Pages

Tuesday, August 3, 2010

ஆஞ்சியோ-- அனுபவம்--








கவுளிபிரவுன் ரோட்டில் வந்துகொண்டிருக்கும் போது இரவு மணி 8 .௦௦.--இடதுகை வலிக்கிறமாதிரி இருந்தது. டாக்டர்.விஜயராகவன் கிளினிக்-- ஈ.சி.ஜி.-- மூடியிருக்கும் என்பதால், ஒரு ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் கிளினிக்கில் உள்ள-- ஈ.சி.ஜி.--யை தேடி கண்டுபிடித்து, படம் எடுத்தேன். நாமதான் பாதி டாக்டராச்சே.-- 9 .30 -- க்கு விஜியிடம் காண்பித்தபோது -""ஒண்ணுமில்லை"--நாளைக்கு காலை மீண்டும் ஒன்னு எடுத்து "ரீ-செக்"-- செய்வோம் என்றார்.

அடுத்த நாள் எடுத்த-- ஈ.சி.ஜி.--யும்" டவுட்" கொடுக்க- டாக்டர்.பாலாஜியிடம் போ, போன்பண்ணி சொல்லியிருக்கேன் --5 நிமிடத்தில் வந்துவிடலாம். என்றார்.
ராமகிருஷ்ணா ஆஸ்பத்திரியில், பாலாஜியிடம்- 12 - மணிக்கு போய்- 'எக்கோ"-- டி.எம்" -எல்லாம் எடுத்து முடித்து,- 3 .30 -,மணிக்குதான் கன்சல்டேஷன் முடிந்தது.
இங்கேயும் மீண்டும் "டவுட்". உடனே "ஆஞ்சியோ " எடு -- என்றார். அதுவரை சாப்பிட 500 ரூபாய்க்கு மருந்து எழுதி கொடுத்தார்.

ஒரே மூச்சில் எல்லா டெஸ்டும் முடிந்தது, என சந்தோஷப்பட முடியவில்லை. மீண்டும் ஒரு டெஸ்ட். அதுவும் "ஆஞ்சியோ" ...எதற்கும் ஒரு--"ரெண்டு லக்ஷம் கையில் வைத்திரு" என்றார் விஜி.

சனிக்கிழமை ஆஞ்சியோ.--வியாழனிலிருந்து ஒரே பட படப்பு. நான் ஒரு விஜிடேரியன்--டிரிங்க்ஸ் இல்லை--வீட்டில் நாலுபேர் குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு லிட்டர் எண்ணெய் கூட செலவாகாது--. டெய்லி வாக்கிங்--சுகர் அண்டர் கண்ட்ரோல். பின் ஏன் விஜி ரெண்டு லக்ஷம் தயாராய் வைத்திரு --என்றார். கொஞ்சம் குழப்பம்.

என்ன விஞ்ஞான பூர்வ விளக்கம் கொடுத்தாலும் மனம் ஏற்க மறுத்தது. பயம்தான் மேலோங்கி நின்றது. அடுத்தவருக்கு செய்யும் "கவுன்சலிங்" எல்லாம் எனக்கு வொர்க் அவுட் ஆகவில்லை. சனிக்கிழமையும் வந்தது.

காலை- 6 00 -.மணிக்கு வெறும் வயித்தில் ஆஸ்பத்ரிக்கு போய் வரிசையில் நின்று , பணத்தைக்கட்டி ,பாலாஜியை பார்த்தபோது மணி 8 .00 . பிளட் டெஸ்ட் செய்து 'கார்டியோ கதீடர்-- ஐ.சி.யு 'குள் நுழையும் போது மணி 9 .00

-- 15 பெட் இருந்த அந்த ஐ.சி.யு.வில்- 14 -பேர் எல்லா மெஷினும் -வயர்களும் மாட்டி- மானிட்டர் சத்தம் அதிர நர்ஸ் --டாக்டர் புடை சூழ ரொம்ப பிசியாக இருந்தனர். வெட்ட இருக்கும் ஆடு போல பேந்த-பேந்த முழித்து கொண்டு நான் மட்டுமே தனியாக...... பெட்டில்.

