Pages

Tuesday, August 3, 2010

கருத்துக்களம்
சமூக ஒழுக்கம்

First Published : 14 Jun 2010 02:57:04 AM IST

தினமணி-----எஸ்.ஆர்.சேகர்.

லைலா புயலால் நல்ல மழை. காலனியில் முழங்கால் மட்டும் வெள்ளம். சாக்கடை கால்வாய் மூலம் நீர் வடிந்த பாடில்லை. மாநகராட்சி அதிகாரிகளுக்கு போன்மேல் போன் போட்டு எந்தப் பலனும் இல்லை. நானே தீர்மானித்து கம்பால் நீர் அடைப்புகளைச் சரி செய்து வந்தேன். ஓரிடத்தில் பெரும் அடைப்பு- அங்கு கையில் கிடைத்தது இரண்டு லிட்டர் பெட் பாட்டில். இந்த அடைப்புக்கு யார் காரணம் பாட்டிலை போட்டவரா? அல்லது மழைக்கு முன்னே வடிகாலில் கிடந்ததைப் பார்த்தும் எடுத்துப் போடாதவரா?

நம் வீட்டு பாத் ரூம் என்றால் உபயோகித்த பின் தண்ணீரை கொட்டி சுத்தம் செய்கிறோம். அதுவே பொதுக் கழிப்பிடம், கல்யாண மண்டபம், அரசு அலுவலக கழிப்பிடமென்றால் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஒரு குவளை தண்ணீர் கூட விடுவதில்லை ஏனிந்த மனப்பான்மை- எப்படி நம்மிடம் வந்தது?.

÷யார் வீடு கட்டினாலும் மணல், ஜல்லி, செங்கல், கம்பிகளுக்கு ஸ்டோர் ரூம் நடுத்தெருதான்- போக்குவரத்துக்கு இடையூறு, சைக்கிள், ஸ்கூட்டரில் போவார் சறுக்கி விழும் அபாயம் இதைப்பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை. கம்பிகளை அடித்து அடித்து சாலைகளை நொறுக்கும் பண்பாடு- ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி வீட்டு சாக்கடை நீரை வெளியேற்ற சாலையைத் தோண்டிப்போடும் அவலம்.

பொதுச் சொத்து பொதுவான இடம் என்றால் பொறுப்பற்ற நம் பழக்க, வழக்கங்கள் கட்டுப்பாடற்ற நம் செயல்முறை, ஆண்டாண்டு காலமாக தொடர்கிறதே. ஆட்சிகள் மாறினாலும் இக் காட்சிகள் என்றும் மாறுவதில்லையே.

காரில் போவோர் பழத்தோலை வெளியே வீசுவதும்-நம் வீட்டுக் குப்பையை எதிர் வீட்டு வாசலில் போடுவதும் டிராபிக் சிக்னலில் சிவப்பு நிறம் விழுந்தவுடன்- போலீஸ் இல்லையென்றால் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு விர்ரென பறப்பதும் இது என்ன பழக்கம்.

சட்டங்கள் நமக்காக, விதிகள் வகுத்தது நமக்காக, இந்த எண்ணம் ஏன் நமக்கு இல்லை? வீட்டுக்குள் இருக்கும் கட்டுப்பாடு வீதியிலும் இல்லாதது ஏன்?

தனி மனித ஒழுக்கத்தை பொது இடத்திலும் கடைப்பிடிக்காதது ஏன்? சமூக ஒழுக்கம் சரிந்து போனது ஏன்?

ரயில்களில் மூன்றடுக்கு தூங்கும் வசதி பெட்டியில் இரவு ஒரே துர்நாற்றம் மூக்கை பொத்திக் கொண்டு அனைவரும் படுத்திருந்தனர். டி-டி உள்பட யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. உள்ளே போனவர்கள் தண்ணீர் ஊற்றி இருக்க வேண்டும். அல்லது அடுத்து போனவராவது அதைச் செய்திருக்க வேண்டும். யாரும் செய்யாததால் அதை நான் செய்தேன். எவ்வளவு நாளைக்கு- எவ்வளவு இடத்தில்- எவ்வளவு முறை- அதை நாம் செய்ய முடியும். இது தீர்வில்லையே.

÷பல்லாவரம் மேம்பாலத்தில் நடந்த விபத்து போல் பல இடங்களில் விபத்து நடந்த வண்ணம் உள்ளன. பல்லாவரம் பாலத்தில் இரு பிரிவுகளை இணைக்காமல் அப்படியே விட்டிருந்ததனர். பாலத்தை மூடாமல் திறந்து வைத்திருந்ததால் வேகமாக வந்த கார் ரயில் தண்டவாளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதே போல் பல விபத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. யாரைத் தண்டிப்பது- அரசையா? பொதுப்பணித் துறையையா? மாநகராட்சியையா யாரைத் திருத்துவது? அரசு அதிகாரிகளையா?

÷தனிமனித ஒழுக்கம் அரசின் தலையீடு இல்லாததால் இன்னும் நன்றாக உள்ளது. ஆனால் சமூக ஒழுக்கம் அரசின் பிடியால் சின்னா பின்னமாகி கிடக்கிறது. அமெரிக்காவில் தனிமனித சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடில்லை. தனிமனித ஒழுக்கத்துக்கும் உத்தரவாதமும் இல்லை. அங்கு தனிமனித ஒழுக்கத்தில் பின்தங்கியவர்கள் கூட சமூக ஒழுக்கத்தில் சிறந்தவராக இருக்கிறார்கள். இங்கு அதுவே தலை கீழாக மாறி இருக்கிறது. தனிமனித ஒழுக்கத்தில் சிறந்து விளங்குகிறவர் கூட இங்கு சமூக ஒழுக்கத்தில் தேறாதவராக இருக்கிறார்.

÷நம் நாட்டில் சமூக ஒழுக்கத்தை சிதைத்ததில் பெரும் பங்கு பிரிட்டிஷ் ஆட்சிக்கே உண்டு. குறிப்பாக "மெகாலே கல்வி' முறையின் சாபக்கேடு- நிறந்தாலும் தோலாலும் இந்தியன்- மனதாலும் செயலாலும் கொத்தடிமை என்பது பலித்ததனால் வந்த ஒழுக்கக் குறைபாடு. பிரிட்டிஷ்காரர்கள் வருவதற்கு முன் சாலை சீரமைப்பு, நீர்நிலைகள், தூர்வாரல், கல்விக்கூடப் பராமரிப்பு- என அனைத்தும் ஊர் மக்களிடம் தான் இருந்தது. இவற்றை பேணிப் பாதுகாக்கும் பொறுப்பும் மக்கள் குழுமத்திடம் இருந்தது. இதை ஆராய்ச்சிக் குறிப்பொன்று தெரிவிக்கிறது.

÷1830 முதல் 1834 வரை இந்தியாவில் இருந்த லார்ட் மெக்காலே ஆங்கில ஆதிக்கத்தை இந்தியாவில் வலுப்படுத்த எண்ணினார். இந்திய மொழிகளின் ஆதிக்கமே இந்திய கலாசாரத்தை வலுப்படுத்துகிறது என்று நினைத்தார். எனவே உள்ளூர் மொழிகளின் ஆதிக்கத்தை ஒழிக்க ஆங்கில மொழியை போதிப்பதே ஒரே வழி என முடிவு செய்தார். அதன் விளைவே- "மெக்காலே கல்வித் திட்டம்'

÷இந்தியரை சுயசார்புக்கு இட்டு செல்வது அவர்களது கலாசாரம்தான். கலாசாரத்தை உள்ளூர் மொழிகள் காத்து நிற்கின்றன. ஆங்கில போதனையை நாம் புகுத்துவதே இதை உடைக்க ஒரே வழி- ஆங்கில போதனையே இந்தியனை நிறத்தால் இந்தியனாக- சிந்தனையால், செயலால் பிரிட்டிஷ் அடிமைகளாக வைத்திருக்க வல்லது என்று அவர் எழுதிய புத்தகத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதன் தாக்கம் இன்றும் கண்கூடாக பார்க்கிறோம். வீடு நமது- ரோடு நமது அல்ல என்ற மனோபாவம் தொடர்கிறது.

÷இந்தத் தாக்குதல் நூற்றாண்டு காலமாக தொடர்வதால் நம் பழக்க வழக்கங்களிலும் சீர்குலைவு தொடர்கிறது. சமூக ஒழுக்கம் சட்டத்தால் சீர்படாது மனப்பான்மையில் மாற்றம் வேண்டும் பள்ளியில் தொடங்கி கல்லூரிகள் வரை கட்டாய போதனைகள் வேண்டும். மக்களுக்கு நல்ல பயிற்சிகளை அளிக்க வேண்டும். தனிமனித பங்கேற்பு, பங்களிப்புதான் சமூக ஒழுக்கத்துக்கான உரம். அதனால் அரசின் பிடியிலிருந்து பொது விஷயங்களை விடுவிக்க வேண்டும்

No comments: