ஐ., இருந்ததால்தான் வழக்கின் முடிவு, பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகப் போனது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக, கையாளாக செயல்படத் தான் சி.பி.ஐ.,யை உருவாக்கியவர்கள் தொடங்கினரா? “ஸ்பெஷல் போலீஸ் எஸ்டாபிலிஸ்மென்ட்’ என்பது, 1941ல் இரண்டாம் உலகப் போரில், சப்ளை மற்றும் சர்வீசை கண்காணிக்க உருவாக்கப்பட்டது. 1962ல் அமைக்கப்பட்ட சந்தானம் கமிட்டி, இதன் செம்மைப்படுத்தப்பட்ட,”சென்ட்ரல் பியூரோ ஆப் இன்வெஸ்டிகேஷனை’ ஏற்படுத்தியது.

அமெரிக்காவிலுள்ள எப்.பி.ஐ., போல், சி.பி.ஐ., இருக்க வேண்டுமென்பது உருவாக்கியவர்களின் உள்ளக்கிடக்கை. இன்றும் கூட இன்டர்போலின் இந்தியாவின் அதிகாரப்பூர்வ அமைப்பு சி.பி.ஐ., மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்லிமென்ட் தீர்மானத்தின் அடிப்படையில், ஜூன் 1, 1963ம் ஆண்டு சி.பி.ஐ., நிறுவப்பட்டது. இதன் பெருமைகளைச் சொன்னால், இதன் இன்றைய சிறுமைகளைக் கண்டு நம் நெஞ்சு வெதும்பும். இத்தனை பெருமைகளை உடைய சி.பி.ஐ., பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டிலுள்ள மக்கள் குறைதீர்ப்பு மற்றும் தனிப்பயிற்சித்துறை அமைச்சரின் கீழ் செயல்படுகிறது. ஆகவே, அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் இந்த அமைச்சர் தான் சி.பி.ஐ.,யின் எஜமான். இப்படி மந்திரி, “பாஸ்’ ஆக இருந்தால், ஆளும் கட்சிக்கு சொல்லவா வேண்டும். சி.பி.ஐ.,யை தங்கள் எடுபிடியாக்கினர்.

பிரியதர்ஷினி மட்டூ கொலை வழக்கில், 22 வயது சட்டக்கல்லூரி மாணவர் சந்தோஷ் குமார் சிங் முதலில் விடுவிக்கப்பட்டார். “சி.பி.ஐ., சரியாக செயல்படவில்லை’ என்று நீதிபதி, சி.பி.ஐ.,க்கு குட்டு வைத்தார். குற்றவாளி ஐ.பி.எஸ்., அதிகாரியின் மகன் என்பதால், சி.பி.ஐ., சுணக்கம் காட்டியது. பிறகு மீண்டும் வழக்கை எடுத்து 2006ம் ஆண்டு, மரண தண்டனை பெற்றுத் தந்தது. கடந்த 1991ல், ஹவாலா வழக்கில் வினீத் நாராயணன் விடுவிக்கப்பட்டதை கண்டித்த சுப்ரீம் கோர்ட், “சி.பி.ஐ., – சி.வி.சி.,யின் மேற்பார்வையில் செயல்பட வேண்டும்’ எனக் கூறியது சி.பி.ஐ.,க்கு ஒரு நெருடல். இப்படி சொதப்பல், அவமானப்படுதல், அரசியல் தலையீட்டுக்கு அடி பணிதல் என, பலவேறு குறைகள் இருந்தாலும், கடந்த இரண்டாண்டில் சி.பி.ஐ., வழக்கில் வெற்றி பெற்ற சதவீதம் 62க்கு மேல். எந்த ஒரு அமைப்பையும், எவ்வளவு வலுவாக ஏற்படுத்தினாலும், அதை தவறாக பயன்படுத்தும் குழுக்கள், எல்லா இடத்திலும் இருக்கத் தான் செய்கின்றன. அதற்கான தடுப்பும், பாதுகாப்பும், அதன் கட்டமைப்பிலும், சட்டத் திட்டத்திலும் இருந்தாலும், மேலும் மேலும் அவ்வப்போது அதை வலுப்படுத்துவது காலத்தின் கட்டாயம்.

1 comment:

News of today said...

anna we want much clear about cbi as u told me over phone the ipc which is so weak that was filed against anderson in your blog it will help us to speak in public meeting as well as in tv debate dolphin sritharan