கல்லு மாதிரி இருக்கானே--இவனுக்கென்ன ஐ.சி.யு வில் வேலை--என எல்லாரும் என்னை கேட்பது போல பிரமை.. நல்ல வேளை கதவைத்திறந்து ஒரு தலை எட்டிப் பார்த்தது .அது டாக்டர் .விஜி.

அவருக்குப் பின்னால் முகத்தில் மிரட்சியுடன் என் மனைவி. ஏதோ இடம் தெரியாத--- மொழி தெரியாத-- பிராந்தியத்தில் மாட்டிகொண்ட மனுஷி மாதிரி இருந்தாள்.டாக்டர் . விஜி எனக்கு நம்பிக்கை கொடுக்கவும் "திணிக்கப்படும் ட்ரீட்மென்ட் களை" தவிர்ப்பதர்க்காகவும் வந்திருந்தார்.

அவர் கையில் இரண்டு காகித பண்டல்கள்.-100x 1000 - என எழுதியிருந்தது. அதை என் மனைவியிடம் கொடுத்தார். இதை பார்த்ததும் எனக்கு பட படப்பு மேலும் அதிகரித்தது. சரி-நிச்சயமாக ப்ளாக்தான்--ஆஞ்சியோ --பிளாஸ்ட் தான். என கவலை--கற்பனையில் சிறகடித்தது..

பாலாஜி உள்ளே வந்தார்.. ஆபரேஷன் தியேட்டருக்கு உண்டான பேஷண்டாக என்னை தயார் செய்து --அழைத்துபோய் --ஆஞ்சியோ --டேபிள் மீது படுக்கவைத்தனர். பாலாஜியும் விஜியும் "ரேடியேஷன் ரெசிஸ்ட்டண்ட்" கோட்டை மாட்டிக்கொண்டனர். தியேட்டரில் ஏற்கனவே ஒரு பெண் மயக்க டாக்டர் மற்றும் 5 ,6 --அசிஸ்ட்டண்ட்கள் இருந்தனர். என் வலது கையில் "சாவலான்" தடவப்பட்டு இடதுகை தலைக்குமேல் கொண்டுவரப்பட்டது. நெஞ்சுக்குமேல் ஆஞ்சியோ-- மெஷின் நின்றது.

லேசா --ஊசி போடுவோம்--அது மறக்கிறதுக்கு--என்ன சரியா- என்றார் பாலாஜி--நான் தடுத்தா நிறுத்தவா போகிறார் பர்மிஷன் கேட்க --இது ஒரு பார்மாலிட்டி என தெரியும். அடுத்து ஒரு ஊசி--கொஞ்சம் விர்ர்ருன்னு-- இருக்கும் என்றார். பத்துநிமிஷமாக மேலே மாட்டியிருந்த 3 கம்ப்யூடர் ஸ்கிரீனில் என் ஹார்ட் துடித்து கொண்டிருந்தது. பார்க்க பயந்து கண்ணை மூடிக்கொண்டேன்.

பூ--இவ்வளவுதானா? இப்போது கொஞ்சம் பயம் விலகி இருந்தது. டெஸ்ட் முடியப்போகிறது என பாலாஜி அறிவித்த ஒரு நிமிடத்திற்குள் கையில் கனமான பிளாஸ்டர் போடப்பட்டது. இரண்டு நர்ஸ்கள் கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு ஐ.சி.யு. வார்ட் பெட்டில் படுக்கவைத்தனர். நான் நல்லாதானே இருக்கேன்--ஏன்இந்த கை தாங்கல்?

தண்ணீர் நிறைய குடி--இன்ஜெக்ட் செய்த டை எல்லாம் வெளியேற வேண்டும் என்றார்கள். வலது கையை--அழுத்த--ஆட்ட --வேண்டாம் என்றனர். வெய்ன் பிரேக் ஆகி பிளட் ஊஸ் ஆக வாய்ப்பு உண்டாக்க வேண்டாம் என்றனர்.

பக்கத்துக்கு பெட்டில்-- 66 - வயது வெள்ளியங்கிரி--மூச்சு விட சிரமம்.- 3 --பிளாக் இருக்காம். ஆனால் அவருக்கு சொல்லலை. அவர் மகனிடம் மட்டும் சொன்னார்கள். எனக்கு என்னவென்று சொல்லவில்லை. ஒருவேளை நானும் வெள்ளியங்கிரி கேஸ் தானோ? ஏன் மனைவியிடம் சொல்லியிருப்பார்களோ? மனது ஆஞ்சியோவுக்கு பின்னும் படபடத்தது .


ஆஞ்சியோ முடிந்தவுடன் விஜி --- என் மனைவி காதில் எதோ கிசுகிசுத்து விட்டு வேகமாக விடை பெற்றுக்கொண்டிருந்தார். இதுவும் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.
"நல்ல டாக்டர்கள் பேஷண்டை பயமுறுத்துவதில்லை" . உறவினர்களிடமே விஷயத்தை சொல்வார்கள். எங்கள் விஜி அப்படிப்பட்டவர்.
ஐ.சி யு. அமர்க்கள பட்டுகொண்டிருந்தது.. முழுவதும் பெண்கள் ராஜ்ஜியம். நிர்வாகத்தில் குளறுபடியில்லை. சின்சியாரிட்டி அதிகம் இருந்தது.-- நேர்த்தி --இன்னும் கற்றுக்கொள்ள வேண்டி இருந்தது.
மணி 3 ஆச்சு--4 ஆச்சு --பாலாஜியைக் காணும். தியேட்டரில் இருப்பதாக சொன்னார்கள். 5 மணிக்கு வந்தார். --சார் உங்களுக்கு ஒண்ணும் இல்லை. இந்த ரெண்டு மாத்திரையும் ஒரு மாசம் சாபிடுங்கள் . ஆயில்--பாட் (கொழுப்பு ) வேண்டாம்.-- சொல்லிவிட்டு விர்ர்ரென பறந்தார். --

ஒரு நொடி பயங்கர சந்தோசம் .ரெண்டு லக்ஷத்தோடு --ஆஸ்பத்திரி வந்துநேரடி கவனம் கொடுத்த விஜிக்கு மனம் நன்றி சொன்னது. என்னை "அறுக்காமல்" காப்பாற்றிய " அம்மா மதுரகாளியை "மனம் வணங்கியது .--இவ்வளவு டென்ஷனையும் தாங்கிக்கொண்டு வெளியில் தனியாக எட்டுமணி நேரம் இருந்த மனைவிக்கு மனம் நன்றி சொன்னது. வெளிப்படையாக சொல்லியிருக்கலாம்.அது பழக்கமில்லையே.

ஐ.சி.யு. வை விட்டு வெளியே வந்தோம். வாட்ச் மேன் --உமா --உமா என்று கூப்பிட்டு கொண்டிருந்தான்.--மூன்று பேர் --அதில் இரண்டு பெண்கள்-- அவர்கள் உமாவின் உறவினர்கள் போல. பதட்டத்துடன் வந்தார்கள். டாக்டர் அந்த பையனை மட்டும் உள்ளே வர சொன்னார். வெளியே வந்த பையனின் முகத்தில் பயங்கர சோக ரேகை--ஒரு பெண் அக்கா போல. என்ன என கேட்கும் முன் எதோ நடந்து விட்டதை உணர்ந்து ஹோ-வென அழுதார். இன்னொரு பெண் மீது தலை புதைத்து கதறினார்.

ஒன்று புரிந்தது. உடலை வளர்த்தேன்--உயிர் வளர்த்தேனே--நமக்கு நோய் என்றால் நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு எவ்வளவு கஷ்டம்--நாம் படும் கஷ்டம் வேறு. ஆரோக்கியம் பாதுகாக்க வேண்டும். வந்தபின் அழுவதில் அர்த்தமில்லை.-எல்லாவற்றுக்கும் மருந்து உள்ளதுபோல் நோய்களும் பெருகிவிட்டது .விழிப்புணர்வோடு இல்லாவிட்டால் உமாவைபோல அண்ணன் --தம்பி--அப்பா-அம்மா-மனைவி -மக்களை கவலைக்குள்ளாக்க நேரிடும். இது நியாமா--சரியா என நினைத்தால் நோயிலிருந்து விலகி இருக்கலாம்.

No comments: